தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழிபெயர்ப்பு

  • 1.1 மொழிபெயர்ப்பு

    ஒரு மொழியில் உள்ள கருத்து, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எனப் பல துறைகளிலுள்ளவற்றை மற்றொரு மொழியில் மாற்றுவது மொழிபெயர்ப்பு ஆகும். தகவல் தொடர்புச் சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம் என்ற அனைத்து ஊடகங்களும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

    1.1.1 மொழிபெயர்ப்பின் தேவை

    சாதாரணமாக ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசுவோராக வாழ்கின்றனர். சில நாடுகளில் பல மொழிகள் பேசுவோர் வாழ்கின்றனர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். மக்கள் அனைவரும் தங்களுக்கிடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்ளும்போது இருவரும் வேறு வேறு மொழிகளில் தொடர்பு கொண்டால் அப்போது இருவருக்கிடையில் மொழிபெயர்ப்பு அவசியமாகிறது.

    பதிப்பு ஊடகங்களான இதழ்கள், நூல்கள் முதலியன மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் அவற்றிற்கும் இன்றைய சூழலில் அவசியம் ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பின் நோக்கம் கருத்துப் பரவல் என்பதால் அது இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு அதன் அவசியம் தற்காலத்தில் உணரப்பட்டு, பெருமளவு மொழிபெயர்ப்புப் பணிகள் நடக்கின்றன. இதில் தொடர்புடையன தருமொழி - மொழிபெயர்ப்பாளர் - பெறுமொழி ஆகியனவாகும்.

    1.1.2 மொழிபெயர்ப்பில் மொழிகளின் பங்கு

    மொழிபெயர்ப்பில் பங்குபெறும் மொழிகளைத் தருமொழி, பெறுமொழி, வழிமொழி என அழைக்கின்றனர்.

    • தருமொழி

    மொழிபெயர்ப்பின் போது, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்துகளை மொழிபெயர்க்கிறோம். அப்போது அந்த முதல்மொழியை மூலமொழி அல்லது தருமொழி என்கிறோம்.

    சான்றாக: தமிழிலிருந்து இந்திமொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தால் அப்போது தமிழ்மொழி தருமொழி ஆகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டால் அப்போது ஆங்கிலம் தருமொழி ஆகிறது.

    ஆகவே எந்த மொழியின் கருத்துகளை வேறுமொழிக்குப் பெயர்க்கிறோமோ அந்த மொழி தருமொழி என்கிறோம்.

    • பெறுமொழி

    மொழிபெயர்ப்புப் பணியில் தருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்க்கும் போது அந்த மற்றொருமொழி பெறுமொழி ஆகிறது. இதனை இரண்டாம்மொழி என்றும் அழைக்கிறோம்.

    சான்றாக: தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஒரு நூலை மொழிபெயர்க்கிறோம் என்றால் அப்போது தமிழ் தருமொழியாகவும் ஆங்கிலம் பெறுமொழியாகவும் உள்ளன. அவ்வாறே ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது ஆங்கிலமொழி தருமொழியாக அதாவது முதல்மொழியாகவும், இந்திமொழி பெறுமொழியாக அதாவது இரண்டாம்மொழியாகவும் உள்ளன.

    • வழிமொழி

    ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படும் போது அதில் முதல்மொழியான தருமொழியும் இரண்டாம் மொழியான பெறுமொழியும் இருப்பது இயல்பு. அதே மூலமொழி சீனமாகவும் இரண்டாம் மொழி ஆங்கிலமாகவும் மூன்றாம் மொழி தமிழாகவும் இருந்தால் அப்போது இரண்டாம்மொழியாகிய ஆங்கில மொழியை வழிமொழி என்கிறோம்.

    சான்றாக: இந்திமொழியில் உள்ள பிரேம்சந்த் அவர்களின் சிறுகதையோ, புதினமோ முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அப்போது ஆங்கிலமொழி வழிமொழி ஆகிறது. இதில் மொழிபெயர்ப்பாளர் மேலும் ஒரு திறமையான மூலமொழியின் சமூகப் பண்பாட்டுப் பின்னணியை அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது விரும்பத் தக்கதாகும்.

    1.1.3 மொழிபெயர்ப்பாளர்

    மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இது பற்றியெல்லாம் முந்தைய பாடங்களில் நன்கு அறிந்திருப்பீர்கள்.

