தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக நெறிமுறைகள்

  • 5.2 சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக நெறிமுறைகள்

    நடிகராகவும், நாடக ஆசிரியராகவும், நாடக இயக்குநராகவும் சுவாமிகள் புதுப்புது நிலைகளில் தம்மை மாற்றிக் கொண்டார் என்பதை முன்னரே கண்டோம்.

    • மேடைநாடக வழிகாட்டி

    சுவாமிகளின் காலத்தில் நாடகம் என்பது தெருக்கூத்து நிலையிலிருந்து மாறவில்லை. நாடக இலக்கணத்தின் உத்தி முறைகளும், அமைப்பு முறைகளும் மற்றவர்களால் பின்பற்றப்படவில்லை. இவற்றைச் சீர்திருத்த வேண்டும் என்று சுவாமிகள் கருதினார். சரியான மேடை அமைப்பு, மேடையில் திரைச்சீலை அமைப்பு, நாடகக் காட்சி அமைப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தி மேடை நாடகம் எவ்வாறு இருக்க வேண்டும் என அமைத்துக்காட்டினார். அந்த வகையில் சுவாமிகளை மேடை நாடக வழிகாட்டி என்றே கூறலாம்.

    • இசைப் பாடல் சேர்க்கை

    மேடையில் நடிகர்கள் பாடல்கள் பாடி நடிக்கும் போதே, பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக இடையிடையே கொச்சையான வசனங்களைப் பேசினர். இந்தக் கொச்சை வசனங்களை மாற்றி இசைப்பாடல்களை அவ்விடங்களில் சேர்த்து நடிகர்களைப் பாடச் செய்தார்.
     

    5.2.1 நடிகர்களைக் கட்டுப்படுத்தல்

    சுவாமிகளின் காலத்தில் இருந்த நடிகர்களில் பலர் கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் சொந்தமாகப் பேசியும், சொந்தக் கருத்துகளைப் புகுத்தியும் நாடகங்களில் நடித்து வந்தனர். நாடகங்கள் சிற்சில விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உரியவை என்பதை அவர்கள் எளிதாக மறந்தனர். சுவாமிகள் இவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்தவேண்டும் என்று நினைத்தார். முதலில் உரையாடல்களில் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்தார். நாடக நடிகர்கள் கட்டுப்பாடில்லாமல் வசனம் பேசுவதை நிறுத்தினார்.

    சுவாமிகளின் காலத்தில் தான் சிறுவர்களுக்கென்று நாடக சபைகள் தோன்றத் தொடங்கின. அத்தகைய சபைகளுடனும் சுவாமிகள் தொடர்பு கொண்டார். சிறுவர்களுக்கும், பெரிய நடிகர்களுக்குமாக நாடக வசனங்களை ஒழுங்குபடுத்தி எழுதினார். 1918ஆம் ஆண்டு தம் 51ஆம் வயதில் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையைச் சிறுவயது நடிகர்களுக்காகத் தொடங்கினார். அந்தச் சபையில் உருவானவர்கள் தாம் டி.கே.எஸ்.சகோதரர்கள்.
     

    5.2.2 அறநெறிக் கோட்பாடு
     

    நாடகம் என்பது பார்வையாளர்களை மகிழ்விப்பதாக மட்டுமன்றிப் பார்வையாளர்களுக்குப் பயன் தருவதாகவும் விளங்க வேண்டும் என சுவாமிகள் விரும்பினார். எனவே ஒவ்வொரு நாடகத்தினுள்ளும் முடிந்த அளவு அறக்கருத்துகளை வைத்தார். வசனத்திலோ, பாடலிலோ, நகைச் சுவையிலோ எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அறம் பேசினார். பழந்தமிழ் நூல்களில் சுவாமிகளுக்கு நன்கு பயிற்சி இருந்ததால் இந்த அறக்கருத்துகளை நாடகத்தில் சேர்ப்பது அவருக்கு எளிமையாக இருந்தது. சுவாமிகள் அறக்கருத்துகளை முன் வைத்துப் பாடியதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம். வள்ளி திருமணம் நாடகத்தில் ஒரு பாடல்

    சிங்கத்தைக் கொல்லு கொல்லு
    சீக்கிரமாக வெல்லு
    யானையைக் கண்டால் நில்லு
    மானைக் கண்டாலும் சொல்லு

    இப்பாடலில் சிங்கம் கொடிய விலங்காதலால் அதைக் கொல்ல வேண்டும் என்கிறார். அதேவேளையில் யானையும், மானும் சாதுவானவை ஆதலால் அவற்றின் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்கிறார்.

