Primary tabs
-
1.0 பாட முன்னுரை
தொடக்க காலத்தில் உரைநடையானது பெரும்பாலும் செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்காகவும், கல்வெட்டுச் செய்திகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி.18ஆம் நூற்றாண்டில் உரைநடை புத்துயிர் பெற்றது. அதன் பின்னர்தான் நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் தோன்றின.
மேலை நாடுகளின் போக்கை ஒட்டி உரைநடையை முதன்முதலாகப் படைப்பிலக்கியத்திற்குப் பயன்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். இவருடைய பரமார்த்த குரு கதையே தமிழ் உரைநடையில் உருவான முதல் கதையாகும். இதனைத் தொடர்ந்தே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. இன்று, சிறுகதையைப் படைக்கும் படைப்பாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சிறுகதையைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது. இது, சிறுகதைப் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இப்பாடத்தில் படைப்பிலக்கியமும் சிறுகதையும் எனும் தலைப்பில், அவை பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.