தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியச் சுவை

  • 1.4 இலக்கியச் சுவை

    படித்த உடனே மனத்திற்குள் சென்று அமர்ந்து கொள்ளும் எளிமையான சொற்கள்; ஒவ்வொரு சொல்லிலும் சந்த இசைநயம் இயல்பாகவே ஒலிக்கும். வளமான கற்பனைகள், புதுமையான மொழிநடை; சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம் இவற்றின் புலமையால் வந்த செழுமையான தமிழ்நடை இவருடையது. பெருமிதமும், காதல் உணர்வும், நகைச்சுவையும், சோகமும் இழையோடும் நடையழகு இயல்பாக அமையப் பெற்றவர் கண்ணதாசன். வாழ்க்கைப் பாதையில் மேடு, பள்ளங்கள் பல கண்டவர். இதனால் தத்துவம் இவர் எழுத்துகளில் தனி இடம் பிடித்து உள்ளது. இந்தச் சிறப்புகளால் எல்லாவகை மனிதர்களையும் எளிதில் கவர்ந்து, இதயங்களில் கலந்து நிற்கின்றன இவரது கவிதைகள். இனி இவற்றைப் பற்றி விரிவாக அறியலாம்.

    1.4.1 சொல்லாட்சி

    நண்பர்களே! கவிஞன் என்பவன் சொற்களைக் கட்டுபவன் என்று பலரும் நினைக்கின்றனர். இல்லை, அவன் சொற்களால் காட்டுபவன், அவன் காட்டும் காட்சி தெளிவாய் இருக்க வேண்டும்; அழகாய் இருக்க வேண்டும். புரியாத தன்மை அறவே கூடாது. எளிமையில் செழுமை வேண்டும்.

    பாரதி, பாரதிதாசன், கவிமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் இப்படித்தான் எழுதினார்கள். இந்தச் சிறப்பான படைப்புக் கலைத்திறன் கண்ணதாசனிடம் மிகுதியாகவே இருந்தது. அவர் பரவலாகப் புரிந்து கொள்ளப் பட்டதற்கும், புகழ் பெற்றதற்கும் காரணம் இதுதான்.

    • இதழ்களில் தலைப்புகள்

    கண்ணதாசன் சிறந்த இதழ் ஆசிரியர். தென்றல், தென்றல்திரை இதழ்களை நடத்திய போதே இதை வெளிப்படுத்தினார். தென்றல்திரை இதழில் திரைக்கலையின் நுட்பங்கள் பற்றிய ஒரு தொடர் வந்தது. அதற்குத் தலைப்பு ‘எங்கள் தொழில் கேளாய் இளங்கொடியே சொல்லுகிறேன்’. திறனாய்வுப் பகுதிக்குத் தலைப்பு: ‘பார்த்தோம், பட்டது, சொல்கிறோம்’. தலைப்புகள் மட்டுமல்ல, படங்களுக்கு அடிக் குறிப்புக்கூட அழகான கவிதை நடையில் எழுதுவார்.

    நடிகை பத்மினி கார் ஓட்டுவதுபோல் அமைந்த படத்துக்கு:

    வண்ணமயில் கார்ஓட்ட வந்துவிட்டார் என்றாலே
    எண்ணெய் இல்லாமலே இந்தக்கார் ஓடாதோ !

    • அரிய தத்துவம்- எளிய சொல்லாட்சி

    தத்துவம் என்பது அறிவின் சாறு. வாழ்வில் பட்டு அறிந்த அனுபவ உண்மைகளின் திரட்டு. அதனால் பொதுவாக அவை புரிந்து கொள்வதற்கு எளிதாக இருப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சந்தக் கவிதைகளில் கூட, தத்துவம் குழந்தையின் சிரிப்பைப்போல் எளிமையாகப் பூத்திருக்கும். இனத்தால், மதத்தால், சாதியால், செல்வ நிலையால் நமக்குள் பேதங்கள் (பிரிவினைகள்) கூடாது என்பதை எவ்வளவு எளிதாக விளக்குகிறார் பாருங்கள் :

    சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்துப் பார்த்ததிலே
    வடநாட்டு எலும்புஎன்று வந்தஎலும்பு இல்லையடி
    தென்னாட்டு எலும்புஎன்று தெரிந்தஎலும்பு இல்லையடி
    எந்நாட்டு எலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி
    ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை
    எரியூட்ட வில்லைஎனில் எந்நாளும் துன்பமடி

    (இனமேது-4ஆம்தொகுதி)

