தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உணர்ச்சிக் கவிதைகள்

  • 1.2 உணர்ச்சிக் கவிதைகள்

    தோழர்களே! உணர்ச்சி மானிடப் பொதுவானது. எல்லாரும் உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறோம். ஆனால், கவிஞன் உணர்ச்சிகளால் ஆட்டிவைக்கப்படுகிறான்; அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான் அவனது சொற்களில் மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்கின்றன. தமிழ்க் கவிஞர்களிலேயே மிகுதியாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவர் கண்ணதாசன்தான். சில சான்றுகளைப் பார்ப்போம்.

    1.2.1 அவலம்

    உணர்ச்சிகளிலேயே மிக்க ஆற்றல் உடையது அவலம் என்னும் துயரம்தான். அடிக்கடி உள்ளத்தின் அணையை அது உடைத்து விடுகிறது. கண்ணீர் வெள்ளப் பெருக்கிற்குக் காரணமாகி விடுகிறது.

    • கலங்கல் பாக்கள்

    சொந்த வாழ்வின் சில தவறான பழக்கங்கள் காரணமாக உடலும் மனமும் பாதிப்புக்கு உள்ளானவர் கண்ணதாசன். உள்ளம் எல்லாம் நினைவுகள்; நினைவுகள் எல்லாம் கவலைகள்தாம் அவருக்கு. நினைக்கத் தெரிந்த மனமே என்ற கவிதையில் (5 ஆம் தொகுதி) கலங்குகிறார்.

    பட்டகடன் தீர்ப்பேனா
    பாதகரைப் பார்ப்பேனா
    பாவலர்க்கு மேடையிலே
    பரிந்துரைக்கப் போவேனா?
    கொட்டுகின்ற தேளை எல்லாம்
    கும்பிட்டு நிற்பேனா?
    கொல்லுகின்ற சூழ்நிலையைக்
    குடித்து மறப்பேனா?


    நெஞ்சை ஆற்ற, நிலையை மாற்ற வழி தேடுகிறாராம். காணவில்லை. கதறுகிறார்....

    ஆற்றும்வழி தேடுகிறேன்
    ஆறவில்லை தேறவில்லை
    காற்றுஒன்றை இந்தக்
    கட்டையிலே விட்டுவைத்த
    கூற்றுவனைக் காணாமல்
    குழப்பம் அகல்வதில்லை.

    (வஞ்சக நண்பர்களை, பாதகர், கொட்டுகிற தேள் என்கிறார்; காற்று = இங்கு மூச்சு;கட்டை = உடம்பு; கூற்றுவன் = எமன்)

    செத்தால்தான் நிம்மதி என்று மனம் வெம்புகிறார்.

    அவலம் என்னும் துன்பச் சுவையைப் பிழிந்து திரைப்பாடல்கள் பல வடித்திருக்கிறார். ஆயிரம் சான்று தரலாம். இங்கு ஒன்று காட்டப்படுகிறது.

    எனது கைகள் மீட்டும்போது
    வீணை அழுகின்றது
    எனது கைகள் தழுவும்போது
    மலரும் சுடுகின்றது
    என்ன நினைத்து என்னைப்படைத்தான்
    இறைவன் என்பவனே
    கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
    இறைவன் கொடியவனே...

    அவலம் ஒருவனை எந்த அளவுக்குத் தன்னிரக்கத்தில் தவிக்க விடுகிறது என்பதைக் கூர்மையாகச் சொல்கிறார்.

    கண்ணிலே நீர் எதற்கு? என்று கேள்வி கேட்டுக் காலம் எல்லாம் அழுவதற்கு என்று விடை கண்டவர் அவர். நெஞ்சிலே நினைவு எதற்கு? வஞ்சகரை மறப்பதற்கு என்று துயரத்தின் உச்சியில் ஏறுகிறார். நினைவு இருப்பதே மறப்பதற்குத்தான் என்ற ஒரு முரண் ஆன கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இந்தக் குழப்பம் அழகான குழப்பம்!

    • இரங்கல் பாக்கள்

    இதயத்தில் நிறைந்தவர்கள் இறக்கும் போது இதயம் துடிக்கும் துடிப்பை உணர்ச்சி குன்றாது எடுத்துரைக்க எல்லாருக்கும் முடிவதில்லை. ஆனால் கவிஞனால் முடிகிறது. கண்ணதாசன் அந்தக் கலையில் வல்லவர்.

