தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 6.4 காஞ்சிப் புராணம்-6.4 காஞ்சிப் புராணம்

 • 6.4 காஞ்சிப்புராணம்

  தமிழ் நாட்டின் தொல் நகரங்களுள் ஒன்று காஞ்சிபுரம். தொண்டை நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்த காஞ்சிபுரம் சிவராஜதானியாகவும் விளங்கியிருந்தது. சைவமும் வைணவமும் இந்நகரில் தழைத்து, ஓங்கின. தமிழ் நாட்டு நகரங்களிலேயே அதிகமான திருக்கோயில்கள் அமைந்த நகரம் இதுவேயாகும். தென் தமிழிலும், வட மொழியிலும் பெரும் புலமை பெற்று விளங்கிய அறிஞர் பெருமக்கள் வாழ்ந்திருந்த பெருமை மிக்கது காஞ்சிபுரம். சிறப்புமிக்க இத்தலம் குறித்துத் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த மாதவச் சிவஞானயோகிகள் காஞ்சிப்புராணம் என்ற அரிய நூல் ஒன்றை யாத்தளித்தார். அருளாளர்களின் பெருமை பேசி
  நிற்கும் சேக்கிழாரின் பெரியபுராணத்தைப் போலவே சைவ நுண்பொருள் உரைக்கும் சைவ சித்தாந்தத்திற்கு ஒளியூட்டி நிற்பது காஞ்சிப்புராணம். பிறர் வரைந்த தலபுராணங்கள்,

  ஒரு தலத்தில் அமைந்திருக்கும் ஒரு சிவாலயத்தின் சிறப்புரைப்பதாகவே அமைந்திருக்க, காஞ்சிப்புராணம், காஞ்சி நகரில் உள்ள அனைத்துச் சிவாலயத்தின் சிறப்புரைக்கும் பெருங்காப்பியமாக அமைந்துள்ளது.

  எல்லாத் தலத்திற்கும் அம்மை காமாட்சியே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் வடநூல் ஒன்றின் மொழி பெயர்ப்பு என்று கூறப்பட்டாலும் முதல் நூலாகவே கருதத்தக்க சிறப்புடையது. இந்நூலின் பிற் பகுதியை, சிவஞான சுவாமிகளின் மாணாக்கர் கச்சியப்ப முனிவர் எழுதினார்.

  6.4.1 நூல் அமைப்பும் - அழகும்

  காஞ்சிப்புராணம் மிக நுட்பமுற அமைக்கப்பட்டுள்ளது. முதற்கண் நாட்டு நகரப் படலங்கள் அழகொழுகப்பாடப் பெற்றுள்ளன. தொண்டை நாடும், காஞ்சிபுரமும் பெருமிதத்துடன் புனையப் பெற்றுள்ளன. தல வரலாறுகளை ஆசிரியர் சிவஞான முனிவர் காஞ்சி நகரின் கிழக்குத் திசையில் அமைந்துள்ளதும், திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றதுமாகிய திருநெறிக்காரைக்காடு என்ற திருத்தலத்தில் தொடங்குகின்றார். முறைப்படி அதிலிருந்து வலமாகச் சென்று நகரில் இடம் பெற்றுள்ள சிவாலயங்களின் வரலாறுகளை வரிசை குலையாது கூறிச் செல்கிறார். முடிவில் காஞ்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் திரு ஏகம்பத்தின் பெருமை பேசுகிறார். அதன் பின்னர் காமாட்சி அம்மை தழுவக்(இறைவன்) குழைந்த அருள் வரலாற்றை அமைக்கிறார். பின்னர் அம்மையின் திருமணம் புனைகிறார். தொடர்ந்து காஞ்சி நகரில் நிகழ்ந்த அற்புதங்களைப் பேசிக்காட்டுகிறார். தொடர்ந்து இப்புராணம் கேட்டலின் பயன் நல்லொழுக்க நெறி நிற்றலே ஆதலால் அவ்வொழுக்கச் சிறப்பு உரைக்கிறார். அவ்வொழுக்கத்திற்குப் பயனும் இறைவன் திருவடிப் பேற்றிற்குச் சிறந்த சாதனமும் சிவபுண்ணியமே யாதலின் அதனை நிறைவாகப் பேசி நூலை நிறைவு செய்கிறார்.