    1.1.4 மொழிபெயர்க்கக் கூடியவை

    ஒரு மொழியில் உள்ள சிறந்த கருத்துகள், இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் என அனைத்தையும் மொழிபெயர்க்கலாம். இரண்டாம் மொழியாகிய பெறுமொழிக்குத் தேவையான எல்லாவற்றையும் பல்வேறு மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துக் கொள்வதில் தவறில்லை. சான்றாக, ஆங்கிலத்திலிருந்து தமிழில் அறிவியல் நூல்கள் பல மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆங்கில இலக்கியங்கள், ஆங்கிலம் வழியாக இலத்தீன் அமெரிக்க, சீன, ரஷ்ய ஜப்பானிய இலக்கியங்கள் பல தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சிறந்த உலக அரசியல்வாதிகளின் பேருரைகள், கடிதங்கள், பேட்டிகள் (நேர்காணல்கள்) எனப் பல தமிழிலும் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆகவே பெறுமொழிக்குத் தேவையான அனைத்தையும் மூலமொழிகளிலிருந்து மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இப்படிப் பெயர்க்கப்படும் அனைத்தும் பெறுமொழி பேசும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுவதாக இருக்கும். ஆகவே, மொழிபெயர்ப்புப் பணியைப் பலர் முன்வந்து செய்யவேண்டும். தமிழ் மொழியில் உள்ள எத்தனையோ நூல்கள் மொழிபெயர்க்கப்படாமல், உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாமல் இருக்கின்றன. இந்த முயற்சியிலும் பலர் ஈடுபட வேண்டும்.

    1.1.5 நேரடி மொழிபெயர்ப்பு

    மொழிபெயர்ப்பு என்றதும் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதா அல்லது பொருளை மட்டும் மொழிபெயர்ப்பதா என்ற ஐயம் எழுவது உண்டு. இரண்டையும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மொழிபெயர்ப்பு என்பது அறிவியல்துறையும் இலக்கியத்துறையும் கலந்த ஒன்றாகும். அறிவியல் கருத்துகளை, விதிகளை, வாய்பாடுகளை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கலாம். இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போது பொருளை மட்டும் மொழிபெயர்த்தால் போதும். இந்த இரண்டு வழிமுறைகளிலும் நேரடி மொழிபெயர்ப்புகள் அமைகின்றன. நேரடி மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியின் கருத்துகளை மிகுதிப் படாமலும் குறைக்காமலும் உள்ளது உள்ளவாறு மொழிபெயர்க்கப் படுவதாகும். அப்படி மிகுந்துவிட்டாலோ குறைந்து போனாலோ மூலநூல் சொல்ல வந்த கருத்தை இரண்டாம் மொழி வாசகன் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கும். அத்துடன் புதிய நூலாகவே காட்சி அளிக்குமாறு அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் போது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல், பொருளை மொழிபெயர்த்தல் ஆகிய இரண்டு வழிமுறைகளையும் பின்பற்றலாம்.

    சான்று:

    LIGHT ENERGY : The energy we get from the sun is called light energy. It helps the plants to prepare starch.

    ஒளி ஆற்றல்: சூரியனிடமிருந்து நாம் பெறும் ஆற்றல் ஒளிஆற்றல் எனப்படும். இது தாவரங்கள் தங்கள் உணவைத் (ஸ்டார்ச்) தயாரித்துக் கொள்ளப் பயன்படுகிறது.

    இச்சான்றில், Starch என்பதற்கு இணையாக உணவு என்ற தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லது ‘ஸ்டார்ச்’ என்று அச்சொல்லை ஒலிபெயர்த்தும் அமைத்துக் கொள்ளலாம்.

    வாய்பாடுகளை அப்படியே அமைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய நேரடி மொழிபெயர்ப்பைப் பொதுவாக அறிவியல் நூல்கள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படும்போது பின்பற்ற வேண்டும்.

    இனி, தழுவல் என்பது பற்றிப் பார்க்கலாம்.

    1.1.6 தழுவல்

    தருமொழியில் எழுந்த இலக்கியத்தைக் கற்று, அதே கதையமைப்பினைப் பெறுமொழியில் அதன் தன்மைக்கேற்ப அப்பெயர்களையும் இடங்களையும் மாற்றிக் கட்டமைப்பது தழுவல் ஆகும். வெளிப்படையாகத் தழுவல் என்பது புலப்படாத நிலையினதாக இருக்கும். தமிழ்மொழியுடன் நெடுங்காலம் தொடர்பு கொண்ட சமஸ்கிருத மொழியாகிய வடமொழியிலிருந்து தமிழுக்குத் தழுவலாக வந்த நூல்கள் பல உள்ளன. தமிழிலிருந்து பிறமொழிகளுக்குத் தழுவல்களாகச் சென்றிருக்கலாம். ஆனால் தழுவல் என்பதே தெரியாத நிலையில், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய பழைய நூல்கள் வடமொழியிலிருந்து தழுவியவை என்பதை அறியலாம்.

    சீவகசிந்தாமணி வடமொழியில் உள்ள க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் உள்ள கதையைத் தழுவி இயற்றப்பட்டதாகும்.

    கம்பராமாயணம் வடமொழியில் வான்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது.

    புது நூலா தழுவல் நூலா என்பது எளிதில் புலப்படாத நிலையில் தழுவல் நூல்கள் அமைந்திருக்கும். பலமொழி இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவர்கள் எளிதில் அறிந்துகொள்வர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 09:40:06(இந்திய நேரம்)