    திரைக்கவிஞர் இவர். இசைக்கலை இவர் இதயத்தின் நாதம். நாதசுர இசைமேதை ஒருவன் இறந்தான். நெஞ்சம் தாங்குமா? திருவாவடுதுறை இராஜரத்தினம் இறந்தபோது கண்ணதாசன் இரங்கல் கவிதை பாடினார். இதன் ஒவ்வொரு வரியும் கண்ணீர்ச் சரமாக இருந்தது. கலைவாணர் என்.எஸ்.கே. மரணப் படுக்கையில் கிடந்தபோது பார்க்கச் சென்றார் கண்ணதாசன். அப்போது ‘எனக்கும் அதைப்போல் ஒரு இரங்கல் கவிதை பாட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாராம் கலைவாணர்.

    கல்வி வள்ளல் அழகப்பா மறைந்தபோது இவர் பாடிய இழப்புக் கவிதை வரலாற்றின் பக்கங்களில் காய்ந்து போகாத கண்ணீராய் இருக்கிறது.

    முதலாளி மார்களிலே முழுமுதலைக்
    கல்விக்கே முடிந்து வைத்த
    முதல்ஆளை நீ கொன்றாய்! மற்றவர்கள்
    வாழ்கின்றார், முதல் அடிக்க.
    சதிகாரச் சாவே, நின் வயிற்றினிலே
    சர்வகலா சாலை காண
    இதமான ஆள்வேண்டும் என்றோ எம்
    பெருமகனை எடுத்துச் சென்றாய்?

    (முழுமுதல் = செல்வம் முழுவதையும்; முடிந்து வைத்த = கல்விக்காகவே மூட்டைகட்டிக் கொடுத்துவிட்ட; இதமான ஆள் = (கல்லூரி கட்டுவதற்குப்) பொருத்தமான இனிய மனிதர்). என்று ‘சாவைச்’ சட்டையைப் பிடித்து உலுக்குகிறார்.

    பல கல்வி நிலையங்களும், காரைக்குடி பல்கலைக் கழகமும் இன்று வள்ளல் அழகப்பா பெயர் சொல்லி நிற்கின்றன. வள்ளல் அழகப்பா (முதல்தொகுதி) என்னும் இந்த இரங்கல் கவிதை அவற்றைவிட உயர்வான ‘சொல் மண்டபமாக’ அமைந்து அவர் பெயர் சொல்லி நிற்கிறது.

    ‘முழுமுதல்’ என்றால் இறைவன் என்றும் பொருள் உண்டு. கல்விக்காக உதவும் பணம் கடவுளுக்குச் சமம் என்னும் நயமான பொருளையும் இக்கவிதைச் சொல் தருகிறது பாருங்கள்!

    ஒப்பற்ற தலைவர் ஜவஹர்லால் நேரு இறந்தபோது கண்ணதாசன் பாடிய இரங்கல் கவிதை மறக்க முடியாதது. “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ சஞ்சலமே நீயும் ஒரு சஞ்சலத்தைக் காணாயோ?” என்ற வரிகள் அவலத்தின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்பவை.

    அண்ணா, பெரியார், பட்டுக்கோட்டை, கலைவாணர் ஆகியோர் இறந்தபோது இவர் பாடிய இரங்கல் பாக்கள் உயிர்த்துடிப்பு உள்ளவை.

    சீசர் என்ற தன் வளர்ப்புநாய் இறந்தபோதும் இரங்கல்பாப் பாடினார்.

    இருந்து பாடிய இரங்கல் பா என்ற தலைப்பில் தனக்கே இரங்கல்பாப் பாடிக் கொண்ட முதல் கவிஞர் கண்ணதாசன் தான். (4 ஆம் தொகுதியில் உள்ளது)

    1.2.2 காதல்

    உலகின் உயிர் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற ‘உயிர்இயற்கை’ காதல். இது வாழ்வையே இயக்குகின்ற பேருணர்வு, கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். கண்ணதாசன் காதலை உடல் இன்பத்திற்கான ஒரு ‘போகப்’ பொருளாகக் கருதவில்லை. அவரைப்போல் காதலைப் புனிதப்படுத்தி உயர்வு செய்பவர் வேறு எவரும் இருக்க முடியாது.

    • விந்தையாய்த் தொடங்கும் காதல்

    காதல் முன் அறிவிப்பு எதுவும் இன்றி, எதிர்பாராமல் தோன்றுகிறதாம். இதை

    மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்
    சொல்லாமல் கொள்ளாமல் வந்தது

    என்கிறார்.

