தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆங்கில மொழி நூல்கள்

  • 4.5 ஆங்கில மொழி நூல்கள்

    ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அதன் விளைவாகத் தமிழகத்தில் ஆங்கில இலக்கியங்கள் சிலவற்றைத் தமிழில் தருவதற்கு அறிஞர்கள் சிலர் முயன்றனர். ஆங்கில வழிக் கல்வியும் இம்முயற்சிக்குத் துணை நின்றுள்ளது.

    4.5.1 மொழிபெயர்ப்புகளும் தழுவல்களும்

    சென்ற 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழில் முதன்முதலாகப் புதினம் என்ற இலக்கிய வகையைப் புகுத்தியவர் ஆவார். ஆனால் அவர் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடாது மேற்கு நாட்டுச் சிந்தனைகளையும் பண்பாட்டையும் பல தமிழ் நூல்களுக்காகப் பயன்படுத்தியுள்ளார். தமிழில் தற்சார்பற்ற பாடல்களைச் சமயத்தின் பிடியிலிருந்து மீட்டு, மனித வாழ்க்கை என்ற புதிய பாடுபொருளைக் கொண்டு பல கவிதைகளை இவர் இயற்றியுள்ளார்.

    வேத நாயகரின் பெண்மதி மாலை (பெண் புத்தி மாலை) என்ற நூல், பேகன் (Bacon) என்ற அறிஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் சாரமாக உள்ளதைக் காண்கிறோம். இவர் காலத்திலே வாழ்ந்த H.A. கிருஷ்ணபிள்ளை, ஆங்கிலத்தில் ஜான் பனியன் என்பவர் எழுதிய ஆன்மாவின் முன்னேற்றம் அல்லது பரதேசியின் முன்னேற்றம் (Pilgrims progress) என்னும் நூலினைத் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்ற சிறப்பு மிகுந்த கிறித்தவத் தமிழ்க் காப்பியமாகப் படைத்துள்ளார்.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மில்டனுடைய பேரடைஸ் லாஸ்ட் (Paradaise Lost) என்னும் காப்பியத்தின் முதல் காண்டத்தை, சுவர்க்க நீக்கம் என்னும் பெயரால், வெ.ப.சுப்பிரமணிய முதலியார் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. இதனையே சாமுவேல் வி.தாமஸ் என்பவர் பூங்காவனப் பிரளயம் என்னும் கதைப் பாட்டாகத் தந்துள்ளார்; கவிஞர் டெனிசனின் Idylls of the King என்ற நெடும்பாடலையும் மொழிபெயர்த்துள்ளார்.

    The Golden Treasury of poems என்ற நூலில் சிறப்புற்று விளங்கும் எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வே.திரிகூட சுந்தரம் பிள்ளை ஆங்கிலக் கவிதை மலர்கள் எனும் நூலாகத் தமிழில் தந்துள்ளார். கிரே என்னும் கவிஞரின் கல்லறைக் கவிதை (The Elegy written in the country churchyard) எனும் சிறப்புமிகு கவிதையை நீ.கந்தசாமிப் பிள்ளை என்பவர், இரங்கற்பா எனும் நூலாக மொழிபெயர்த்துள்ளார்.

    ஷேக்ஸ்பியரின் Venus and Adonis என்னும் பாடலை அ.கு.ஆதித்தனார் காமவல்லி என்ற கதைப்பாடலாகவும், Helen of Troy என்ற பாடலை துறாய் செல்வம் எனும் கதைப்பாடலாகவும் சொற்பொருள் நயமுடன் மொழிபெயர்த்துள்ளார்.

    எட்வின் ஆர்னால்டின் The Light of Asia என்ற கதைப்பாடலைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஆசியஜோதி என்ற கதைப்பாடலாகப் படைத்துள்ளார். Shorab and Rustom என்ற வீரச்சுவை மிகுந்த ஆங்கிலக் கதைப் பாடலைக் கவிஞர் முடியரசன் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு ஆங்கிலக் கவிதைகள் பலவற்றை, தனித்தனிப் பாடலாகப் பல அறிஞர்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.

