Primary tabs
-
2.5 நாடக உரைநடை
நாடகத்தில் இடம்பெறும் பாத்திர உரையாடல்கள், இடையிடையே நாடக ஆசிரியர் தரும் மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை நாடக உரைநடை (Dramatic prose) எனலாம். நாடக உரைநடை இயல்பு நவிற்சிப் பாங்கு உடையதாய் இருக்கும். பேச்சு வழக்கை ஒட்டியே அமையும்.
நாடகம் என்பது ஆடலுடன் பாடலும் கலந்த ஒன்றாகும். தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்தே நாடகக் கலை இருந்து வந்திருக்கிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள முதல் உரைநடை நாடகம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதாகும். காசிவிசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் முதலில் வெளிவந்த உரைநடை நாடகமாகும். உரைநடை நாடகங்களைச் சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள் எனப் பல வகையாகப் பிரிக்கலாம். உரைநடை நாடகத்தின் தந்தை எனப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரைச் சொல்லலாம். செய்யுள் வடிவிலமைந்த நாடகத்தை முழுமையாக உரைநடையில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். ஏறத்தாழ நூறு நாடகங்களுக்கு மேல் உரைநடையில் எழுதி, சிலவற்றில் நடிக்கவும் செய்தவர். நாடகங்களில் துன்பவியல் முடிவு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரேயாவர்.
சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், சுந்தரம் பிள்ளை ஆகிய நால்வரையும் புதுமுறை அமைப்புத் தமிழ்நாடகத்தின் முன்னோடிகளாகக் கருதலாம்.
நால்வருடைய நடையும் தனித்தனிச் சிறப்புடையதாகக் காணப்படுகிறது. கற்றோர் நடையில் சம்பந்த முதலியாரும், பாமரர்நடையில் சங்கரதாஸ் சுவாமிகளும், பண்டிதர் நடையில் பரிதிமாற்கலைஞரும் நாடகங்களை எழுதியுள்ளனர். கவிதை நடையில் சுந்தரம்பிள்ளையும் நாடகத்தை எழுதியுள்ளார். இவர்கள் தமிழ்நாடகவுலகைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் பல்வகைப்பொலிவுகளுடன் புதுமையுறச் செய்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்குத் தொண்டாற்றியவர் இவர். நாடக சபை ஒன்று ஏற்படுத்தித் தமிழக முழுவதும் நாடகங்களை நடத்தினார். அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, கோவலன் சரித்திரம், சிந்தாமணி, சதி அனுசூயா, பிரகலாதன், சீமந்தினி, சிறுத்தொண்டன், வள்ளித்திருமணம், சத்தியவான் சாவித்திரி, சதி சுலோசனா, மிருச்சகடிகா, ரோமியோ ஜூலியட் முதலியன அவர் படைத்த முக்கிய நாடகங்கள் ஆகும். இவற்றுள் பல புராண நாடகங்கள், சில மொழிபெயர்ப்பு நாடகங்கள். அவர் கால நாடகங்கள் செய்யுளும் உரைநடையும் கலந்து எழுதப்பட்டனவாகும். உரையாடல் பகுதிகள் பேச்சுத் தமிழில் அமைந்திருக்கும். சில இடங்களில் உரைநடைப் பகுதிகள் நீண்ட வாக்கியங்களால் அமைந்திருக்கும். அக்காலத் தமிழைப் போன்று இவரது நடையும் வடமொழிக் கலப்பு மிகுந்ததாகக் காணப்படுகின்றது.
இவர் அரை நூற்றாண்டுக்காலம் தமது வாழ்வை நாடகத்துறைக்கே அர்ப்பணித்தவர். நாடகத் தொழிலுக்கு இருந்து வந்த இழிநிலையை மாற்றியமைத்தவர். 1891ஆம் ஆண்டு சென்னையில் சுகுண விலாசசபா என்ற நாடக அமைப்பை ஏற்படுத்தினார். அவரே எழுதிமுதன்முதலில் நடித்த நாடகம் புஷ்பவல்லி என்ற சமூக நாடகமாகும்.தொண்ணூறு நாடகங்களை எழுதியுள்ளார். தமிழ் நாடக உலகிற்கு இவரைப்போல் தொண்டு செய்தவர் எவருமிலர். இவரை நாடகத்தந்தை எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமாகும். ரத்னாவளி, மனோகரா, கள்வர் தலைவன், இரண்டு நண்பர்கள், வேதாள உலகம் இவரது படைப்புத் திறனைக் காட்டும் நாடகங்களாகும். சபாபதி நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த படைப்பாகும். ஆங்கில நாடகங்களையும் வடமொழி நாடகங்களையும் மொழிபெயர்த்தார். நாடகத் துறையைப் பற்றியே நாடகத் தமிழ், நாடக மேடை நினைவுகள், நாடகக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்ற நூல்களையும் படைத்தார்.
