தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 6.3 கோயில் புராணம்-6.3 கோயில் புராணம்

  • 6.3 கோயிற் புராணம்


    தமிழ் நாட்டுச் சைவப் பெருமக்களால் முதன்மைத் தலமாகக் கருதத்தக்கது தில்லை. இத்தலத்திற்குக் கோயில், மன்று, பொது, சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் முதலாக வேறு பல பெயர்களும் வழங்கி வருகின்றன. தில்லை குறித்த தலபுராணங்கள் பல உள்ளன. அவற்றுள் முதன்மையாகக் கருதப்படுவது, தில்லைத் தீட்சிதர்களுள் ஒருவரும், சைவ சந்தானாசாரியருள் நான்காமவருமாகிய உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பட்ட கோயில் புராணமே ஆகும். இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்ட செய்யுள் நடையில் அமைந்த சிறப்புடையது.

    6.3.1 பாயிரப்பகுதி

    பாயிரப் பகுதியில் தில்லைக்குப் பொன் வேய்ந்தவன் சூரிய குலத்தில் வந்த அனபாய சோழன் என்பவன் என்றும் அவனுக்குத் திருநீற்றுச் சோழன் என்ற பெயரும் உண்டு என்றும் குறிக்கப்பட்டுள்ளன. தில்லையில் சிவபெருமான் அநாதியான நிலையை மேற்கொண்டுள்ளான். நடராசப்பெருமான் இத்தில்லைத் திருத்தலத்தில் தனது ஆனந்த நடனத்தை வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் காட்சி கொடுத்தருளி, பின்னர் இரணியவன்மனுக்கும் புலப்படுத்திய வரலாற்றுச் செய்திகளுமே இந்நூலுள் விரித்துரைக்கப்படுவதாக ஆசிரியர் பாயிரப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

    6.3.2 தில்லைத்தல வரலாறு

    முதலாவதாகிய வியாக்கிரபாதச் சருக்கத்தில் மத்தியந்த முனிவரின் குமாரராகிய வியாக்கிரபாத முனிவருக்குத் தில்லைச் சிற்றம்பலவன் திருக்கூத்துக் காட்சிக் காட்டியருளிய திறம் விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவபூசைக்குரிய மலர்களைப் பறிக்க மரம் ஏறும் போது வழுக்காமல் பற்றி நிற்கப் புலிக்கால்களையும், கைகளையும் வேண்டிப் பெற்றவர் இவர். பூக்களைப் பழுதின்றி எடுப்பதற்குக் கைகளில் நக இடுக்கில் கண்களையும் பெற்றவர். இவர் வசிட்ட முனிவரின் தங்கையை மணந்தவர். இவர் குமாரரே உபமன்யு முனிவர். ஒரு தைப்பூசத்துடன் கூடிய வியாழக்கிழமை சித்தயோக நாளில் பதஞ்சலி முனிவரும், இவரும் இறைவன் ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழ்ந்தனர். ஆதிசேடனே பதஞ்சலி முனிவராக அவதரித்துத் திருநடம் காணப்பெற்றார் என இரண்டாம் சருக்கம் பேசுகிறது. நடராசச் சருக்கத்தில் இறைவன் ஆனந்தத் தாண்டவம் காட்டியருளிய சிறப்பு விரித்துரைக்கப்பட்டுள்ளது. இரணிய வன்மச் சருக்கத்தில் கௌட தேசத்து அரசன் சிங்கவன்மன் என்பவன் சிதம்பரம் வந்து சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கி இரணியவன்மன் என்ற பெயர் பெற்ற வரலாறு அடுத்துப் பேசப்படுகிறது. இவன் இயற்றிய தில்லைத் திருப்பணிகள் இப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ளன. சைவ சித்தாந்த நுண் பொருள்களை ஆசிரியர் இப்பகுதியில் விரித்துரைத்துள்ளார்.

    6.3.3 நடராசர் அபிடேக நாள்கள்

    நிறைவாக அமைந்துள்ள திருவிழாச் சருக்கத்தில் தில்லையில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழாக்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. வசந்தவிழா, நீர் விளையாட்டு விழா, பவித்திர விழா, தீப விழா, திருவாதிரை விழா, பூச விழா, ஆனி உத்திர விழா, மாசி விழா முதலியன எப்போது, எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்தன என்பதை ஆசிரியர் இனங்காட்டியுள்ளார். நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு அபிடேக நாள்கள் ஆறு மட்டுமே.

    மார்கழி
    திருவாதிரை
    விடியற் காலை
    மாசி
    சதுர்த்தசி
    கால சந்தி
    சித்திரை
    திருவோணம்
    உச்சிக்காலம்
    ஆனி
    உத்திரம்
    அந்திக்காப்பு
    ஆவணி
    சதுர்த்தசி
    இரண்டாங் காலம்
    புரட்டாசி
    சதுர்த்தசி
    அர்த்தசாமம்

     

    6.3.4 தில்லையின் சிறப்புகள்

    தில்லையில் மட்டுமே ஏழு கால பூசைகள் நடைபெற்று வருகின்றன. தலவிருட்சம் தில்லை மரம். இத்தலம் குறித்த வேறு புராணங்கள் மூன்று உள்ளன. தில்லையில் ஐந்து சபைகள் உள்ளன. இத்தலத்தில் நடராசப் பெருமானுக்குப் பின்னுள்ள இரகசியத்தானம் அருவம்; நடராசப் பெருமான் உருவம்; படிகலிங்கம் அருஉருவம். இத்தலத்துக்குரிய ஆகமம் மகுடாகமம். இச்செய்திகள் யாவும் கோயிற் புராணத்துள் காணப்படுகின்றன. நிறைவில்,

    மழை வழங்குக; மன்னவன் ஓங்குக:
    பிழைஇல் பல்வளம் எல்லாம் பிறங்குக;
    தழைக அஞ்செழுத்து ஓசை தரைஎலாம்;
    பழைய வைதிக சைவம் பரக்கவே
    (வாழ்த்து)

    என்ற அரிய வாழ்த்துடன் நூல் நிறைகிறது.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    தலம் என்ற சொல்லின் பொருள் யாது?
    2.
    முப்பெரும் புராணங்கள் எவை?
    3.
    திருவிளையாடற் புராண ஆசிரியர் யார்?
    4.
    திருவிளையாடற் புராணத்தில் மாணிக்க வாசகர் அருள் வரலாறு கூறும் படலங்களில் இரண்டின் பெயர்களை எழுதுக.
    5.
    கோயிற் புராண ஆசிரியர் பெயர் என்ன?
    6.
    நடராசப் பெருமான் நடனக்காட்சி கண்ட இருவர் பெயர்களைத் தருக
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:36:32(இந்திய நேரம்)