    4.5.2 நாடகங்கள்

    உலகப் புகழ் வாய்ந்த ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை, தமிழில் பல அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர். சிலர் தழுவல்களாக அமைத்துள்ளனர். ஹாம்லெட் கதைக் கருவைத் தழுவிப் பம்மல் சம்பந்த முதலியார் அமலாதித்தன் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். மனோகரா என்ற புதியதொரு தழுவல் நாடகத்தையும் உருவாக்கியுள்ளார். இவரே ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தைத் தழுவி சிம்மபுரி வீரன் என்ற பெயரில் தழுவலாக அமைத்துள்ளார்.

    As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுர வணிகன் என்ற பெயர்களில் பம்மல் சம்பந்த முதலியார் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ளார்.

    ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பெரும்பாலானவை, பல பெயர்களில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

    இவையல்லாமல், கோல்ட்ஸ்மித், பென்ஜான்சன், பெர்னார்ட்ஷா முதலிய ஆங்கில நாடகாசிரியர்களின் படைப்புகள் பல, தமிழில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

    பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் லிட்டன் பிரபு படைத்த The secret way என்ற கவிதையைக் கருவாகக் கொண்டு மனோன்மணீயம் என்ற நாடகத்தைப் படைத்துள்ளார். இந்த நாடகத்தில் இடம் பெற்றுள்ள சிவகாமியின் சபதம் என்ற கிளைக்கதை சிறந்த காதல் காப்பியமாகும். இது ஆலிவர் கோல்டு ஸ்மித் எழுதிய The vicar of wakefield என்ற புதினத்தில், இளநிலை பாதிரி என்ற தலைப்பில் உள்ள கதையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

    4.5.3 சிறுகதைகள்

    தமிழில் சிறுகதை என்ற இலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர் வ.வே.சு.ஐயர் ஆவார். அவருடைய மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ளவை ஆங்கில, பிரெஞ்சு, இத்தாலிய சிறுகதைகளின் போக்கைத் தழுவியனவாக அமைந்துள்ளன.

    அவரைத் தொடர்ந்து கு.ப.இராஜகோபாலன், புதுமைப்பித்தன் முதலியோர் தமிழில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை மொழிபெயர்த்துள்ளனர். புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகத்துச் சிறுகதைகள் தனிநூலாக வெளிவந்துள்ளது. தொடக்க காலச் சிறுகதைகளில் பல ஐரோப்பிய இலக்கியங்களைத் தழுவியும், வங்கக் கவிஞர் தாகூரின் சிறுகதைகளைத் தழுவியும் அமைந்துள்ளன.

    தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஆங்கிலச் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வகைக்கு மெருகூட்டி உள்ளன. சாசருடைய The Canterbury Tales எனும் கதைகள், தமிழில் கேண்ட்டர்பரிக் கதைகள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    ஆஸ்கர் ஒயில்டின் சிறுகதைகளைத் தொகுத்து, சிறந்த சிறுகதைகள் என்ற தலைப்பில், தமிழில் தந்துள்ளனர்.

    ருட்யார்டு கிப்லிங்கின் கதைகள் வில்லியம் மாரிஸ் கதைக் கொத்து, ஆகியவை தமிழில் வெளிவந்துள்ளன. நாத்தானியல் ஹாவ்தார்னின் சிறுகதைகள், அற்புதக் கதைகள் எனவும், எட்கர் ஆலன்போவின் கதைகள் இதயக்குரல் எனவும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    இடைக்காலத்தில் ஆப்பிரிக்க இலக்கியங்கள், மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் முகிழ்த்த இலக்கியங்கள் எனப் பல ஆங்கிலம் வழியாகத் தமிழில் அறிமுகமாகியுள்ளன.

    4.5.4 புதினங்கள்

    புதினமும் தமிழ் இலக்கியத்திற்குப் புதுவரவே ஆகும். 1876ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினம் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல ஆங்கில நாவல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

    ஜேன் அயரின் அபலைப்பெண், மார்க் ட்வைனின் அரசனும் ஆண்டியும், ஆஸ்கார் ஒயில்டின் அழியா ஓவியம் என்னும் நாவலும் தமிழில் வெளிவந்துள்ளன.

    டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும் என்ற நூலை, இரட்டை மனிதன் என்றும், தி லைப் அண்டு அட்வென்சர்ஸ் ஆப் ராபின்சன் குருசோ என்னும் நூலை இராபின்சன் குருசோ சரித்திரம் என்றும் மொழிபெயரத்துள்ளனர்.