    பவளக்கொடி சரித்திரம் என்னும் நாடகத்தில் ஒரு பாடல்,

    அபசாரம் செய்யும் பகைவனும் வீடுவந்தால்
    உபசாரம் செய்ய வேணும்.........
    என அறிவுடையோர் உரைப்பர்

    என்று பாடுகிறார். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்னும் பாரதி பாடல் அடியின் இன்னொரு வடிவமாகவே சுவாமிகளின் பாடல் அடிகள் திகழ்கின்றன.

    சதி சுலோசனா என்னும் நாடகத்தில் ஒரு பாடல், சுலோசனா என்பவள் துண்டிக்கப்பட்ட தன் கணவனின் தலையைத் தருமாறு இலக்குமணனிடம் வேண்டுகிறாள். அப்போது இராமன் இலக்குமணனிடம் சுலோச்சனாவின் கணவன் நம் பகைவனேயானாலும் அவன் தலையை வேண்டும் என்று கேட்பவள் அவன் மனைவி; அவளிடம் நாம் பகை பாராட்டி அறநெறியிலிருந்து தவறக்கூடாது என்று கூறுகின்றான்.

    சத்துரு பத்தினி ஆயினும் ஈவாய்
    தருமம் தவறலாகாது!

    என்பது இராமன் வாயிலாகச் சுவாமிகள் பாடும் பாட்டு ஆகும்.
    5.2.3 தமிழ் மொழிப் பற்று

    தமிழ் மொழி மீது, சுவாமிகளுக்குள்ள பற்றினைத் தம் நாடகங்கள் மூலம் வெளிபடுத்தினார்.

    • பழந்தமிழ்க் கருத்துகள்

    பழநி தண்டபாணி சுவாமிகள் சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழ் ஆசிரியராக விளங்கினார். அதனால் சுவாமிகள் ஆழ்ந்த தமிழ் அறிவு பெற்றார். வெண்பா, விருத்தம், கலித்துறை, அகவல்,கண்ணிகள், நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, சந்தப்பாட்டு, தர்க்கப் பாடல்கள், சித்தர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் எனப் பலவகைச் சந்தங்களில் பாடுவதில் வல்லவராய் இருந்தார். ஆகவே நாடகத்துக்கான பாடல்களைத் தாமே இயற்றியும் அவற்றுள் பழந்தமிழ்க் கருத்துகளைப் புகுத்தியும் வளப்படுத்தினார்.

    சுவாமிகள் சங்க இலக்கியம், திருக்குறள், பிற்கால இலக்கியம் என அனைத்து இலக்கியங்களிலும் மனப்பாடத் தேர்ச்சி பெற்று விளங்கினார். எனவே தாம் இயற்றிய நாடகங்களில் வேண்டிய இடங்களில் இவ்விலக்கியக் கருத்துகளை உட்புகுத்தினார். குறிப்பாகத் திருக்குறள் கருத்துகள் பலவற்றைத் தம் நாடகங்களில் கையாண்டார்.
     

    • தமிழில் இறை வழிபாடு

    கோயில்களில் தமிழிலேயே இறைவழிபாடு நிகழ்த்த வேண்டும் என்பது இக்காலத்தில் வலுவான குரலாக ஒலித்து வருகிறது. ஆனால் இக்கருத்துக்கு முன்னோடி என்பது போல, சங்கரதாஸ் சுவாமிகள் தம் காலத்திலேயே தமிழ் இறை வழிபாட்டைப் போற்றிப் பேசுகிறார்.