மனோகரா நாடகத்தின் ஒரு பகுதி :
விஜயா
:(சிரிப்புடன்) இல்லை, ‘பிராண நாதா வாரும்.’மனோஹரன்
:எங்கே வருவது?விஜயா
:அதோ பாரும், ஆங்காங்குப் பெண்கள் தம் காதலருடன் நீர் நிரம்பிய தடாகங்களிலிறங்கி ஒருவர் மீதொருவர் தண்ணீர் வாரி இறைத்து விளையாடியும் நிலவை வியந்து புஷ்பம் கமழ சோலைகளிலுலாவியும் புஷ்பச் செண்டுகளால் ஒருவரையொருவர் அடித்தும் புஷ்ப மாலைகளால் ஒருவரையொருவர் கட்டியிழுத்தும், மகரந்தம் தூவியும், மல்லிகை மலர்களைச் சூடியும், ஒருவர் கண்ணை ஒருவர் பொத்தியும் இன்னும் இப்படி பற்பல விதமாகக் காலங்கழிக்கிறார்களே, நாமும் போய் விளையாடுவோம்.மனோஹரன்
:கண்ணே, என் மனம் ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது. இப்பொழுது வினோதத்தின் மீது செல்லவில்லை.விஜயா
:உம் ! உம் ! நான் எப்பொழுது அழைத்தாலும் இப்படித்தானே ! உம் ! உம் !மனோகரன் நாடகத்தில் உரைநடை இவ்வாறு அமைந்துள்ளது.
தூங்கிக் கிடந்த தமிழ்நாடக அரங்கை விழிப்புறச் செய்து உலகநாடக வானில் ஒளியோடு விளங்க வழிகண்ட பெருமை சம்பந்தமுதலியாரையே சாரும். சம்பந்த முதலியார் காலத்திலிருந்து தமிழ்நாடக மேடையானது ஏற்றத்தாழ்வு அகன்ற நிலையில் அனைவருக்கும் இன்பம் அளிக்கும் கலைக்கூடமாகவும் அறிவு புகட்டும் கலாசாலையாகவும் சமூகத்தைச் சீர்திருத்தும் நல்வழி மன்றமாகவும் விளங்கியது. இவரது நாடகத் தொண்டைப் பாராட்டி மத்திய அரசுபத்ம பூஷண் பட்டமளித்துச் சிறப்பித்தது. சங்கரதாஸ் சுவாமிகள்பழைய மரபையொட்டிப் பாடலும், உரைநடையும் கலந்து எழுதினார். சம்பந்த முதலியார் மேலைநாட்டு முறையைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களை இயற்றினார். சம்பந்த முதலியார் நாடக நடை கற்றோர்நடையாக இருப்பினும் எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது. எளிய வாக்கியங்களைக் கையாண்டு உரைநடையில் எழுதியுள்ளார்.
பரிதிமாற் கலைஞர் என்று புனைபெயர் பூண்ட சூரிய நாராயணசாஸ்திரியார் நாடக இலக்கணம் குறித்து நாடகவியல் எனும் நூலையும் சில நாடகங்களையும் இயற்றினார். ஆனால், இவை நடிப்பதற்குரிய நாடகங்கள் அல்ல.
இவருடைய நாடகங்கள் அருஞ்சொற்கள் மிகுந்த தமிழ் நடையில் அமைந்துள்ளன. உரைநடை, பாட்டுக் கலந்துள்ள உரையாடல்நடையில் எழுதப்பட்டுள்ளன. மொழிநடை சற்றுக் கடினமாக இருப்பதனால் கற்றவர்களே எளிதில் பரிதிமாற் கலைஞரின்நாடகங்களை படித்துப் புரிந்து கொள்ள முடியும். இவற்றின் நடைசற்றுக் கடினமாக இருப்பதுடன் வடமொழிச் சொல் கலப்பும்அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பாணபுரத்து வீரன் என்ற தேசிய நாடகம் ஒன்றை எழுதியுள்ளார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துடன் நமது நாடு நடத்திய போராட்டத்தை நிழற்படம் போல் காட்டிய நாடகமாகும். நல்ல தமிழ் நடையில் தேசப்பற்றை வளர்க்கும் விதத்தில் அமைந்த நாடகமாகும்.