    சார்லஸ் டிக்கன்ஸனின், A tale of two cities என்ற நாவலை இரு நகரக் கதை என கா.அப்பாத்துரையாரும், இருபெரும் நகரங்கள் என கே.வேலன் அவர்களும் மொழிபெயர்த்துள்ளனர். ஜேன் ஆஸ்டினுடைய எம்மா என்ற புதினம் தமிழில் நால்வரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    வால்ட்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ (Ivanhoe) எனும் புதினம் ஐவன்கோ என்ற பெயரால் ஆறு தமிழ் அறிஞர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற நாவல் கடலும் கிழவனும் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கலிவரின் யாத்திரைகள் என்ற தலைப்பில் கலிவர்ஸ் டிராவல்ஸ் எனும் சோனதன் சுவிப்ட் என்பவரது படைப்பு, இதுவரை எட்டு அறிஞர்களால் தமிழில் மொழிபெயர்க்கப பட்டுள்ளது. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆகிய இருவரும் ரேனால்ட்ஸ் நாவல்களைப் பலவகையான தழுவல் கதைகளாகத் தமிழில் வெளியிட்டுள்ளனர்.

    குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற மறைமலைஅடிகளின் புதினம் ரேனால்ட்ஸ் படைத்த லைலா என்னும் ஆங்கிலக் கதையின் தழுவலாகும். வால்டேருடைய கேண்டிட் என்ற புதினம் புதிர் எனும் பெயரால் தமிழாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    பெர்னார்ட்ஷாவின் கதை கடவுளைத் தேடி அலைந்த கறுப்புப் பெண் (The black girl in search of God) என்று தமிழில் கிடைக்கிறது. உலகப் புகழ்பெற்ற புதினங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

    புதுமைப்பித்தன் எழுதிய பிரேத மனிதன் என்ற புதினம், ஆங்கிலக் கதையின் தழுவலாகும். போரே நீ போ எனும் புதினம், A farewell to arms என்ற ஹெமிங்வேயின் புதினத்தைத் தழுவியதாகும். பெர்ல்.எஸ்.பக் என்ற நாவலாசிரியையின் The good earth, The Pavilion of women போன்ற புதினங்களும், நல்லமண், மங்கையர் மாடம் என்ற பெயர்களில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

    4.5.5 கட்டுரைகள்

    அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை உணரவும், உணர்த்தவும், தீர்க்கவும் பயன்படக் கூடிய பல்லாயிரக் கணக்கான கட்டுரைகள், சொற்பொழிவுகள், மேடைப் பேச்சுகள், ஆராய்ச்சியுரைகள், ஆங்கில இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே தமிழாக்கம் பெற்றுள்ளன. அவற்றுள் ஷெல்லியின் A defence of poetry எனும் கட்டுரையை வி.ஆர்.எம். செட்டியார், மின்னல் கீற்று என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

    அரிஸ்ட்டாட்டிலின் Poetics என்ற நூலை டாக்டர் அ.அ.மணவாளன் கவிதையியல் என்ற கட்டுரைத் தொகுப்பாக அளித்துள்ளார். எட்மண்ட் பர்க்கின் பாராளுமன்றப் பேச்சுகளும், ஆபிரகாம்லிங்கன் போன்ற சிறப்புமிகு பேச்சாளர்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேச்சுகளும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

    சார்லஸ் லேம்பின் கனவுலகக் குழந்தைகள், பேகனின் கட்டுரைகள், கார்லைலின் கட்டுரைகள், பெர்னார்ட்ஷாவின் கட்டுரைகள், இங்கர்சாலின் கட்டுரைகள், எமர்சன், இலியட், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சி.இ.எம். ஜோடு முதலிய அறிஞர்களின் கட்டுரைகள், சிறு சிறு நூல்களாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

    அத்துடன், இலக்கிய, கலை ஆய்வுக்கான ஆய்வு அணுகுமுறைகளில் தற்காலத்தில் குறிப்பிடத்தக்க கருத்தாக்கங்களான, அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம், குறியியல், ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்றவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். சிலர் அவற்றைக் கற்றுக் கருத்துக்கோவையாகத் திரட்டித் தந்துள்ளனர்.

    நேர்காணலும் கூடத் தமிழாக்கம் பெற்றுள்ளன. அந்த வகையில், தொமாஸ் போர்ஹேவின் கியூபா நாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவுடனான நேர்காணலைத் தமிழில் அமரந்தா வெளியிட்டுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 16:16:43(இந்திய நேரம்)