Primary tabs
2.3 பத்தொன்பதாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாடகங்கள் அதிகமாகத் தோன்றின. இந்த நூற்றாண்டில் மட்டும் ஏறக்குறை 500 நாடகங்கள் எழுதி நடிக்கப் பட்டுள்ளன. இரணிய சம்கார நாடகம், புரூரவ சக்கரவர்த்தி நாடகம், உத்தர ராமாயண நாடகம், மார்க்கண்டேயர் நாடகம் ஆகிய நாடகங்கள் இந்த நூற்றாண்டில் தோன்றிய நாடகங்களேயாகும். இவை அனைத்தும் ஓலைச் சுவடியில் இருந்தவை.
- கட்டியங்காரன் பங்கு
இந்த நாடகங்களின் அமைப்பு முறையைப் பொறுத்த வரையில் இவை இசைப்பாட்டு நாடகங்களாக இருந்தாலும் இடையிடையே கட்டியங்காரன் உரைநடையில் வசனம் பேசும்முறை இருந்தது. நாடகத்தில் நடிக்க வரும் புதுப்புதுப் பாத்திரங்களை இவனே அறிமுகப்படுத்துவான். ஏறக்குறைய இதே போன்ற பாத்திரம் வடமொழி நாடகங்களிலும் படைக்கப்பட்டுள்ளது. அவனுக்குப் பெயர் சூத்திரதாரன். ஆனால், இவன் நாடகத் தொடக்கத்தில் வருவதுடன் பணி முடிந்து விடும். பின்னர், நாடகத்தில் எந்த இடத்திலும் இவன் வரமாட்டான். கட்டியங்காரனோ நாடகம் முழுவதும் வருவான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த நாடகங்களில் இரண்டு வகைப் போக்குகளைக் காணலாம்.
1) சிற்றிலக்கியமாக வெளிவந்த நாடகங்கள் எல்லாம் படைப்பிலக்கிய வகையைச் சார்ந்தனவாக இருந்தன. இவை, புதுப்புது நாடகக் களத்துக்கும் கருத்துக்கும் இடம் தந்தன. மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வியல் நாடகங்கள் ஆயின.
2) இரண்டாம் நிலையில் வெளிவந்த நாடகங்கள் புராண, இதிகாசங்களைத் தழுவி வெளிவந்தவையாகும். இராமாயண, மகாபாரதத்தில் வரும் கிளைக் கதைகள் ஒவ்வொன்றும் நாடகமாயின. அக்கதைகளை மக்கள் முன் ஒவ்வொருவரும் என்னென்ன உத்திமுறையில் சொல்கின்றனர் என்பது மட்டுமே நாடகமாயிற்று. பின்னாளில் உருவான சபா நாடகக்காரர்கள் கூட, இப்புராண இதிகாச நாடகங்களை எடுத்து நடத்தும் அளவிற்கு மக்களிடையே இக்கதைகள் செல்வாக்குப் பெற்றன. புராண இதிகாசக் கிளைக்கதைகள் இக்காலக் கட்டத்தில் செழுமை அடைந்தன. சமூக நாடகங்கள் இக்காலத்தில் தோன்றின. நாடோடிக் கற்பனை நாடகங்கள் தோன்றின. வடமொழி நாடகங்கள், ஆங்கில நாடகங்கள் ஆகியன இக்காலக் கட்டங்களில் மொழிபெயர்த்து நடிக்கப்பட்டன. வரலாற்று நாடகங்கள் இக்காலத்தில் உருவாயின. இப்படிப் பல கோணங்களில் நாடகங்கள் புது எழுச்சி பெற்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த நாடகப் பெருமக்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் வருமாறு: கோபாலகிருஷ்ண பாரதியார், காசி விசுவநாத முதலியார், ப.வ.ராமசாமி ராஜூ, பெங்களூர் டி.அப்பாவுபிள்ளை, பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் ஆகியோர் தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர். இவர்களுள்ளும் குறிப்பிடத் தகுந்தவர் காசி விசுவநாத முதலியார் ஆவார்.
