தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 5.8 சிவப்பிரகாச சுவாமிகள் முதலியோர்-5.8 சிவப்பிரகாச சுவாமிகள் முதலியோர்

  • 5.8 சிவப்பிரகாச சுவாமிகள் முதலியோர்

    ‘கற்பனைக் களஞ்சியம்’ என்று பாராட்டப்பெறும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் குறிக்கத்தக்க ஒருவர். இவர் வீர சைவ நெறி (சைவ சமயத்தின் ஒரு பிரிவு) நின்றவர். எனினும் சைவத் திருக்கோயில்களையும், சைவ நாயன்மார்களையும் பெரிதும் போற்றிப் பாடியுள்ளார். இவர் நூல்களுள் பிரபுலிங்கலீலை முதலியன வீர சைவச் சார்புடையன.


    இவர் பாடிய நூல்கள் 25. அவற்றுள் சைவ சமயச் சார்புடையன பல. சோணசைல மாலை, நால்வர் நான்மணிமாலை,

    திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, பழமலை அந்தாதி, நன்னெறி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக்கலம்பகம். இவர் பாடிய சோணசைல மாலை, சோணசைலம் எனப்படும் திருவண்ணாமலையின் சிறப்புரைக்கும். முன் இரண்டு அடிகள் ஆசிரியர் தம் குறை நீக்க வேண்டுகோள் வைப்பதாக அமையும். ஒவ்வொரு பாடலும்,

    திருவண்ணாமலை

    சோண சைலனே கைலை நாயகனே
    என்றே நிறைவடைகிறது.

    • நால்வர் நான்மணிமாலை

    நால்வர் பெருமக்கள் அருள் வரலாறுகளை மிக நயமுற எடுத்துப் போற்றும் அரிய நூல் சிவப்பிரகாசரின் நால்வர் நான்மணிமாலை. 40 பாடல்களைக் கொண்டது. முன்னே குறள் யாப்பில் ஒரு காப்பு அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர் என மாறி மாறி ஒவ்வொருவருக்கும் பத்து வீதம் பாடல்கள் அமைந்துள்ளன. நால்வர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் பலவும் இவரால் பதிவு செய்யப்பெற்றுள்ளன. திருவாசகத்தின் சிறப்புரைக்கும் இவர், நூல் என்றால் அது திருவாசகமே என்றும் அதன் பொருள் என்றால் அது தில்லைக் கூத்தனே என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

    பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
    மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே
    வாசகம் அதற்கு வாச்சியம்
    தூசகல் அல்குல்வேய்த் தோள் இடத் தவனே
    (நா. நான் - 8)

    (பெருந்துறை = திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்), புனிதன் = தூயவன் , வாச்சியம் = பொருள், தூசகல்= குற்றம் இல்லாத)

    திருஞானசம்பந்தர் வாழ்வில் எலும்பு பெண்ணாயிற்று. திருநாவுக்கரசர் வாழ்வில் கல் கடலில் மிதந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றில் முதலை விழுங்கிய குழந்தை மீண்டும் உயிர் பெற்று வந்தான். இம்மூன்று அற்புதங்களில் எது சிறந்தது என்று சுந்தரரை இவர் வினாவும் பாடல் ஆழ்ந்த பொருள் நோக்கு உடையது.

    போதம் உண்ட பிள்ளை என்பு
            பொருகண் மாது செய்ததோ
    காதல் கொண்டு சொல்லின் மன்னர்
            கல்மிதப்ப உய்த்ததோ
    வாய்திறந்து முதலை கக்க
            மகனை நீ அழைத்த தோ
    யாது நம்பி அரிது நன்று
            எனக்கு இயம்ப வேண்டுமே
    (நா. நான் - 19)

    (போதம் = ஞானப்பால், என்பு = எலும்பு)

    இவ்வாறான அரிய பாடல்களால் நிறைவடைகிறது நால்வர் நான்மணிமாலை.

    5.8.1 சிவப்பிரகாச சுவாமிகளின் பிற நூல்கள்

    சிவப்பிரகாசரின் திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி காப்பு ஒன்றும், செய்யுள் 30 ஆகக் கட்டளைக் கலித்துறை யாப்பில் திருச்செந்தூர் முருகன் புகழ் உரைப்பது. நிரோட்டகம் என்பது இதழ்களின் முயற்சியால் பிறக்கும் குறிப்பிட்ட மெய், உயிர், உயிர் மெய் எழுத்துக்கள் செய்யுளில் வாராமல் பாடுவது. இந்நூல் பாடல்களைப் படிக்கும் போது மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றொடு ஒன்று ஒட்டாது. இது ஒரு அரிய முயற்சியாக அமைந்துள்ளது.


