தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-4.3 உரைநுட்பம்

  • 4.3 உரை நுட்பம்

    இலக்கியம் படைத்த ஆசிரியன் நனவிலி மனக் கருத்துகளையும் (unconscious Intentions), கற்பனைப் பாத்திரங்களின் நோக்கங்களையும் உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து விளக்குவது உளவியல் அணுகுமுறை. உளவியல் அறிவை இலக்கியக் கருத்துகளோடு பொருத்தி விளக்க முற்படுவது இவ்வணுகுமுறை. படைப்பாளிகளின் கருத்தையும் நோக்கத்தையும் நன்கு ஆராய்ந்து அவன் எண்ணத்தின் உட்பகுதி இன்னதெனப் பல இடங்களில் இவர் கூறிச் செல்வதைக் காணலாம். இன்றைய திறனாய்வாளர்களைப் போலத் தனித்தனியே இன்ன அணுகுமுறை எனக் குறிக்காவிடினும் உருவஇயல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, தொன்மவியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை என்பன போன்ற பல அணுகுமுறைகளை இவர் உரைகளில் காண முடிகிறது. இன்றைய திறனாய்வாளர்களுக்கு இவ்வுரை ஆய்வுத்தளமாய் அமையுமென்பது திண்ணம்.

    4.3.1 எட்டுத்தொகை உரைகள்

    உ.வே.சா. இலக்கிய நடையிலும் எழுத வல்லவர். என்பதற்குச் சான்றாகப் புறநானூற்றுப் பதிப்பின் முன்னுரையில் ஒரு பகுதியைக் காண்க.

    “அமிழ்திற் சிறந்த தமிழ் மொழியதனை ஒன்பான் சுவைபுணர்த்தன்பால் வளர்த்தருள் நச்சும் பெருமை முச்சங்கத்துள் கடைச் சங்கப் புலவர்கள் அருளிச் செய்த எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு என்பது எட்டாவதாகும்”

    என்று எழுதியுள்ளார். இந்த முகவுரையைப் படித்த ஜி.யு.போப் புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறுந்தொகைக்கு உரை எழுதும்போது உ.வே.சா.வுக்கு வயது 82.

    “பல வருஷங்களாக முயன்று படித்துப் பலருடைய உதவியைப் பெற்று ஆராய்ந்து சுவைத்துப் பார்த்த இந்நூல் இப்பொழுது இந்த உருவத்தில் வெளிவருவதைப் பார்க்கையில் எனக்கு உண்டாகும் இன்பம் எழுதி உணர்த்துதற்கரியது”

    என எழுதியிருப்பதிலிருந்து குறுந்தொகை உரையில் தம் பழுத்த அனுபவத்தின் பயனை ஊற்றியுள்ளார் என உணர்கிறோம்.

    "நெருஞ்சியனைய" (குறுந். 315:4) எனும் பகுதிக்கு 'நெருஞ்சிமலர் ஞாயிறு கீழ்த்திசையிருப்பின் கிழக்கு நோக்கியும், மேற்றிசைச் செல்லின் மேற்கு நோக்கியும் நிற்பது... ஞாயிற்றை நோக்கிய நெருஞ்சி போலத் தலைவனை என் தோள் நோக்கி நிற்குமென்றாள்’ என விரிவாக உரை எழுதினார். இது போன்று எழுதியுள்ள, உ.வே.சா. வின் உரையை அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘தெளிவும் விளக்கமும் அமைந்த புதிய உரை’ எனப் பாராட்டியுள்ளார்.

    தொகை நூல்களில் முதலில் தொகுக்கப் பெற்றது குறுந்தொகை என்பதற்கு ஏதுக்கள் கூறினார்.

    “காக்கை பாடினியார் நச்செள்ளையார், கயமனார், கள்ளிலாத்திரையனார், ஓரேருழவனார் போன்ற புலவர்களின் இயற்பெயர்கள் மறைய, குறுந்தொகையில் அவர்கள் எழுதிய விழுமிய பாடல்களின் நயமிகு சொற்களாற் பெயர் பெற்றார்”

    “இவ்வாறு குறுந்தொகையிலுள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள், அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப்பெறுவதுபோல அந்நூல்களிலுள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை”

    “முதலில் ஆசிரியப் பாக்களில் தனியாக உள்ள அகப்பாக்களைத் தொகுத்து அடியளவால் மூன்று பிரிவாக்கிக் குறைந்த அளவுடைய குறுந்தொகையை முதலிற் செப்பஞ்செய்தார்களென்று கொள்வது ஒருவகையில் இயல்புடையதாகவே தோன்றுகிறது”

    ஆகவே குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    உ.வே.சா. வைப் பின்பற்றி உரை எழுதிய உரையாசிரியர்கள் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை, பெருமழைப் புலவர். பொ.வே.சோமசுந்தரனார் போன்றவர்களாவர்.

    4.3.2 ஆய்வுச் செய்திகள்

    உ.வே.சா. தம் குறிப்புரையில் மன்னர், புலவர் ஆகியோரின் பெயர்க்காரணங்களை ஆராய்ந்து, தகுந்த சான்றுகளுடன் வெளியிட்டுள்ளார். ஊர்களைப் பற்றிய குறிப்பு வரும்போது அவை இருக்குமிடம், அவற்றின் இன்றைய பெயர்கள் போன்ற செய்திகளை நன்கு ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆய்வு பெரும்பாலும் முன்னோர் கருத்தைப் பொன்னேபோற் பொதிந்துபோற்றுவதாகவே அமைந்துள்ளது. இரண்டு மாறுபட்ட கருத்துகள் தோன்றும்போது அவற்றுள் எது மிகவும் பொருத்தமானது எனஆராய்ந்து தம் கருத்தைக் கூறாது, இரண்டு கருத்துகளையும் கூறிமுடிவைக் கற்போருக்கே விட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளது. மேலும், பாடல்களிலும் பழைய உரையிலும் தம் உள்ளம் கவர்ந்த பகுதிகள் இருப்பின் அவற்றைத் திறனாய்ந்து பாராட்டுகிறார். இவ்வாறு ஆய்வுரை, பாராட்டுரை அனைத்தையும் உள்ளடக்கியதாக அவரது குறிப்புரை அமைந்துள்ளது.

    4.3.3 ஆர்வத்தைத் தூண்டும் உத்தி

    வரலாற்றை முன் கூறிப் படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உத்தியை இவர் கையாளுகிறார்.

    “பத்துப்பாட்டில் எட்டாவது பாட்டாக இருப்பது குறிஞ்சிப்பாட்டு. அது சங்கப் புலவர்களில் தலைசிறந்தவராகிய கபிலரால் ஆரிய அரசனாகிய பிரகத்தன் என்பவனுக்குத் தமிழின் நயத்தைத் தெரிவிக்கும் பொருட்டுப் பாடப்பெற்றது”

    என்று பத்துப்பாட்டு முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியைப் படிப்பவர்கள் குறிஞ்சிப்பாட்டைச் சுவைக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறுவர். இவ்வாறு ஆர்வத்தைத் தூண்டும் உத்திகள் பலவற்றைக் கையாண்டுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    ‘மகா மகோபாத்யாயர்’ - பொருள் கூறுக.

    2.

    குறுந்தொகை முன்னுரையில் திருநாவுக்கரசரின் எந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது?

    3.

    உ.வே.சா. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

    4.

    தொகை நூல்களில் குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பட்டது என்ற கருத்தை உ.வே.சா எவ்வாறு நிறுவுகிறார்?

    5.

    தமிழ்த் தாத்தாவின் குறிப்புரை பற்றிக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 18:01:56(இந்திய நேரம்)