தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.5 கதைமாந்தர்

  • 1.5 கதைமாந்தர்

    ஒரு படைப்பாளனின் கற்பனை, உணர்ச்சி, எண்ணம் ஆகிய அனைத்தும் கதைமாந்தர் மூலமாகவே வடிவம் பெறுகின்றன. கதையில் வரும் மனிதர்கள் உயிர் வாழும் மனிதர்களைக் காட்டிலும் ஆற்றல் பெற்றவர்கள்; ஆயுள் மிக்கவர்கள். இவர்கள் வாழும் மனிதர்களுக்கு வழிகாட்டிகளாய் விளங்கக் கூடியவர்கள். இலக்கியத்திறனை எடைபோடுவதற்காக மட்டுமே கதைமாந்தர்கள் உருவாக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூகத்தின் வாழ்க்கையை அறிந்துகொள்ளும் பொருட்டும் இவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

    இராமாயணத்தில், இராமன் இலட்சியவாதியாக விளங்கும் கதைத் தலைவன். சிலப்பதிகாரத்தில் கோவலன் சராசரி மனிதனாக விளங்கும் மற்றொரு கதைத்தலைவன். இராமன் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக விளங்குகின்றான் என்றால், கோவலன் சமுதாயத்திற்கு எச்சரிக்கையாக விளங்குகின்றான். இவ்வகைப்பட்ட கதைமாந்தர்கள் காலம் கடந்தும், மொழி கடந்தும், நாட்டின் எல்லை கடந்தும் இலக்கியத்தில், சமுதாயத்தில் வாழ்கின்றனர். படைப்பாளரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்கின்றனர். இவர்களின் சிரஞ்சீவித் தன்மையே கதைமாந்தர்கள் பெறும் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகிறது.

    இதுபோல் தான், சிறுகதைகளில் வாழும் கதைமாந்தர்கள் சமூகத்தைத் தொடர்பு படுத்தி மனத்தில் இடம்பெற வேண்டும். சமுதாயத்திற்குப் பாடமாக அமைய வேண்டும். சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த வேண்டும். கதைமாந்தர்கள் சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்குமான உறவை வளர்ப்பவர்களாக விளங்க வேண்டும்.

    கதைமாந்தர்களின் பண்புகளின் அடிப்படையில் அமையும் சிறுகதைகள் சிறந்த சிறுகதைகளாகின்றன. இப்பகுதியின் மூலம் கதை மாந்தர்களின் முக்கியத்துவத்தை உணரலாம்.

    1.5.1 தலைமை மாந்தர்

    ஒரு சிறுகதை மனத்தில் தங்க வேண்டுமானால் அதில் வரும் பாத்திரம், ஒப்பற்ற பண்பைப் பெற்றிருத்தல் வேண்டும். சிறுகதையில் வரும் கதைமாந்தர்கள் பல்வேறு நாட்டினராக, பல்வேறு மொழியினராக, பல்வேறு கொள்கையுடையவராக இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பல்வேறு படிகளில் இருப்போருக்கும், கதைநிகழ்ச்சிக்கும் நிறைவைத் தருபவராக விளங்குதல் வேண்டும். இத்தகைய பாத்திரங்களே தலைமை மாந்தருக்கான தகுதியைப் பெறுகின்றனர்.

    • பண்புகள்

    சிறுகதைகளில் இடம்பெறும் தலைமை மாந்தரே கதை நகர்வதற்குக் காரணமாகின்றனர். தலைமைமாந்தர் பெருமைக்குரியவர்கள். குணக்குறை பெற்றிருப்பினும் இவர்கள் பண்புநலன்களில் சிறந்து விளங்குபவர்கள். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையில் சிறுகதைத் தலைமை மாந்தர்கள் விளங்குகின்றனர்.

    மேலும் சிறுகதைகளில் இடம்பெறும் தலைமை மாந்தர்கள் தங்களின் தனித்தன்மையினால் மக்கள் மனத்தில் இடம்பெற வேண்டும். இலட்சிய நோக்கு, புதுமைப் போக்குடையவராய்த் திகழ்தல் வேண்டும். வாழ்க்கையின் நன்மையை, அறத்தை, நம்பிக்கையை வலியுறுத்துபவர்களாக விளங்குதல் வேண்டும்.

    தலைமை மாந்தர்கள் சமுதாயத்திற்குப் பாடம் கற்பிப்பவர்கள். சில வேளைகளில் தலைமை மாந்தர்களின் பெயரே சிறுகதைக்குத் தலைப்பாக அமைந்து சிறப்புப் பெறுவது உண்டு. எடுத்துக்காட்டாக,

    ஆர்.வி
    லட்சுமி
    சூடாமணி
    ந. பிச்சமூர்த்தி
    லா.ச.ரா
    - பூக்காரி செங்கம்
    - மேரி செல்வம்
    - வீராயி
    - மோகினி
    - சாவித்திரி

    ஆகியவற்றைக் கூறலாம். தலைமை மாந்தர்கள் சமுதாயத்தின் மாதிரிகளாக விளங்கி, மனிதப் பண்புகளுக்கு உயிரூட்டக் கூடியவர்கள் என்பதை இப்பகுதியின் மூலம் அறிகிறோம்.

    1.5.2 துணை மாந்தர்

    இவர்கள் தலைமை மாந்தர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்கள். கதை நகர்விற்கு இன்றியமையாத நிலையில் வேண்டப்படுபவர்கள். துணைமாந்தர்களின் துணை இன்றிக் கதையில் சிறு சிறு நிகழ்வுகள்கூட இடம்பெற இயலாது. ஒரு சிறுகதை நிறைவு பெறுவதற்குத் துணைமாந்தர்கள் அவசியம் என்பது தெரியவருகிறது. துணைமாந்தர்கள் முழுமையாகச் சித்திரிக்கப்படாத கதாபாத்திரங்களாக விளங்கிய போதிலும், கதையின் ஓட்டம் கருதிச் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆகின்றனர்.

    கல்கியின் கேதாரியின் தாயார் சிறுகதை, நண்பனாக வரும் துணைமாந்தன் கதைகூறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துணைமாந்தர் மூலமே கதையின் உச்சநிலை உரைக்கப்படுகிறது. இக்கதையில் தலைமைமாந்தரைக் காட்டிலும் துணைமாந்தர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாய் உள்ளது. இக்கதையின் நிகழ்விற்கும், தொடர்பிற்கும், முடிவிற்கும் துணைமாந்தரே துணை நிற்பதைக் காண முடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2019 15:42:00(இந்திய நேரம்)