    திருமுதுகுன்றம்
    இந்நாளில் விருத்தாசலம் என்று வழங்கப்படும் நகர் அக்காலத்தில் திருமுதுகுன்றம் என்று வழங்கப்பட்டது. இந்நகர் இறைவன் பழமலை ஈசன் என அழைக்கப்படுகிறான். இப்பெருமான்மீது காப்பு ஒன்றும் கலித்துறை 100ம் கொண்டு பழமலை அந்தாதி பாடப்பட்டுள்ளது. இவர் பாடிய அரிய அறநூல் நன்னெறி 40 வெண்பாக்களால் ஆக்கப்பட்டது.
    சிவப்பிரகாசரின் திருவெங்கைக் கோவை 426 பாடல்களாலும், திருவெங்கைக்கலம்பகம் 100 பாடல்களாலும், திருவெங்கை உலா 419 கண்ணிகளினாலும் ஆக்கப் பெற்றுள்ளன. இம்மூன்றும் திருவெங்கை நகரில் உள்ள இறைவன் சிறப்பை எடுத்துரைக்கின்றன.

    5.8.2 படிக்காசுப்புலவர்

    தொண்டை நாட்டில் களந்தை நகரில் பிறந்தவர் படிக்காசுப்புலவர். இராமநாதபுரம் சமஸ்தானப் புலவராகத் திகழ்ந்தவர். இவர் சீதக்காதி என்ற வள்ளலைப் புகழ்ந்து பல பாடல்கள் பாடியுள்ளார். தொண்டை மண்டல சதகம் என்ற நூல் இவரால் பாடப்பெற்றது. தொண்டை நாட்டுப் புலவர்கள் சிறப்புரைக்கும் ஒரு வரலாற்று நூல் என்று இதனைக் கூறலாம். இவர் புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகம், சிவந்தெழுந்த பல்லவன் உலா, உமைபாகர் பதிகம் முதலிய நூல்களை இயற்றியவர்.

    5.8.3 தாயுமான சுவாமிகள்

    தாயுமானவர் திருமறைக் காட்டில் சைவ வேளாளர் மரபில் வந்தவர். திருநந்தி தேவர் மரபில் வந்த மௌன குரு என்பவரிடம் இவர் உபதேசம் பெற்றவர். திருமண வாழ்வை மேற்கொண்டு பின் துறவு நெறி நின்றார்.

    இவர் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமி புரத்தில் சமாதி கூடினார். இவர் காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. இவர் பாடிய பாடல்கள் 1452. கண்ணிகள், கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் இவர் பாடல்களில் அதிகம்.  சைவ சித்தாந்தக் கருத்துகளும், எளிமையும், வடசொல் ஆட்சியும், சமய சமரச நோக்கும், முன்னோரைப் போற்றும் திறமும் இவர் பாடல்களில் காணப்படுகின்றன. இவரது ‘பராபரக் கண்ணி’ பெரிதும் போற்றப்படுவது.


    அன்பர்பணி செய்ய என்னை
            ஆளாக்கி விட்டுவிட்டால்
    இன்ப நிலை தானேவந்து
            எய்தும் பராபரமே
    (790)
    என்றும்,

    எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
    (856)

    என்றும்,

    கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற்று
    அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே
    (826)

    என்றும் வரும் பராபரக்கண்ணி வரிகள் பெரிதும் சிறப்பு மிக்கன.

    5.8.4 திரிகூடராசப்பக் கவிராயர்

    தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் சந்தம் மிக்க பாடல்கள் நிரம்பிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற அரிய நூலைத் திரிகூடராசப்பக்கவிராயர் என்பார் இயற்றியுள்ளார். திருக்குற்றாலத் தலபுராணமும் இவரால் இயற்றப்பட்டதே.

     

    வானரங்கள் கனி கொடுத்து
              மந்தியொடு கொஞ்சும்
    மந்தி சிந்து கனிகளுக்கு
              வான்கவிகள் கெஞ்சும்
    குற்றாலக் குறவஞ்சி - 8

    என்ற அரிய பாடலும்,

    தண்ணமுதுடன் பிறந்தாய்வெண்ணிலாவே அந்தத்
    தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
    குற்றாலக் குறவஞ்சி - 57

    என்று தொடங்கும் அரிய பாடலும் இவரால் பாடப் பெற்ற குறவஞ்சியின் சிறப்பிற்குச் சான்று கூறுவன. சிவபெருமான் மீது காதல் கொண்டிருந்த தலைவியின் கையை உற்றுப்பார்த்து அவள் காதல் கூடும் என்று ஒரு குறத்தி கூறுவதே குறவஞ்சிப்பாடலின் அடிப்படையாகும். இதில் தலைவியின் நாட்டு வளம், சிவ பெருமானின் பெருமைகள் முதலியவற்றுடன், தன் நாட்டு வளத்தையும் குறத்தி வருணிப்பாள்.