    • குறிப்புமொழி

    ஆட்டனத்தி ஆதிமந்தி கண்ணதாசன் படைத்த சிறந்த காவியம். கதையின் தலைவன் ஆட்டனத்தி, சேரமன்னன். வீரத்துடன், ஆடல் கலையிலும் வல்லவனாக விளங்கினான். இவனிடம் ஆடல் கற்க வந்த மருதி, ஆதிமந்தி இருவரும் அத்தியிடம் காதல் கொண்டனர். அவன் நெஞ்சமோ மருதியை விரும்பியது. அவளுக்காகவே கரூர் மன்னனுடன் போர் செய்தான். வென்றான். அதற்குப் படை உதவிய சோழன் கரிகாலனின் மகளான ஆதிமந்தியை மணக்க நேர்ந்தது. மருதி புத்தத் துறவியானாள். காவிரிப் புதுவெள்ளத்தில் நீராடும்போது அத்தியை வெள்ளம் அடித்துச் சென்று கடலில் தள்ளியது. அங்கிருந்த மருதி அவனை மீட்டுக் காப்பாற்றினாள். தானே மூச்சை அடக்கி உயிர்நீத்தாள். கணவனைத் தேடிக் கரைவழியே வந்த ஆதிமந்தி அவனைக் கண்டாள். இருவரும் மருதிக்குச் சிலைவடித்துக் காதல் தெய்வமாய் வழிபட்டனர். இது காப்பியக்கதை. சங்க இலக்கிய வரலாற்றுக் குறிப்பைக் கொண்டு கண்ணதாசன் படைத்த அழகிய குறுங்காவியம் இது. இதில் வரிக்குவரி அழகிய சொல்லாட்சியால் மயக்குகிறார் கவிஞர்.

    ஆதிமந்தி காதல் உணர்வால் உறக்கம் இன்றித் தவிக்கிறாள். அறையை விட்டு வெளியே வருகிறாள். மருதியுடன் ஆட்டனத்தி சேர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கிறாள். திகைக்கிறாள். இதைப் பண்பாடு குறையாத குறிப்பு மொழியால் வருணிக்கிறார் கண்ணதாசன். இதில் அவரது அழகிய சொல்லாட்சித் திறன் விளங்குகிறது.

    துயிலோடும் பகையான தோகை கண்டாள்
    தோள்தூங்கும் வாள்வீரன் துணையும் கண்டாள்
    பயிராகிப் போயிற்றாம். அறுவ டைதான்
    பாக்கிஎன்னும் நிலைகண்டாள் பதுமை ஆனாள்

    (துயில் = தூக்கம்; தோகை = மயில்போன்ற மருதி ; பதுமை = சிலை)
    • உருவகச் சொல்லாட்சி

    மற்றொரு சிறந்த குறுங்காவியமான ‘மாங்கனி’யில் மாங்கனியின் சிவந்த உதடு காதலன் முத்தமிட்டதால் வெளுத்திருக்கிறது. இதை,

    காதல், துடிப்பினால் சிவப்பைத் தின்ற
    துட்டனும் யாரோ..

    (துட்டன் = துஷ்டன்; குறும்புக்காரன்)

    எனப் பாடுகிறார்.

    மாங்கனி தன் தாயிடம் வாய்திறந்து இனிமையாகப் பேசுகிறாள். இதைக் கவிஞர்,

    அந்தப் பூக்காட்டின் வாய்ப்பூட்டைத் தேன் திறக்கும்

    என்று உருவகச் சொல்லாட்சியால் உரைக்கிறார்.

    1.4.2 உவமைகள்

    கவிதையின் அழகுக்கே அழகு சேர்ப்பது உவமை. கற்பனைக்கு வளம் சேர்ப்பது. ஒரு பொருளுக்கு ஒப்பாக இன்னொரு பொருளைக் காண்பவன், வாழ்க்கைக்கே புதுப்பொருள் காண்கிறான். உலகில் ஒரு முறை ஒரு வடிவத்தில் பிறக்கின்ற ஒருபொருள், எண்ணங்களில் பலமுறை பலவடிவங்களில் புதுப்பிறப்பு எடுக்கிறது. அந்தப் புதுமையில் வாழ்க்கை புதுச்சுவை பெறுகிறது. உவமை எப்போதும் இனிப்பது இதனால்தான்.

    • உவமையில் புதுமை

    கண்ணதாசனின் உவமைகளிலே ஒரு புதுமை இருக்கும். மாலைப் பொழுது, மலைகளிடையே மறையும் சூரியன், காதல் உணர்வுடன் ஓர் இளைஞன் இக்காட்சியைக் காண்கிறான்.

    மார்பகத்தின் ஆடைக்குள் கடிதம் வைக்கும்
    மங்கையரின் கைபோல, மலைகள் ஊடே
    தேர் உருட்டிக் கதிர் சென்றான்....
    (இரவே போதும், முதல்தொகுதி)

    என்று இதை அழகான உவமையால் சொல்கிறார் கண்ணதாசன்.

    மாங்கனியின் சிரிப்பு எப்படி ஒலிக்கிறது?

    வெள்ளிக்காசு ஒருபிடியைக் கீழே கொட்டி
    விட்டாற்போல் அலட்சியமாய்ச் சிரித்து,,,,,,

    என்கிறார் கண்ணதாசன்.

    ஆட்டன் அத்தியை அடித்துப் போகும் வெள்ளம் எப்படிப் பெருகி வந்தது தெரியுமா? கதை கட்டத்தை வெள்ள ஓட்டத்துடன் சேர்த்து உவமையால் காட்டுகிறார்.

    காவிரி வெள்ளம் கணிகை மா மருதிகொண்ட
    கவலைபோல் மேலும் பல்கும்....

