தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4.5 உ.வே.சா வின் உரைநடை நலம்

  • 4.5 உ.வே.சா.வின் உரைநடை நலம்

    உ.வே.சா. எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் உரைநடைத் தமிழுக்கு அவர் வழங்கிய கொடைகளாகும். பல்வேறு தலைப்புகளில் அவருடைய கட்டுரைகள் அமைந்துள்ளன. உ.வே.சா. வின் எளிய நடைத்திறனுக்கு மூல காரணமாக அமைவது, எழுதும் அனைத்தும் மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தேயாகும். உ.வே.சாமிநாதையரின் உரைநடை வருணனை முறையிலும், எடுத்துரைமுறையிலும், நாடக முறையிலும், எள்ளல் முறையிலும் அமைந்துள்ளது. எனவே ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்குக் காணலாம்.

    4.5.1 வருணனை உரைநடை

    ஒரு பொருளையோ அல்லது காட்சியையோ வருணித்துக் காட்டும் போது இந்நடையின் தனித்தன்மை புலனாகின்றது, புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலன்களின் வாயிலாக உணரும் புறக்காட்சிகளைச் சொற்களில் மொழிபெயர்த்துக் காட்டுவதே இவ்வகை வருணனை எனலாம். உ.வே.சா.வின் `மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தின்’ ஒரு பகுதியிலிருந்து இவ்வருணனை உரைநடைக்குச் சான்று காணலாம். ஐயரவர்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து நின்ற நால்வரைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்.

    “என் உடம்பை எடுத்து நிறுத்திய என் தந்தையார், என் அறிவை நிலை நிறுத்திய என் ஆசிரியர், என் நிலையை உயர்த்திய திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். எனக்கு ஒரு பதவியை அளித்து நிலைபெறச் செய்த ஸ்ரீ தியாகராசச் செட்டியார் ஆகியவர்கள் எனக்கு மகோபகாரம் செய்தவர்களின் வரிசையிலே முன்னணியில் நிற்பவர்கள், இந்த நால்வரும் நால்வேறு குணம் உடையவர்கள், நால்வேறு நிலையை உடையவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எனக்குத் தெய்வமாய் விளங்குகின்றனர்,”

    இச்சொற்கள் சாமிநாதையரின் தமிழ்வழிப் பண்பாட்டையும், குடிவழி நன்றியுணர்வையும் காட்டுகின்றன.

    சாமிநாதையர் பல இதழ்களில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவற்றின் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்றது. எளிமையானது; இனியது. நீர்ப்பளிங்கு போல் இருந்தாலும் ஆழ்ந்துள்ள அருவி போலப் பொருள் ஆழம் உடையது. எளிமையான சிறிய சிறிய தொடர்களை அமைத்து எழுதுவதில் இவர் திரு.வி.க.வுக்கு ஒப்பானவர். அறிஞர்களைப்பற்றி வருணிக்கும் போது புற வருணனையைத் தந்து நம் கண்முன் நிறுத்துவார். தம் ஆசிரியரைப் பற்றி வருணனை நடையைக் கையாண்டு உள்ளது உள்ளவாறே அவர் தோற்றத்தை நம் கண்முன் நிறுத்துவதைப் பின்வரும் பகுதியால் அறியலாம்:

    “அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும், இளந்தொந்தியும், முழங்கால் வரை நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும், அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை. ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது.... பல காலமாய்த் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம் போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது”

    என்று வருணனை செய்துள்ளார். எளிய நடையில் இப்புனைவு அமைந்துள்ளது. இதைப்படிக்கும் போது பிள்ளையவர்களை நேரில் காண்பது போன்ற ஒருமன நிலையை நாம் அடைகிறோம்.

    தம் அருமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் புறத்தோற்றத்தை வருணித்தவர் அவரது அகத்தின் ஆழத்தையும், மன ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகிறார்.

    காட்சிக்கு எளிமையும் பணிவும் சாந்தமும் இவர் பால் உள்ளன என்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும் அவைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல, அறிவின் விசித்திர சக்தி எல்லாம் கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றம் உடையவராய் இருந்தார்”.

    இவ்வருணனை மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பெரும் புலமையை வெளிப்படுத்துகிறது.

    மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் இரண்டு பாகங்களைக் கொண்டது. தாம் அவரிடம் தமிழ் பயிலப் போவதற்கு முந்திய நிகழ்ச்சிகளை முதற்பாகமாகவும், அவரிடம் சேர்ந்து தமிழ் பயின்றகாலம் தொடங்கி அப்புலவர் பெருமானுடைய இறுதிக்காலம்வரையிலும் இரண்டாம் பாகமாகவும் எழுதியிருக்கிறார். அவற்றைப்படிக்கும் போது உ.வே.சாமிநாதையருக்கு இருந்த குருபக்தியைவியக்காமல் இருக்க முடியாது. குருவின் மீது கொண்ட மிகுந்தபக்தியினால் இப்புலவர் பிரான், இத்தமிழ்க்கவிஞர் என்றுகுறிப்பிடுவாரேயொழியப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை.மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் அவருடைய வரலாறு மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது, அக்காலத்தில் இருந்தபுலவர்களின் நிலை, தமிழ் ஆர்வம், பெரியமனிதர்களின் இயல்புமுதலிய பல செய்திகளும் இருக்கின்றன.

    4.5.2 எடுத்துரை உரைநடை

    ஒரு செயல் பற்றியோ, வாழ்வின் இயக்கம் பற்றியோ விவரிப்பது எடுத்துரை உரைநடை. கதை சொல்லும் எல்லா நூல்களும் இவ்வகையில் அடங்கும். வேறு எந்த வகையான உரைநடையையும் விட மக்கள் விரும்பிப் படிப்பது இதுவே. எடுத்துரை உரைநடையைப் படிக்கும் போது ஒரு நாடகத்தையோ திரைப்படத்தையோ காண்பது போன்ற உணர்வு தோன்றும்.

    இக்காலத் தமிழ் உரைநடையில் பேரளவாகத் திகழ்வது எடுத்துரை உரைநடையே. புனைகதைகள், வாழ்க்கை வரலாறு, நாட்டு வரலாறு போன்றன இவ்வகையில் அடங்கும்.

    எடுத்துரை சிறு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்;பெரிய கதையாகவும் இருக்கலாம். இதோ, உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘நல்லுரைக் கோவை’ யிலிருந்து ஒருபகுதி:

    “ஈஸ்வர வருஷத்தில் (1877) மதுரையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்குத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தராகிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகரும் அடியார் குழாங்களோடு சென்றிருந்தனர். வன்றொண்டரும் போயிருந்தார். அங்கே நமசிவாய தேசிகரைத் தரிசிக்கும் பொருட்டுக் கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு எலுமிச்சம் பழங்களை அவர் கொடுத்து வணங்கினார். அப்பொழுது அத்தேசிகர், “ஐயா, நீங்கள் கொடுத்தவை இரண்டு பழமானாலும் நாலு பழம்” என்று சாதுரியமாகப் பேசினார். நாலு பழமென்பதற்கு (மரத்தில்) தொங்கும் பழமென்றும், நான்கு பழமென்றும் இரண்டு பொருள் தொனித்தன. இதனைக் கேட்ட வன்றொண்டர் “சாமி, சாமி, நன்றாக இருக்கிறது!” என்று வியந்தார். உடனே தேசிகர் “நான் குறையப்படித்தாலும் கூடப் படித்தவன்” என்றதற்கு அதிகமாகப் படித்தவனென்றும் உடனிருந்து படித்தவனென்றும் இரண்டு பொருள் தோன்றின. நமச்சிவாய தேசிகர் வன்றொண்டரோடு பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டவர், அவருடைய சிலேடை வார்த்தைகளைக் கேட்டு வன்றொண்டர் இன்பத்தை அடைந்து அவருடைய அறிவு நுணுக்கத்தைப் பாராட்டினார்".

    மேற்கண்ட எடுத்துரை தன்னளவில் முழுமை பெற்ற ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடந்து முடிந்த நிகழ்ச்சியைச்சுவையோடு சொல்கிறது.

    4.5.3 நாடக உரைநடை முறை

    நாடக உரைநடை பேச்சு வழக்கை ஒட்டியே அமையும். இயல்பு நவிற்சிப் பாங்கு உடையதாய் இருக்கும். வகுப்பறையில் ஆசிரியர் மாணவரிடையே நடக்கும் உரையாடலை இவ்வகை உரைநடைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ‘எழுத்துப்பேறு’ என்ற இலக்கணத் தொடரை அடிப்படையாய் வைத்துச் சுவையான நிகழ்ச்சியொன்றை உ.வே.சா. நயமுறக் கூறியிருக்கின்றார். இதை அவரது எழுத்து வாயிலாகவே இங்குக் காணலாம்.

    “கோபால்ராவ் தமிழில் நல்ல பயிற்சி உடையவர், நன்னூலையும் பிற நூல்களையும் அழுத்தமாய்ப் படித்தவர்“. ஒரு நாள் கோபால் ராவ் காலேஜில் (கும்பகோணம்) இலக்கணப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வழக்கப்படி முதல் நாள் நடந்த பாடத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். ஒரு மாணாக்கனை நோக்கி, “செல்வுழிச்செல்க என்பதை எப்படிப் பிரிப்பது? என்று கேட்டார். அவன், செல்+உழி+செல்க என்று பிரித்துச் சொன்னான்.