    5.8.5 ஒளவையார்

    சைவ சமயக் கடவுளர்கள் மீது அழகிய தனிப்பாடல்களையும் சிறுநூல்கள் (சிற்றிலக்கியங்கள்) சிலவற்றையும் பாடியளித்தவர் ஒளவையார் என்ற மூதாட்டியார். சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவையாரின் பெயரில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் வாழ்ந்திருந்த அருட் கவிஞர். இவர் வாழ்வு மற்றும் வரலாறு குறித்த கற்பனைக் கதைகள் ஏராளம் உள்ளன. இவர் பாடியனவாகப் பல நூல்கள் கிடைத்துள்ளன.

    1. விநாயகர் அகவல்
    2. ஆத்திசூடி
    3. கொன்றை வேந்தன்
    4. மூதுரை
    5. நல்வழி
    6. அசதிக் கோவை
    7. நான்மணிக் கோவை
    8. அருந்தமிழ்மாலை
    9. தரிசனப் பத்து
    10.ஒளவை ஞானக்குறள்
    என்பன குறிக்கத்தக்கன.

    ஆத்திசூடி முதலியன அறநூல்களாயினும் சைவ சமய வாழ்த்துகள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. ‘சீதக்களப’ என்று தொடங்கும் விநாயகர் அகவல் தமிழ்ச் சைவர்கள் பலரின் பாராயண நூலாகத் திகழ்கிறது. இவர் பாடிய தனிப்பாடல்கள் தனி அழகு மிக்கன. இறைவன் பெருமையினும் மிக்கது அவன் அருள் பெற்ற அடியவர் பெருமை என்பதை ஒளவையார், ‘பெரியது கேட்பின் எரிதவழ்வேலோய்’ என்று தொடங்கும் பாடலில் மிக அழகாக விளக்கியுள்ளார். பெரியபுராணம் இவர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கில் இப்பாடல் உருவாகி இருக்கலாம்.

    குறள் யாப்பினும் சிறிதாக ‘ஆத்திசூடி’ என்ற ஒரு வரிப் பாடல்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் ஒளவையார். அறம் உரைக்கத் திருவள்ளுவர் குறள்யாப்பைக் கைக்கொண்டார். சமயத் துறையில் உமாபதி சிவாசாரியார் தம் திருவருட்பயன் என்ற நூலைக் குறள் யாப்பில் படைத்து வெற்றி கண்டார். சைவ சமயத் தத்துவம் மற்றும் உயர் ஞானங்களை எடுத்துரைக்க ஒளவையார் குறள் யாப்பைக் கையாண்டு 310 குறட்பாக்களை இயற்றியுள்ளார். இவை ஒளவைக்குறள் என்றும் ஞானக்குறள் என்றும் குறிக்கப்பட்டு வருகின்றன.

    1. வீட்டு நெறிப்பால்
    2. திருவருட்பால்
    3. தன்பால்

    என மூன்று பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. நிறைவில் அமைந்துள்ள 10 குறட்பாக்களை அறிஞர்கள் நூற்பயன் என்று குறித்துள்ளனர். தத்துவச் செறிவு மிக்க இந்நூல் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிகோலும் சிறப்பு மிக்கது.

    5.8.6 ஆதீன அருளாளர்கள்

    தமிழ்நாட்டுச் சைவத் திருமடங்களின் தலைவர்களுள் சிலரும், மடத்தைச் சார்ந்து வாழ்ந்த துறவியர்களும் சைவ சமயம் சார்ந்த சிற்றிலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த

    சிவஞான முனிவர். இவர் சமயம் தத்துவம், இலக்கணம், கண்டனம், உரை நூல்கள் எனப் பல்வகை நூல்களை இயற்றியவர், இவரது சிற்றிலக்கியங்களுள் குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், சோமேசர் முதுமொழி வெண்பா என்பன குறிப்பிடத்தக்கன. சிவஞான போதத்திற்கு இவர் இயற்றிய பேருரை சிவஞான மாபாடியம் என்று கூறப்படும். தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த சம்பந்த சரணாலயர் என்பவர் கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலைப் பாடியுள்ளார். இவ்வாதீனக்குரு முதல்வர் குருஞான சம்பந்தர் பாடியுள்ள சிவபோகசாரம்,

    சிவஞான முனிவர்
    சொக்கநாத வெண்பா என்பன குறிப்பிடத்தக்க சிறப்புடையன. ஆதீனச் சார்பு நூல்கள் பண்டார சாத்திரங்கள் என்று கூறப்படுகின்றன.