    சுவாமிகளின் நாடகங்களுள் ஒன்று அல்லி சரித்திரம். அந்த நாடகத்தில் நாட்டு நடப்புக் குறித்து வருகின்ற காட்சி ஒன்றில் அல்லியின் கூற்றாகப் பின்வரும் பாடலைச் சுவாமிகள் எழுதியிருக்கிறார்.

    பவளச் சேனா மந்திரி
    இப்பாரினில் உள்ளதே ஆலயங்கள் தோறும்
    பூஜை செய்கின்றனரா?
    அந்தணர் யாரும் ஆறு காலம்தோறும்
    தந்த மேள வாத்திய கோஷமாய் எல்லோரும்
    செந்தமிழ்த் தேவாரம் திருப்புகழ் அலங்காரம்
    செப்புமுறை ஒப்பிடவே தப்பிதம் அல்லாமல் அவர்

    என்று பாடுகிறார். தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம் முதலியவற்றை இறைவழிபாட்டுப் பாடல்களாக அந்தணர்கள் பாடுகின்றனரா என அல்லி கேட்பது போல் பாடலை அமைத்திருக்கிறார்.
     

    • இயற்கை ஒலிகளில் தமிழைக் காணும் முயற்சி

    இசைக் கருவிகளிலிருந்து இயற்கையாக வருகின்ற ஒலிகள் தமிழை ஒலிக்கின்றன எனச் சுவாமிகள் கூறுவது அவரது பழுத்த தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டாகும்.

    சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகத்தில் ஒரு காட்சி. துரியோதனன் மகன் இலக்கணனுக்கும் சுந்தரிக்கும் திருமணம்; இசைக் கருவிகள் முழங்குகின்றன. அந்த இசையொலிகள் எல்லாம் சுந்தரிக்கு நஞ்சாய் இதயத்தில் இறங்குகின்றன. காரணம், அவள் காதலித்தது அருச்சுனன் மகன் அபிமன்யுவை; இப்போது மணமகனாக நிற்பவனோ இலக்கணன். இசைக் கருவிகளின் ஒலி இனிக்கவா செய்யும்?

    இந்த நேரத்தில் அபிமன்யு ஒரு மாலை தொடுத்து அதற்குள் ஒரு மடலையும் கணையாழியையும் (மோதிரம்) மறைத்து வைத்து ஒரு கிழவி மூலமாகச் சுந்தரிக்கு அனுப்புகிறான். இதைக் கண்டதும் சுந்தரிக்கு மகிழ்ச்சி உள்ளத்தில் மடை திறந்த வெள்ளம் போல் பாய்கிறது. நெஞ்சில் நஞ்சாக இறங்கிய அதே இசைக் கருவிகளின் ஒலி இப்போது இன்ப வெள்ளமாய் இதயத்தில் சுரக்கிறது. எப்படி? இதோ!

    “துந்துபியெல்லாம் ‘தும் தும் தும்’ என்று ஒலிக்கின்றன; சங்கங்களெல்லாம் ‘பம் பம் பம்’ என்று முழங்குகின்றன; தாளவகைச் சல்லரி மல்லரி காடிகைகளோ ‘தீம் தீம் தீம்’ என்று சப்திக்கின்றன; முரசு பேரிகை மிருதகங்கள், ‘தோம் தோம்’ என்று தொனிக்கின்றன; ஆகவே இவ்வகை வாத்திய ஒலிகள் ஒன்று கூடி, தும், பம், தீம், தோம், ‘தும்பம்தீம்தோம்’, ‘துன்பம் தீர்ந்தோம்’ என்ற பொருளைக் கொடுக்கலாயின” என்று சங்கரதாஸ் சுவாமிகள் கூறுகிறார்.