    ‘வகரம் இடையே வந்திருக்கிறதே’ அதற்குப் பெயர் என்ன? என்று கேட்டார். அந்த மாணாக்கன் விடை கூறவில்லை. ஒவ்வொரு மாணவனாய்க் கேட்டு வருகையில் பலர் விடை தெரியாமல் விழித்தனர்.

    “ஒரு மாணாக்கன் மாத்திரம், செல்வுழி என்பதில் இடையே வந்த வகரம் எழுத்துப்பேறு. விண்வத்துக் கொட்கும் என்பதில் விண், அத்து என்னும் இரண்டும் சேரும் போது இடையில் வந்த வகரமும் அத்தகையதே என்று தைரியமாகச் சொன்னான்.

    அந்த வகரத்தை உடம்படுமெய் என்று ஏன் சொல்லக் கூடாது? என்று கோபால்ராவ் கேட்டார். உயிரீற்றின் பின் உயிர் வந்தால் இரண்டும் நின்றவாறே சேராவாதலால் அவற்றை உடம்படுத்தற்கு வரும் யகர வகர மெய்களை மட்டும் உடம்படுமெய் என்று சொல்வர். இது வேறு வகையில் தோன்றிய எழுத்தாதலால் எழுத்துப்பேறு என்று தான் சொல்ல வேண்டும்’ என்று அவன் தெளிவாய்க் கூறினான்.

    "நீ இந்தப் பள்ளிக்கூடத்தில் எவ்வளவு காலமாகப் படிக்கிறாய்?

    இதற்குமுன் எங்கே, யாரிடம் படித்தாய்?"

    “இந்த வருஷந்தான் இங்கே வந்தேன். இதற்குமுன் ஸ்ரீரங்கம் பள்ளிக்கூடத்தில் தியாகராசச் செட்டியாரிடம் படித்தேன். அவரிடந்தான் நன்னூலைக் கற்றுக்கொண்டேன்” என்றான் அவன்.

    “கோபால்ராவ் ஏதோ ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்தவர் போல் உற்சாகமடைந்தார். தியாகராசச் செட்டியாரின் திறமையை அறிந்தவுடன் அவரையே வருவித்து அங்கே நியமிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.”

    இவ்வாறு எழுத்துப்பேறு, செட்டியார் கும்பகோணத்தில் உத்தியோகப்பேறு பெறக் காரணமாயிற்று. மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி நாடக உரைநடை முறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இது வித்துவான் தியாகராசச் செட்டியார் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

    4.5.4 நகைச்சுவை நடை

    உ.வே.சாமிநாதையரின் சொல் நடையில் ஆங்காங்குநகைச்சுவையும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். பற்பல இடங்களில்பற்பல நிகழ்ச்சிகளை இவர் நகைச்சுவையோடு கூறிச் செல்லுகிறார். நான் கண்டதும் கேட்டதும் என்னும் நூலின் 12 ஆவது கட்டுரை ‘டிங்கினானே’ என்ற தலைப்பை உடையது. இது நகைச்சுவைக்குநிலைக்களமாய் விளங்குகின்றது.

    மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஐயர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டுவந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார்.

    ஒருநாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

    “நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

    அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

    என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.... அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

    ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

    ‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

    ‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவாராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

    வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார்சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரியவந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக்காட்டி வந்தார்கள்’.

    இவ்வாறு மகாபாரதத்தில் இடம்பெற்ற பீமசேனன் பற்றிய கதை தெருக்கூத்தாக இரவில் நடைபெற்றதை அறிய முடிகிறது.

    உ.வே.சா. மகாமகோபாத்யாயர் (பெரும்பேராசிரியர்) பட்டம்பெற்ற போது மகாகவி பாரதியார்,

    “குடந்தை நகர்க் கலைஞர் கோவே பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்குவாயே” என்று போற்றிப் பாடியுள்ளார்.

    பாரதியாரும். உ.வே,சா.வும் இருபெரும் சுடர்கள். தமிழ் மறுமலர்ச்சியின் தாயும் தந்தையுமாகத் திகழ்கின்றனர். தமிழ்ப் பணிக்கெனவே பிறந்த தமிழன்னையின் தனிப்பெரும் தவப்புதல்வர்கள். ‘பாரதியுகம்’ என்பது போல, ‘சாமிநாதையர் காலம்’ என்று கூறலாம். தமிழே தானாய், தானே தமிழாய் ஆன நிறைவாழ்வு, தமிழ் வாழ்வு வாய்ந்த தமிழினிய தெய்வம் உ.வே.சாமிநாதையர் ஆவார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:37:44(இந்திய நேரம்)