தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இக்கால உலகியல்

 • 3.4 இக்கால உலகியல்

  நண்பர்களே ! இயற்கையிலும் காதலிலும் பிச்சமூர்த்தி கண்ட வாழ்வியல் தரிசனங்களை, ஆன்மிக இணைவை இதுவரை கண்டோம். தற்கால வாழ்வியலில் - உலகியலில் அவரது பார்வை பற்றி இனி அறியலாம்.

  இயற்கையின் சீரான இயக்கம், அழகு, தூய்மை இவற்றில் ஆழ்ந்து கரையும் மனம் பிச்சமூர்த்தியின் கவிமனம். இவரது ஆன்மிகமாகவும் இதுவே இருக்கிறது.

  மனிதனின் சுயநலம், பொருள் தேடும் பேராசை இவை உலகத்தின் இனிமைகளைச் சிதைக்கின்றன. இவற்றின் மீது அவருக்கு எல்லை இல்லாத வெறுப்பு எழுகிறது. வெறுப்பை நெருப்பாக உமிழாமல் கேலி செய்யும் சிரிப்பாக வெளிப்படுத்துவது கவிஞனின் தனி இயல்பு. கேலியாக, பரிகாசம் தொனிக்க, நையாண்டி செய்து சுட்டிக் காட்டும் கவிதைக் கலை ‘அங்கதம்’ எனப்படும். பிச்சமூர்த்தியின் அங்கதம் தனித்தன்மை வாய்ந்தது.

  3.4.1 கள்ளச் சந்தை

  காந்தியின் தூய வாழ்க்கையால் கவரப்பட்டவர் பிச்சமூர்த்தி. சமூக வாழ்வில் எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், சேவை இவை இவர் வியந்து பின்பற்றிய காந்திய நெறிகள். சிறுமை கண்டு பொங்கும் நெஞ்சம் இவருடையது. ‘வாழ்வில் பெரும் செல்வத்தைத் தேடிக்கொள்ள எந்தக் கெட்ட வழியையும் பின்பற்றலாம்’ என்னும் ‘பிழைப்பு வாதத்தை’ இவர் கடுமையாக வெறுக்கின்றார்; எதிர்க்கின்றார். பெட்டிக் கடை நாரணன் என்ற அங்கதக் கவிதையாக இந்த எதிர்ப்பு உணர்வு வெளிப்பட்டு உள்ளது.

  உலகப் போர்க் காலத்தில் வளர்ந்த ‘கள்ளச் சந்தை’ வணிகம் பற்றியது இக்கவிதை. போரின் விளைவால் உற்பத்தி, போக்குவரத்து இவை பாதிக்கப்பட்டு உணவு போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பேராசை கொண்ட வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைத்து, மறைவாக மிக அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். மேலும், கலப்படம் செய்தும் மக்களை ஏமாற்றினர். இதற்குக் கள்ளச்சந்தை என்றும் கறுப்புச் சந்தை என்றும் பெயர். அரசாங்கம் இந்தக் கொள்ளைக்காரர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் பங்கீட்டுக் கடை (ரேசன் கடை)களை ஏற்படுத்தியது. அந்தக் கடை உரிமை பெற்ற வணிகர்களும் இந்த வகைக் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் பிச்சமூர்த்தி படைத்த கவிதைதான் ‘பெட்டிக்கடை நாரணன்’.

  முதலில் பெட்டிக்கடை வைத்த நாரணன் அரசாங்க அதிகாரி ஒருவர் தயவால் பங்கீட்டுக் கடை உரிமம் பெற்றான். அரிசியுடன் களிமண் உருண்டை கலப்படம் செய்தும், மண்ணெண்ணெயைக் ‘கறுப்பில்’ விற்றும் கொள்ளை இலாபம் அடைந்தான். தன்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறான். கவிஞர் நையாண்டியாய்ப் பேசுகிறார் :

  மண்ணெண்ணெய் வர்ணம்
  இரண்டுதான் என்றாலும்
  மஞ்சளும் வெளுப்பும்
  என்றாலும், பலபேர்கள்
  கறுப்புஎன்று கதறினர்...

  பாவமான கலப்படத்தை நியாயப்படுத்தி அவன் பேசும் பேச்சும் பரிகாசமாய் வெளிப்படுகிறது :

  பாவம் ஒன்று இல்லாவிட்டால்
  பார் உண்டா?
  பசி உண்டா?