  6.4.2 ஆசிரியர் - பன்முகப் புலமை

  காஞ்சியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒவ்வொரு படலம் அமைத்துக் கதை நடத்துகிறார் சிவஞான சுவாமிகள். மிகச் சுருங்கிய வரலாறு உடைய தலமாக இருந்தால் அதனை, அடுத்து அமைந்துள்ள விரிவான வரலாறு உடைய தலம் குறித்த படலத்தில் ஒன்றிரண்டு செய்யுள்களால் இணைத்துக் கொள்கிறார். புராணத்தில் எங்கும் ஒரு தொய்வு தோன்றாது சிறிய வரலாறு கொண்ட படலங்களில் இடையிடையே முக்கியமான சமயக் கருத்தொன்றை இணைத்துப் பயனும் சுவையும் கூட்டுகின்றார். வடமொழிப் பயிற்சியால் ஆசிரியர் உபநிடதங்கள், சிவாகமங்கள், புராணங்கள் ஆகியவற்றுள் காணக் கிடக்கும் சைவ நெறி முறைகளை எல்லாம் இப்புராணத்துள் இணைத்துத் தமிழ்ச் சைவப் பெருமக்களுக்குப் பேருதவியாகத் திகழ்கின்றார். அரிய உபநிடத வாக்கியங்களும், புராண வசனங்களும் அழகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இந்நூலுள் இணைக்கப்பட்டுள்ளன. பல அரிய வடசொற்களுக்குச் சொல் மூலங்களும் பொருள் நுட்பமும் கண்டு நமக்குக் காட்டுகிறார்.

  6.4.3 நூல் சிறப்புகள்

  • நால்வர் துதி

  நால்வர் பெருமக்கள் பால் சிவஞானயோகிகள் கொண்டிருந்த அளப்பரிய ஈடுபாட்டினை நூல் முழுவதும் காண முடிகிறது. பெரியபுராண நாயன்மார் வரலாறுகளில் பலவற்றைத் தக்க இடங்களில் இணைத்து மகிழ்கிறார். சைவ சித்தாந்த நுண்பொருள்களைக் கதை நடத்தும் போக்கில் எளிய இனிய உவமைகளில் அழகுறப் பதிவு செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். திருநாவுக்கரசரை இவர் போற்றும் துதிப்பாடல் பெரிதும் சிறப்புடையது.

   

  இடையறாப் பேரன்பும் மழைவாரும்
     இணை விழியும் உழவாரத் திண்
  படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
     திருவடிக்கே பதித்த நெஞ்சும்
  நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
     பெருந்தகைதன்ஞானப்பாடல்
  தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
     பொலிவழகும் துதித்து வாழ்வாம்
  (காஞ்சிப்புராணம். பாயிரம் - 11)

  (நடையறா = ஒழுக்க நெறி வழுவாத, வாகீசர் = முன்னைப் பிறப்பில் திருநாவுக்கரசரின் திருப்பெயர், தொடை = பாமாலை)

  என்ற அரிய பாடலைப் போற்றாத சைவர் இலர். இதைப்போல் சுந்தரமூர்த்தி சுவாமிகளை,

   

  ஒரு மணத்தைச் சிதைவு செய்து வல்வழக்கிட்டு ஆட்கொண்ட உவனைக் கொண்டே
  இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்டவல்லாளன
  (காஞ்சிப்புராணம் - 12)

  எனப் போற்றி நெகிழ்கிறார்.