தமிழில் அறிஞர் அண்ணாவின் திறமை பாயாத துறைகளில்லை என்றுரைக்கும் வண்ணம் இலக்கியத்தின் பற்பல துறைகளிலும் படைப்புக்களைப் படைத்துள்ளார். சமூகச் சீர்திருத்தத்தோடு அரசியலையும் இணைத்துப் புதியதோர் உலகம் செய்வோம், கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்ற பாவேந்தரின் பாடலுக்குச் செயல் வடிவங்கள்தான் அறிஞர் அண்ணாவின் நாடகங்கள். வேலைக்காரி, ஓர் இரவு, கண்ணீர்த்துளி, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி முதலான நாடகங்கள் சிறந்த நோக்குடன் இயற்றப்பட்டவை. அண்ணாவின் நாடகங்கள் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக் குரலாகவும் புதிய எண்ணத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுவனவாகவும் உள்ளன. ‘நாடக அரங்குகள் பாமர மக்களின் பல்கலைக்கழகம்’ என்ற கவிக்குயில் சரோஜினிதேவியின் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, நாடகங்களை எழுதிப் பாமர மக்களிடையே உலவச் செய்தவர். அண்ணாவால் நாடகத்துறை மறுமலர்ச்சி பெற்றதெனின் மிகையாகாது.
பழந்தமிழ்ச் சொற்களைக் கையாண்டு, உரைநடைக்குப் புத்துயிரூட்டினார். புதிய சொல்லாக்கங்களை அமைத்தார். அண்ணாவின் மேடைப்பேச்சு, தம்பிக்குக் கடிதம் போன்றவைகளெல்லாம் பெரும்பாலும் பேச்சு மொழியிலே அமைந்திருந்தன. அண்ணாவின் நடையில் கிப்பனுடைய ஆங்கில மொழித்தாக்கமும் இங்கர்ஸாலின் தாக்கமும் காணலாம். அவர்களது நடையில் ‘பேலன்ஸ் ஸ்ட்ரக்சர்’ அருமையாகக் கையாளப்பட்டுள்ளது. அதை அண்ணா தமிழில் கையாள ஆரம்பித்த போது தமிழுக்கு ஒரு புதிய நடை கிடைத்தது என்பர். அண்ணாவின் மொழிநடையில் புலவர் தமிழின் செல்வாக்கும், பேச்சுத் தமிழின் செல்வாக்கும் அவர் சார்ந்த இயக்கத்தில் அவரின் தனி ஆற்றலால் உருவாகிய புதிய கூறுகளும் அமைந்துள்ளன என, அண்ணாவின் மொழிநடையை ஆராய்ந்த பேராசிரியர் ம.செ.ரபிசிங் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. எதுகை, மோனை, அடுக்குமொழி, உவமை, உருவகம், ஓசை நயம், பழமொழி, மேற்கோள் போன்றவற்றைத் தமது நடையில் பயன்படுத்தி நடையை வளம்பெறச் செய்தார் எனக்கூறலாம்.
காதல் ஜோதி நாடகத்திலிருந்து ஒரு பகுதி.
“விழாத்தலைவர் : மணமக்களே ! பெரியோர்களே ! நண்பர்களே ! இந்தத் திருமண விழாவுக்கு என்னைத் தலைவனாக இருக்கும்படி அழைத்தார்கள். மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன். . . கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையான காட்சி இது. கலப்புத் திருமணம். விதவைக்கு மறுமணம். காலப்போக்கை உணர்ந்து அறிவுக்குப் பொருத்தமான முறையில் நடத்தப்பட்ட காதல் மணம். அம்மி மிதித்து அரசாணைக்கால் வைத்து அக்னி சாட்சியாக நடத்தப்பட்டது தோழியர் சுகுணாவின் திருமணம்.”
இவ்வாறு அறிஞர் அண்ணாவின் நடை, தமிழ் உரைநடைவரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் எழுத்து நடையிலும்பேச்சு நடையிலும் அண்ணா சகாப்தம் என்று அழைக்கப்படும்அளவுக்கு ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார்.
அறிஞர் அண்ணா நாடகங்களில் கையாண்ட உரைநடைபுதுமையானது. சிந்தனையைக் கிளறுவது. நாடகம் எழுதுவதற்குப்பழகு தமிழைக் கையாண்டார். பழகு தமிழைப் பயன்படுத்திப்பைந்தமிழுக்கு உயர்வையும் சிறப்பையும் கூட்டினார். சுருக்கமாகக்கூறின் தமிழுக்கு அவர் ஒரு புது நடை தந்தார். அண்ணாவின் எழுத்தால் தமிழ் உரைநடை புதிய உயிரோட்டம் பெற்று விளங்குகிறது எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I