    இயற்கை ஒலிகளை எவ்வாறு தமிழாக்கி இன்புறுத்துகிறார் என்று வியக்காமல் இருக்க முடியாது. அபிமன்யு சுந்தரியில் வரும் இந்தக் காட்சி காண்பவர் செவிகளுக்கும் கண்களுக்கும், கருத்துக்கும் ஒருசேர விருந்தளித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நாடகத்தைச் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்தார் என்று கூறப்படுகிறது.

    5.2.4 முன்னோடி முயற்சிகள்

    சரஸ்வதி சபதம் என்னும் தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்காத தமிழ் ரசிகர்கள் இருக்கமுடியாது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றில் எது உயர்ந்தது என்பதுதான் கதைக்கு அடிப்படை. கலைமகளாகிய சரஸ்வதி கல்வியின் தெய்வம்; மலர் மகளாகிய இலட்சுமி செல்வத்தின் தேவி; மலைமகளாகிய பார்வதி வீரத்தின் நாயகி. இந்த மூவருக்கும் இடையே எழும் போட்டியை நாரதர் தூபம் காட்டாமலேயே கொழுந்து விட்டு எரியச் செய்கிறார். இந்தப் போட்டியின் இறுதியில் மூன்றும் சமமானவை என்று கதை முடிகிறது.

    சரஸ்வதி
    இலட்சுமி
    பார்வதி

    இந்தத் திரைப்பட ஆக்கத்துக்கு முன்னோடியாய் இருப்பது போல் சங்கரதாஸ் சுவாமிகளின் சதி அனுசூயா நாடகக் காட்சி அமைந்துள்ளது.

    சுவாமிகளின் நாடகத்தில் சரஸ்வதி பின்வருமாறு பாடுகிறாள்.

    கல்வியை அல்லது நல்ல பயன்தர வல்லது சொல்ல உண்டோ உயர்வும் உண்டோ?

    என்னும் கேள்விக்கு நாரதர், ‘ஆம் தேவி! கல்வியைப் போல் உண்டோ?’ என்று பின்பாட்டுப் பாடுகிறார். இலட்சுமி,

    செல்வத்துக்கு நிகரில்லை மற்றொன்று
    சொல்லத் தடை யேது? கிடையாது

    என்று பாட, ‘சொல்லத் தடை ஏது? கிடையாது’ என்று இலட்சுமிக்கு ஒத்து ஊதுகிறார் நாரதர். இவர்கள் இருவரும் போட்டி போட்டுப் பேசுவதைக் கேட்ட பார்வதி தேவி,

    வெல்லுவாருக்கு இன்று எல்லாம் சொந்தம் என்று
    வேதம் அது நீதி ஓதும் எதிர்நின்று

    என்று வீரத்தை உயர்த்திக் கூறுகிறார். நாரதர் அதற்கும் ஆமாம் போடுகிறார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை மக்களுக்கு ஒருசேர இன்றிமையாதவை என்று சுவாமிகள் முடிவு கூறுகிறார்.

    தேவியர் மூவருக்கும் இடையே நடைபெறும் இந்தப் போட்டி நாகரிகமாக இருக்கிறது அல்லவா?

    இறுதியில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சமமாக்கிக் காட்டும் முறை அதைவிட மகிழ்ச்சி அளிக்கிறது அல்லவா! இந்த நாடகக் காட்சிதான் பின்னாளில் ‘சரஸ்வதி சபதம்’ என்னும் பெயரில் ஏ.பி.நாகராஜன் கைவண்ணத்தில் இன்னும் மெருகேறி வெளிவந்து மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

    1)
    தமிழ் நாடக உலகில் நாடக மூவர் என்று அழைக்கப் பெறுபவர்கள் யார்?
    2)
    சங்கரதாஸ் சுவாமிகள் எந்த ஆண்டு பிறந்தார்?
    3)
    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சங்கரதாஸ் சுவாமிகளை எவ்வாறு புகழ்ந்தார்?
    4)
    சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழாசிரியர் யார்?
    5)
    சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிய நாடக சபையின் பெயர் என்ன?
    6)
    சுவாமிகளிடம் பாடம் பயின்ற மாணவிகள் யார்? யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 10:26:29(இந்திய நேரம்)