    5.8.7 இராமலிங்க சுவாமிகள்

    வடலூர் இராமலிங்க சுவாமிகள் என்றும், திருவருட் பிரகாச வள்ளலார் என்றும் போற்றப்பட்ட அருளாளர் பாடிய பாடல்களைத் திருவருட்பா என்ற பெயரில் 6 திருமுறைகளாகத் தொகுத்துள்ளனர். இவர் பாடிய பாடல்களின் தொகை 6411. முதல் திருமுறையுள் திருவடிப்புகழ்ச்சி மகாதேவ மாலை, வடிவுடைமாணிக்க மாலை, சிவநேச வெண்பா முதலிய சிறு நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் திருமுறையுள் 103 பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பதிகங்கள் மட்டும் 85 உள்ளன. இவற்றுள் 51 பதிகங்கள் திருவொற்றியூரைப் பற்றியன. மேலும் தில்லை, திருமுல்லைவாயில், புள்ளிருக்கு வேளூர், திருவண்ணாமலை, திருவாரூர்ப் பதிகங்களும் இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் திருமுறையுள் 19 பகுதிகள் உண்டு. இவற்றுள் பல அகத்துறை சார்ந்து அமைந்துள்ளன. நான்காம் திருமுறை 12 நூற் பகுதிகளைக் கொண்டுள்ளது. 238 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பலவும் தில்லையுள் பாடப் பெற்றன. பல பகுதிகள் ‘மாலை’ என்ற பெயரில் அமைந்துள்ளன. நால்வர் பெருமக்களைப் போற்றிப்பாடிய நான்கு மாலைகளும் இப்பகுதியிலேயே காணக்கிடைக்கின்றன. ஐந்தாம் திருமுறை 56 பகுதிகளையும் 604 பாடல்களையும் கொண்டது. இவற்றை ‘முருகன் பாசுரங்கள்’ என்றும் ‘திருத்தணிகைப்பகுதி' என்றும் கூறுவர். ஆறாவது திருமுறை பெரும் சிறப்புடையது. அடிகளாரின் சாதி மத பேதமற்ற மனித குலநேயத்தையும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும் விளக்கும் அரிய பாடல்கள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

    • வள்ளலார் பாடல்கள்

    வள்ளலாரின் கவிதைகள் எளிய இனிய தமிழில் அமைந்தவை. சந்த அழகு நிரம்பியவை. ஓரிரு முறை படித்தாலே நினைவில் நிற்கும் இயல்புடையவை. உயிர் இரக்கமும், அன்பு உணர்வும், மனித குல நேயமும் பொதிந்து கிடப்பவை.

     

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்

    என்ற அவரது கருணைப் பெருக்கும்



    அருட்பெருஞ் ஜோதி
        அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங் கருணை
        அருட்பெருஞ் ஜோதி

    என்ற அவரது இறை இலக்கணமும், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற அவரது உலகவர்க்கான அறிவுரையும்,

     

    கருணை இலா ஆட்சிக் கடுகி ஒழிக
    அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆள்க

    என்ற அவரது உளக்குமுறல்களும்

    சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
    சாத்திரக் குப்பையும் தணந்தேன்

    (தணந்தேன் = நீக்கினேன்) என்ற அவரது சமூகம் சார்ந்த சினமும் பெரிதும் சிறப்புடையன. வள்ளலார் கவிதைகள் தமிழ் இலக்கிய வளத்திற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பன.

    5.8.8 மீனாட்சி சுந்தரம் பிள்ளை

    பிற்காலக் கம்பர் என்று போற்றப் படுபவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இவர் திருவாவடுதுறையிலும், மயிலாடுதுறையிலும் தங்கியிருந்து அரிய பெரிய சைவ நூல்கள் பலவற்றைப் படைத்தளித்தார். பல மாணாக்கர்களுக்கு இலக்கண இலக்கியப் பாடல்களைக் கற்பித்தார். பல தலங்களுக்குப் பெருங்காப்பிய அழகோடு இவரால் தலபுராணங்கள் பல இயற்றப்பட்டன. ஒருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுச் சைவத் திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவன், உமை, முருகன், விநாயகர் முதலிய கடவுளர் மீது இச்சிற்றிலக்கியங்கள் பாடப் பெற்றுள்ளன.

    சேக்கிழார் பிள்ளைத்தமிழ்,திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ், திருநாகைக் காரோணப்புராணம், திருவாரூர் தியாகராஜ லீலை, திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ், துறைசைக்கலம்பகம், மாயூரப்புராணம் முதலியன இவர் இயற்றிய நூல்களுள் சில. இவர் இயற்றிய தல புராணங்களுள் சில அடுத்து வரும் பாடத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளன.


    மகாமகக்குளம்
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 12:42:53(இந்திய நேரம்)