தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-4.2 பதிப்புரை நுட்பம்

  • 4.2 பதிப்பு நுட்பம்

    உ.வே.சா. அவர்களின் பதிப்பு நுட்பம் குறிப்பிடத்தக்கது. அவருடைய பதிப்புகளின் முகவுரை ஆய்வுரையாகத் திகழும்; குறிப்புரைகள் மிகவும் பொருத்தமானவை; அவர் தரும் உவமை விளக்கங்களும் புராண விளக்கங்களும் பயனுள்ளவை; இடப்பெயர் மாற்றங்கள் குறித்த செய்திகளும் குறிப்பிடத்தக்கன. இவற்றில் வெளிப்பட்ட அவரது உரைநடை சிறப்புமிக்கது.

    4.2.1 முகவுரை

    அவர் பதிப்பித்த சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், உலாக்கள், கோவைகள், தூதுகள், இலக்கணங்கள் போன்ற பலவகை நூல்களுக்கு அவர் எழுதிய முகவுரைகளின் பொதுவியல்புகளும், சிறப்புச் செய்திகளும் குறிப்பிடத்தக்கன.

    முகவுரை, நூலினை அறிந்து கொள்ள உதவுகின்றது. நூலின் இயல்புக்கு ஏற்ப முகவுரையின் போக்கும் மாறுகின்றது. இலக்கிய நுழைவாயிலாக அமைந்திருக்கும் முகவுரைகள் காலந்தோறும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடைந்து வந்திருக்கின்றன. நூற்பாயிரங்கள் முகவுரைகளின் பழைய வடிவங்கள் எனலாம். பதிப்பாசிரியர்கள் எல்லாரும் தாம் பதிப்பித்த நூல்கள் அனைத்திற்கும் முகவுரை எழுதவில்லை. யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் தாம் பதிப்பித்த நூல்களில் பெரும்பாலானவற்றிற்கு முகவுரை எழுதவில்லை. நூலுக்கு முகவுரை என்பது வீட்டுக்கு முன்வாயிலைப் போல முக்கியம் வாய்ந்தது. நூலின் நோக்கத்தைத் திறந்து காட்டும் திறவுகோலாகவும், ஆசிரியரின் இலக்கியப்பயணத்தைக் காட்டும் அருங்கருவியாகவும் முகவுரைகள் அமைந்துள்ளன.

    உ.வே.சா. தாம் பதிப்பித்த எல்லா நூல்களின் முகவுரைகளிலும் அவற்றைப்பற்றிய பதிப்புச் செய்திகளை விரிவாகக் குறித்தார். குறுந்தொகை முகவுரையில் திருநாவுக்கரசு நாயனாரின் ‘மின்காட்டும்’ எனும் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் அப்பர், இறைவன் தருமிக்குக் ‘கனகக்கிழி’ அளித்த செய்தியைக் குறித்துள்ளார். ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி’ என்னும் பாடற்கருத்தைக் கொண்ட புராணச்செய்தி, அப்பாடலில் இடம் பெற்றுள்ளதால் உ.வே.சா. இதனை இணைத்தார்.

    4.2.2 குறிப்புரை

    உ.வே.சா. தாம் பதிப்பித்த நூற்களனைத்திற்கும் குறிப்புரை வரைந்துள்ளார். இக்குறிப்புரைகள் அவரைச் சிறந்த பதிப்பாசிரியராக உலகிற்கு அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்துள்ளன. இக்குறிப்புரைகள் அவரது பன்னூற் புலமையையும், நினைவாற்றலையும் சிறந்த ஆய்வுத் திறனையும் விளக்கி நிற்கின்றன. மூலநூலில் காணப்படும் உவமைகள். மரபுச் செய்திகள், புராணக்கதைகள். வரலாற்றுக் குறிப்புகள். ஆகியவற்றின் விளக்கங்களும் இக்குறிப்புரையில் இடம் பெற்றுள்ளன. மூலத்தின் கீழே அடிக்குறிப்பாக அமைந்த பகுதியே இங்குக் குறிப்புரை என்று சுட்டப்பெறுகிறது.

    4.2.3 உவமை விளக்கம்

    உ.வே.சா. சில இடங்களில் உவமைகள் கையாளப் பெறுதற்குக்காரணம் என்ன என்றும், அவை எவ்வாறு பொருந்துமென்றும் ஆராய்கின்றார். ‘நீலமணிமிடற்றொருவன் போல’ என்ற தொடருக்கு அவர் தரும் விளக்கத்தைக் காணலாம். ‘நீலமணிமிடற்றொருவன் என்ற உவமைக்குச் சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டுமென்பதாம் என்று பழைய உரைகாரர் விளக்கங் கூறியுள்ளார். உ.வே.சா. தம்குறிப்புரையில் “தன்னுடைய ஆக்கங் கருதாமல் விடத்தையுண்டு பல்லுயிர்களைக் காத்தருளிய புண்ணியனாதலின், நீலமணிமிடற்றொருவனை உவமை கூறினார்” என்று உவமைக்குக் காரணத்தை விளக்குகிறார். இவ்வாறு உவமைகளை விளக்கியும், ஒத்தவேற்றிலக்கிய அடிகளைத் தந்தும், புறநானூற்றிலேயே மீண்டும் மீண்டும் கையாளப் பெறும் உவமைகளை எடுத்துக் காட்டியும் கற்போர் மூலத்தை நன்குணருமாறும் உ.வே.சா. தம் குறிப்புரையை அமைத்துள்ளார்.

    4.2.4 புராண விளக்கம்

    புராணக் கதைகளை அல்லது நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக விளக்கிய பின்னர், அக்கதைகள் விளங்குமாறு ஒப்புமையாக அமைந்த வேற்றிலக்கியச் செய்திகளையும் தருகிறார்.

    ‘முந்நீர் விழவின் நெடியோன்’ என்ற புறநானூற்றுப் பாடலடிக்குக்குறிப்புரை எழுதிய உ.வே.சா., ‘முன்னொரு காலத்தில் மதுரையை அழித்தற்கு வந்த கடலை, உக்கிரகுமார பாண்டியனென்பவன் ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் அருளிய வேலையெறிந்து வற்றச்செய்து அக்கடல் தன்னுடைய காலின் வடிம்பை யலம்பும்படி உயர்ந்து நின்றமையால் அவனுக்குக் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனென்பது பெயராயிற்று. இதனைத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் படலம் 21இல் 6ஆம் விருத்தம் முதலியவற்றால் உணர்க' என்று எழுதி வில்லிபாரதம், மதுரைக்காஞ்சி போன்ற பல இலக்கியங்களினின்றும் ஒப்புமைப் பகுதிகளை எடுத்துக் காட்டுகிறார்.

    4.2.5 இடப்பெயர் சுட்டல்

    உறந்தை (புறம் 69:12) என்பதன் குறிப்புரையில் புறநா. 67:8-9; பட்டினப்.285 என்று அவ்வூர்ப்பெயர் குறிக்கப்பெற்ற இலக்கியங்களைக் குறிப்பிட்டுப் பின்னர் உறையூர் என்பதனை உறந்தையென முன்னோர் திரித்து வழங்கியதற்குத் தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:37:34(இந்திய நேரம்)