  (பார் = உலகம்)

  மண்ணில் பிறப்பதற்கு
  நெல் ஒப்பும்போது
  களிமண்ணில் கலந்திருக்க
  அரிசி மறுப்பது இல்லை....
  நட்சத்திரம் போல
  நல்முத்துப் போல
  சுத்தமாக அரிசிவிற்க
  பங்கீட்டுக் கடைஎன்ன
  சல்லடையா?
  முறமா?.....

  மூட்டை பிரிக்கும் முன்னர்
  முந்நூறு பேர் இருந்தால்
  சலிப்பது எங்கே?
  புடைப்பது எங்கே?
  புண்ணியம் செய்யத்தான்
  பொழுது எங்கே?
  அங்கயற் கண்ணியின்
  அருள் என்ன சொல்வேன் !
  பங்கீடு வாழ்க !
  பாழ்வயிறும் வாழ்க !

  வாழ்வில் தினமும் நடப்பதை அப்படியே இலக்கியமாய் ஆக்குவதை ‘நடப்பியல்’ என்பர். பேச்சு நடையில் நடைமுறை வாழ்க்கையின் புதிய கோலங்களை நேராகப் பேசுகிறார். கற்பனையும் உவமை உருவக அணிகளும் இருந்தால்தான் அது கவிதை என்ற பழமையான கருத்தை உடைத்து விட்டது இந்தப் புதுக்கவிதை.

  ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில் ‘பெட்டிக் கடை நாரணன்’ முக்கியமான கவிதை’ என்கிறார் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி.

  3.4.2 விஞ்ஞானம்

  கடவுளின் இயற்கைப் படைப்பு, மனிதனின் செயற்கைப் படைப்பு இரண்டில் எது உயர்ந்தது? விஞ்ஞான அறிவு இயற்கையை வெல்கிறது, ஆனால் அருள் இல்லாத அறிவு, அழிவுக்கே கொண்டு செல்லும் என்கிறது பிச்சமூர்த்தியின் கவிஉள்ளம்.

  விஞ்ஞானியின் பக்கம் நின்று அவன் சாதனையைப் புகழ்வதுபோல் பழிக்கிறார் பிச்சமூர்த்தி. இதை ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ என்று பழைய கவிமரபு சொல்லும். இந்த அங்கதக் கவிதை பிச்சமூர்த்தியின், இயற்கை பற்றிய உயர்ந்த மதிப்பீட்டைக் காட்டுகிறது. நகைச்சுவை உணர்வுக்குச் சான்றாகிறது.

  கடவுளால் என்ன முடியும்?
  புல்லைச் செய்வார்
  மேய என்று மாட்டைச் செய்வார்
  பொங்கும் நுரைப் பாலைச் செய்வார்
  ஊட்ட என்று கன்றைச் செய்வார்

  விஞ்ஞானி சொல்கிறான்: ‘நாங்கள் புல்லுக்குப் போட்டியாகக் கிருமிக் குண்டு செய்வோம்; வைக்கோலில் தோல் கன்று செய்து மாட்டைப் பால்சுரக்கச் செய்வோம்; உணவுச் சத்துகள் செய்து உழைப்புக்கே ஓய்வு தருவோம்; ஆண்பெண் சேர்க்கை இன்றி உயிரை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டு பிடிப்போம்; கோள்களில் தளம் அமைப்போம்’ என்று தன் பெருமையை ஆணவத்துடன் பேசுகிறான்.

  அருள் என்னும் ஜால வித்தை
  செலாவணி ஆகா தய்யா
  மடமையால் உலகைச் செய்தால்
  அறிவினால் களைதல் தவறா?

  இறைவன் படைத்த இயற்கை மடமையில் இயங்குகிறதாம். விஞ்ஞானி அறிவு கொண்டு அதைத் திருத்துகிறானாம் ! ‘அருள்’ ஒரு மந்திரவித்தை. இனி அது உலகிற்குப் பயன்படாது என்று சொல்கிறான். விஞ்ஞானத்தைப் பெருமைப் படுத்துவதுபோல் கவிதை முடிகிறது. உண்மையில் முடியவில்லை தொடங்குகிறது. நம் சிந்தனையை எழுப்புகிறது. இயற்கை படைக்கிறது; செயற்கை - அறிவியல் அழிக்கிறது. இந்த அழிவுச் சக்தியின் இழிவைப் புகழ்வதுபோல் அங்கதமாகப் பழிக்கிறார். விஞ்ஞானம் அழிவுக்குப் பயன்படக் கூடாது என்பதே கவிஞரின் நோக்கம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2018 17:38:27(இந்திய நேரம்)