தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடகம்

  • 2.7 நாடகம்

    தமிழில் ஏறத்தாழ 250 நாடக நூல்கள் மொழிபெயர்ப்பாகப் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் கிடைக்கின்றன. ஆங்கிலம், பிரெஞ்சு, மற்ற உலகமொழிகள் பலவற்றிலிருந்தும், வடமொழி, இந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகள் பலவற்றிலிருந்தும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கள் தமிழில் உள்ளன.

    ஆங்கில மொழி அறிந்தோரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நாடகங்களில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

    ஆங்கிலத்திலிருந்து ஷேக்ஸ்பியர் தவிர வேறு சிலரது படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    2.7.1 வடமொழி நாடகங்கள்

    முன் நூற்றாண்டுகளில் தமிழுக்கு ஏராளமான வடமொழி நாடகங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் வந்துள்ளன. அவை கதைவடிவிலும் கவிதை வடிவிலும் வந்துள்ளன. எனினும் இந்நூற்றாண்டிலும் அவை நாடக வடிவமாகவும், மொழிபெயர்க்கப்பட்டு அமைகின்றன. காளிதாசனின் சாகுந்தலம் இந்த நிலையில் முதலிடம் பெறுகிறது. காளிதாசனின் மாளவிகாக்கினி மித்திரம், விக்ரமோர்வசியம் ஆகியவையும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

    ஹர்ஷனின் ரத்நாவளி 1878, 1918 ஆகிய ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

    சூத்திரகனின் மிருச்சகடிகாவும் தமிழில் தரப்பட்டுள்ளது. இதனை மண்ணியல் சிறுதேர் என்று பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் தமிழாக்கினார்.

    பவபூதியின் உத்தர ராம சரித்திரம், மாலதி மாதவம் என்பன தமிழில் வந்துள்ளன.

    பாஸகவியின் பிரதிமா நாடகம், தூதகடோத்கசம், ஸ்வப்ன வாசவ தத்தம் என்பன தமிழில் அமைகின்றன.

    பாணபட்டனின் காதம்பரி மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

    விசாக தத்தனின் முத்ரா ராக்ஷஸம் தமிழில் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு பலமொழிகளிலிருந்து நாடகங்கள் தமிழில் வந்துள்ளன. ஆயினும் சிறுகதை புதின மொழிபெயர்ப்புகளை ஒப்பிட நாடகத்தின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 11:53:50(இந்திய நேரம்)