காசி விசுவநாத முதலியார் மூன்று நாடகங்களை எழுதினார். 1)டம்பாச்சாரி விலாசம், 2) தாசில்தார் நாடகம், 3) பிரம்ம சமாஜ நாடகம்.
இந்த மூன்று நாடகங்களும் சமூக நோக்குடைய நாடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வெளிவந்த சமூக நாடகங்களுக்கு முன்னோடியாய் அமைந்தவை இந்த மூன்று நாடகங்களே ஆகும்.
இசைப் பாட்டுகளாகவே நாடகங்களை நடத்தி வந்த அந்த நாட்களில் முழுக்க முழுக்க உரைநடையில் இந்த நாடகங்கள் வெளிவந்து நாடகத்தில் புதிய அணுகுமுறையை உருவாக்கின.
டம்பாச்சாரி விலாச நாடக அமைப்பு முறையை ஒத்து, பிரதாப சந்திர விலாசம் என்னும் நாடகத்தை ராமசாமி ராஜூ எழுதினார். பெங்களூர் அப்பாவுப்பிள்ளை சத்திய பாஷா அரிச்சந்திர விலாச நாடகத்தைப் புராணப் பின்னணியில் எழுதினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான நாடகங்கள் பெரும்பாலும் இசைப்பாடல் வடிவமாகவே இருந்தன. வெண்பா, கலித்துறை, விருத்தம், தோடையம், கொச்சகம், தாழிசை, அகவல், கண்ணிகள், சிந்துகள் என இசைப்பாடல்களாகவே நாடகங்கள் அமைந்தன. இவற்றை எல்லாம் நாடகமேடை ஒழுங்குக்குக் கொண்டுவந்தவர் நவாப் கோவிந்தசாமிராவ் என்பவர். இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மராட்டிய மொழியைத் தாய் மொழியாகவும் தமிழைப் பேச்சுமொழியாகவும் கொண்டவர்.
அக்காலக் கட்டத்தில் சாங்கிலி நாடக சபையும் வேறுசில நாடக சபைகளும் பூனாவிலிருந்து தமிழகம் வந்தன. சென்னை, தஞ்சாவூர் முதலிய இடங்களில் மகாராஷ்டிர மொழிகளில் நாடகங்களை நடத்தின. இந்த நாடகங்களைக் கண்ட கோவிந்தசாமி ராவ் தமிழ் நாடகங்களையும் அவ்வாறே அமைத்தார். நாடகத்தின் தொடக்கத்தில் விநாயகர் வணக்கம், சரஸ்வதி வணக்கம் முதலியன இடம் பெற்றன. நாடகக் கதைச் சுருக்கத்தை சூத்திரதாரனும் விதூஷகனும் சபையோருக்குக் கூறுதல் ஆகியன கோவிந்தசாமி ராவ் நாடகங்களில் இடம் பெற்றன. பின்னர் எல்லா நாடகச் சபையினரும் இதைப் பின்பற்றினர்.
பார்சி நாடகக் குழுவினர் சென்னையில் நாடகம் நடத்தினர். நாடகத் திரைச் சீலையைக் காட்டுவதில் அவர்கள் புதிய உத்தி முறைகளைக் கையாண்டனர். பின்னர் தமிழ்நாடகங்களிலும் அவை காட்டப்பட்டன.
தமிழ் நாடக வரலாற்றின் முதல்பகுதியைத் தஞ்சை கோவிந்தசாமி ராவுடன் நிறைவு செய்யலாம். அவர் செய்த மாற்றங்கள் பின்வருமாறு:
நாடகங்களில் பாடல்களைக் குறைத்து உரையாடல்களை மிகுதிப் படுத்தினார்.
பூனா நாடகக் குழுவும் பார்சி நாடகக் குழுவும் நாடகத்தில் காட்டிய உத்திகளைத் தம் தமிழ் நாடகத்தில் கையாண்டார்.
புராண இதிகாசங்களில் இருந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து நாடகமாக நடத்தி வந்தார்.