    ஒரு திருடனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த நாட்டியக்காரியின் காதலை ஒரு திரைப்பாடலில் காட்டுகிறார்;

    காட்டினில் ஒருவன் என்னைக் கண்டான்
    கையில் உள்ளதைக் கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்று
    கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
    அவன்தான் திருடன் என்று இருந்தேன்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதன்முதல் திருடும் காரணத்தால்
    முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்.

    கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன் என்பதில், காதலின்-வாசல் கண் என்பதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறார்!

    • பிரிவிலே வளரும் காதல்

    பிரிவுதான் காதலின் ஆழத்தையும் உறுதியையும் காட்டும் அளவுக் கருவி. அத்தியைப் பிரிந்த மருதியின் உடல் மெலிகிறது. இதை-

    வேகும் நிலவினுக்கும் - அனல்
    வீசி வதைத்திடும் தென்றலுக்கும்
    பாகுக் கனிமொழியாள் - ஒரு
    பாதி உடல்தனைப் பறிகொடுத்தாள்
    (ஆட்டனத்தி ஆதிமந்தி)

    என்று பாடுகிறார். குளிர்ந்த நிலவும், தென்றலும் பிரிந்த காதலரைச் சுட்டு வருத்தும். இதை அழகான உணர்வு ஓவியமாகத் தீட்டுகிறார். பாதியாக மெலிந்தாள் என்பதைப் ‘பாதி உடல்தனைப் பறிகொடுத்தாள்’ என்னும் போது கவிதை, உணர்ச்சி வேகம் பெறுகிறது.

    பிரிந்த காதலர் சேரும்போது பேச்சுக் கூட இருவருக்கும் இடையில் தடையாகி விடும். வள்ளுவரும் கம்பரும் கூட இந்த நிலையைப் பாடியுள்ளனர். கண்ணதாசன் இந்த நிலையை உணர்ச்சி மிக்க மௌன நாடகக் காட்சியாக்கிக் காட்டுகிறார். பிரிந்தவர் இருவரும் சேரும் நிலையைத் தெய்வத்தின் சன்னதியாகப் புனிதப்படுத்திக் காதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைப் படைத்து விட்டார்.

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதில்
    அழுதால் கொஞ்சம் நிம்மதி.
    பேச மறந்தே சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி

    காதலைப் பாடுவதில் தனக்கு உவமை இல்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன்.

    1.2.3 தாய்மை

    தாலாட்டுப் பாடல், தாயின் வாய்வழி ஊறிவரும் தாய்ப்பால். தன் அன்பின் ஆழ, அகலத்தை முத்தங்களால் சொன்னது போகத் தன் சொல்லால் தாய் பாடும் மிச்சங்களே தாலாட்டுகள். தாலாட்டுப் பாடுவதில் கண்ணதாசனுக்கு இணை எவரும் இல்லை. அவரது ஆண்மைக்கு உள்ளே ஒரு பெண்மை இருப்பதாக நமக்குத் தோன்றும்.

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
    மங்காத கண்களில் மை இட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

    மக்கள் செல்வத்தினும் மேலான செல்வம் எது என்பதைக் கவிதை உணர்த்துகிறது.

    மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
    மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
    ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா ?
    அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

    எப்படிப்பட்ட உருக்கமான தாய் - சேய் பிணைப்பு இவ்வரிகளில் வெளிப்படுகிறது! இப்படிப் பல தாலாட்டுப் பாடல்கள்! அவற்றின் இனிமையில் கவிதை அழகு தூங்குகிறது.

    • தாலாட்டில் கலந்துவரும் அறிவுரைகள்

    காலம்இது காலம்இது கண்ணுறங்கு மகளே
    காலம்இதைத் தவறவிட்டால் தூக்கம்இல்லை மகளே

    என்று தொடங்கும் ஒரு தாலாட்டு. இது பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் ஒவ்வொரு காரணத்தால் தூக்கம் இல்லாமல் போகும்; எனவே ‘இப்போதே குழந்தைப் பருவத்திலேயே தூங்கிக்கொள்’ என்று குழந்தைக்குச் சொல்லும் அறிவுரைகள் நிறைந்தது. பெண் வாழ்வின் சுமைகளை, போராட்டங்களை அழகாக எடுத்துச் சொல்வது. கண்ணதாசனின் கவிதைத் திறமைக்கு இந்த ஒரு பாடலை மட்டுமே சான்றாகக் காட்டலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2018 12:39:04(இந்திய நேரம்)