  • ஒழுக்க விதிகள் கூறுதல்

  காஞ்சிப்புராணத்துள் அமைந்துள்ள ஒழுக்கப்படலம் வடமொழி, தென்மொழி அறநூல்களின் சாரமாக அமைக்கப்பட்டுள்ளது. துறவிகளின ஒழுக்கநெறி, பிரமச்சாரிகள் மேற்கொள்ள வேண்டிய நித்திய கருமங்கள். இல்லறத்தாரின் கடமைகள், வாழ்வில் செய்யக்கூடாது என விலக்கப்பட்ட தீமைகள், மனைவி உடன்வரக் காட்டில் வாழும் வானப்பிரத்த நிலையினர் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு முறைகள் எனப் பலவும் இப்பகுதியில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.     அவற்றுள் சிலவற்றைக் கண்டு மகிழலாம். எடுத்துக்காட்டாக ஒன்று:

  இல்லறநெறி நிற்பவர்கள் தாம் உண்ணும் முன்பாகத் துறவு நெறியில் வாழும் அதிதிகளை உண்பிக்க வேண்டும். அடுத்து இல்லத்தில் நோயுற்றவர் இருப்பின் அவர்களுக்கு உரியவாறு உணவு வழங்குதல் வேண்டும். அடுத்து கருவுற்ற பெண்களை உண்ணச் செய்தல் வேண்டும். அடுத்துக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். பின்னர் இல்லத்தில் மூத்த பெற்றோர் முதலியவர்களுக்கு உணவிட வேண்டும். கடைசியாகத் தம் உற்றார் உறவினரோடு உடனிருந்து உண்டு மகிழ வேண்டும்.

  • சிவபுண்ணியச் செயல்கள்

  நிறைவாக அமைந்துள்ள சிவபுண்ணியப் படலம் சைவநெறி வாழ்ந்து இறைவன் தாள் மலர்களைச் சேர்வார்க்குச் சைவ ஒழுங்குகளை வகை செய்து நிற்கிறது. காஞ்சியம் பதியில் இயற்றப்பட வேண்டிய சிவபுண்ணியச் செயல்களை விரித்துரைக்கிறது. கலி காலத்தில் மகிழ்வுடன் வாழ்வதற்கு உரிய நகர் காஞ்சியே என்பது வற்புறுத்தப்படுகிறது. இவ்வாறான பல புண்ணியப் பேறுகளை விளக்கிக் காஞ்சிபுராணம் நிறைவடைகிறது.

  • காஞ்சி நகரில் வாழ வேண்டுதல்

  காஞ்சி என் ஊர் அன்று. அங்கே சென்று வாழப் பொருள் வசதியும் இல்லை. உற்றார் உறவினரும் எனக்குக் காஞ்சியில் எவரும் இலர். தொழில் செய்து பிழைக்கும் அறிவாற்றலும் கூட என்னிடம் இல்லை என்று ஒருவன் சிவஞானசுவாமிகளிடம் தன் நிலைமையை எடுத்துரைத்து, நான் எவ்வாறு காஞ்சியில் வாழ்ந்திருந்து வழிபட்டு உய்ய இயலும் என்று கேட்டிருக்க வேண்டும். சற்றே சினம் கலந்து, எள்ளல் சுவையோடு,

  கழுதைமேய்த் தாயினும் மற்றும் காழ்படும்
  இழிதொழில் இயற்றியும், இரந்து உண்டாயினும்
  ஒழிவறு பத்தியின் உறுதி யாளராய்
  வழுவறு காஞ்சியில் வதிதல் வேண்டுமால்
  (சி.பு.ப.101)

  (காழ்படும் = குற்றமுள்ள, இரந்து = பிச்சை எடுத்து, வழுவறு = குற்றமற்ற, வதிதல் = வசித்தல்)

  என்று வழிகாட்டி நிற்கிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:08:45(இந்திய நேரம்)