    (பல்கும் = பெருகும்)

    காதலில் தோற்றுக் கண்ணீர் வடித்தபடி இருக்கும் மருதியின் துயரத்தைப் போல் மேலும் மேலும் வெள்ளம் பெருகுகிறது என்கிறார்.

    உவமையை வடிவம் மாற்றிப் புதிய முறையில் சொல்வது இவரது தனிச்சிறப்பு. ‘மாங்கனி’ காவியத்தில் நடனமாடும் மாங்கனியை வருணிக்கிறார்.

    ‘வாள் போன்ற விழி’ என்பது பழமையான மரபு உவமை. கண்ணதாசன் சொல்லும் முறையில் சிறிய மாற்றம் செய்து இதைப் புதுமையாய்ப் பொலிய வைக்கிறார். விழியை வாளாக உருவகம் செய்துவிட்டு இமைக்கு வாள் உறையை உவமை காட்டுகிறார்.

    “கொலை வாளுக்கு உறைபோல விழிவாளுக்கு இமை”.

    • உவமையில் உயர்நோக்கம்

    சிங்கப்பூர்-மலாயா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த கண்ணதாசன் பினாங்கு நகரில் தமிழர், மலாயர், சீனர் ஆகிய மூன்று இன மக்களும் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டார். அமைதிப் பண்புக்கும் தாய்மை அன்புக்கும் எடுத்துக்காட்டாக இருப்பது பசு. பசுக்கள் தமக்குள் உறவு பூண்டு ஒற்றுமையாக இருப்பது போல இம்மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்டு மகிழ்கிறார். கவிதையில் பாராட்டுகிறார். வாழ்த்துகிறார்.

    ஆவினம் தமக்குள் காணும்
    அன்பினம் போல இங்கே
    மூவினம் தமிழ், மலாயர்
    மூப்பு இலாச் சீனர் சேர்ந்து
    சாவிலும் வாழ்விலும் சேர்
    சமத்துவ வாழ்க்கை வாழும்
    ஆவணம் கண்டேன் ! இந்த
    அன்பிலே பினாங்கு வாழ்க.

    (ஆவினம் = பசுஇனம்; மூவினம் = மூன்றுஇனம்; மூப்புஇலா = இளமை மாறாத; ஆவணம் = உறுதிச்சான்று)

    இந்த ஒற்றுமையும் சமத்துவமும் நீடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கம் இந்த உவமையில் பளிச்சிடுகிறது. பினாங்கு கண்டேன் என்னும் இக்கவிதை 5ஆம் தொகுதியில் உள்ளது.

    1.4.3 உருவகங்கள்

    உவமையின் செறிவான வடிவமே உருவகம் என்பதை அறிவீர்கள். கண்ணதாசனின் கவிதைகளில் உருவக நடை ஊடுருவிக் கிடக்கிறது. மாங்கனியை உருவகத்தால் வருணிக்கிறார்:

    விரிக்காத தோகைமயில் ! வண்டு வந்து
    மடக்காத வெள்ளைமலர் ! நிலவு கண்டு
    சிரிக்காத அல்லிமுகம் ! செகத்தில் யாரும்
    தீண்டாத இளமை நலம் பருவ ஞானம் !

    (செகத்தில்= உலகத்தில்)

    திரைப்பாடல்களிலும் இலக்கிய வளம் சேர்த்த இயற்கைக் கவிஞர் கண்ணதாசன். குழந்தையை இளந்தென்றல் காற்றாக உருவகம் செய்கிறார். அந்தத் தென்றலைப் பற்றி மேலும் உருவகம் செய்கிறார்.

    நதியில் விளையாடிக் கொடியில்
    தலைசீவி நடந்த இளந்தென்றலே...

    தென்றல் நதியில் விளையாடுகிறதாம். கலைந்த தலையைக் கொடியில் வாரிக் கொள்கிறதாம். உருவகத்துக்குள் எத்தனை உருவகம், பாருங்கள்.

    வாழ்வே போராட்டம் ஆகிவிட்டது இளைஞன் ஒருவனுக்கு! தன் நிலையை அவனே பாடுவது போல் ஒரு திரைப்பாடல். முழுதுமே உருவகங்களால் ஆனது. உலக இலக்கியத் தரம் வாய்ந்தது:

    மயக்கம் எனது தாயகம்
    மவுனம் எனது தாய்மொழி
    கலக்கம் எனது காவியம் - நான்
    கண்ணீர் வரைந்த ஓவியம்.
    நான்.....
    பகலில் தோன்றும் நிலவு - கண்
    பார்வைக்கு மறைந்த அழகு
    திரைமூடிய சிலை நான் -துன்பச்
    சிதையில் மலர்ந்த மலர்நான்...

    (மவுனம் = பேசாதநிலை; சிதை = பிணம் எரியும் நெருப்பு)

    உருவகங்களை அடுக்கி ஓர் உயிர் ஓவியம் தீட்டியிருக்கிறார். இறுதியில் “விதிவேறு மதிவேறு” என்னும் பழமொழியின் விளக்கமே நான் என்று உருவகத்தில் முடிக்கிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 17:16:54(இந்திய நேரம்)