தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதிய நாடக முயற்சிகள்

  • 3.4 புதிய நாடக முயற்சிகள்

    தொன்மை நாடகப் போக்குகளிலிருந்து மாறுபட்ட தற்கால நாடகப் போக்கு, 1980-லிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தது. காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் பயிற்சிப் பட்டறைகள் (1977), பாதல் சர்க்கார் நாடகப் பட்டறைகள் (1980) ஆகியவற்றின் தாக்கம் தமிழ் நாடகவியலாளர்களைப் புதிய சிந்தனை கொள்ளச் செய்தது. நவீன நாடகங்கள் சில அரங்குகளிலும், அரங்கத்தைப் புறக்கணித்து மக்களிடையேயும் நடத்தப் பெற்றன. பெண்கள் நாடகத்தில் முழு ஈடுபாட்டுடன் நுழைந்தனர். கதைக் கருக்கள், களங்கள் மாற்றம் பெற்றன. அதே சமயம் புரியாத் தன்மையிலும் நாடகங்கள் சில நிகழ்த்தப் பெறுகின்றன. நவீன நாடக முன்னோடிகளாகப் பலரைக் கூறலாம். அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

    பேராசிரியர் சே.இராமானுஜம்

    நாடகத்தின் பன்முகங்களை நுட்பமாக அறிந்தவர் சே.இராமானுஜம். பள்ளி நாடகங்கள் - சிறுவர் அரங்கம் என்பதைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தனது நாடகப் படிப்பைத் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் முடித்தார். திருச்சூர் நாடகப் பள்ளியில் உதவி இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் புறஞ்சேரி, வெறியாட்டம், நாற்காலிக்காரர், அண்டொர்ரா, செம்பவளக்காளி, தங்கக் குடம் போன்ற தமிழ் நாடகங்களோடு மலையாள நாடகங்களையும் இயக்கியுள்ளார். நாடக உருவாக்கம், பயிற்சிப் பட்டறை, சொற்பொழிவு ஆகியவற்றின் மூலம் நவீன நாடகங்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

    ந.முத்துசாமி

    எழுத்து இலக்கியப் பத்திரிக்கையோடு தன்னை இணைத்துக் கொண்டு, நவீன கதை, கவிதையில் தீவிரமாய்ச் செயல்பட்டவர் ந.முத்துசாமி. நடை பத்திரிகையில் நாடகம் மற்றும் நாடகம் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தார். காலம் காலமாக என்பதில் தொடங்கி தெனாலிராமன் வரை இவரது பல நாடகங்கள் முக்கியமானவை. இவரது சுவரொட்டி தமிழின் சிறந்த நவீன நாடகமாக விளங்குகிறது. அதேபோல் பல வருடங்களாக ந.முத்துச்சாமியின் நாற்காலிக்காரர் தொடர்ந்து மேடையேறி வருகிறது. இவரது முழு நேர நாடகக் குழுவான கூத்துப் பட்டறை தேசிய அளவில் முக்கியமான நாடகக் குழுக்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதமி விருதை நாடக எழுத்துக்காகப் பெற்றுள்ளார்.

    பிரளயன்

    நாடகக் கலையில் தொடர்ந்து செயல்படுபவர்கள் மிகக் குறைவு. ஆனால் 16 ஆண்டு காலமாகத் தொடர்ந்து நாடகக் கலையில் ஈடுபட்டு வருகிறார் பிரளயன். தமிழக வீதி நாடகத்தில் இவர் குறிப்பிடத் தக்கவராக உள்ளார். இவரது நாடகப் பயணம், மக்களோடு இணைந்தது; சமூகக் கருத்துகளை நாடகக் கலை மூலம் கொண்டு செல்வது. இந்திய அளவில் நன்கு அறிமுகமான இவர், சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர். நாங்கள் வருகிறோம், முற்றுப்புள்ளி, பெண் இவருடைய முக்கிய நாடகங்கள். அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும் இவரது பங்கு கணிசமாக இருக்கிறது. சமீபத்தில், பிரபலமான பிரெஞ்சு நாவலான குட்டி இளவரசன் என்ற கதையை நாடகமாக்கியுள்ளார்.

    3.4.1 புதிய முயற்சிகளின் முன்னோடிகள்

    நாடகத் துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு, நாடகத் துறைக்குப் பெரும் பங்களிப்பு வழங்கியவர்கள் பலர்.

    மு.இராமசாமி

    தமிழ் நவீன நாடக அரங்கில் முதன்மை நிலைச் செயல்பாட்டாளர்களுள் மு.இராமசாமி முதன்மையானவர். வீதி நாடகங்களில் தொடங்கி, கடந்த 25 ஆண்டுகளாக நாடகத் துறையில் செயல்பட்டு வருபவர். மதுரையில் நிஜ நாடகக் குழுவைத் தொடங்கி, தொடர்ந்து நாடகங்களைத் தயாரித்து வருகிறார். இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி நடத்திய முதல் தென்மண்டல நாடக விழாவில் தனது துர்க்கிர அவலம் நாடகம் மூலம் பிற மொழியினரின் கவனத்தை ஈர்த்தவர். அந்த நாடகம் தேசிய நாடக விழாவிற்கும் தேர்வாகியது. தோழர் பெரியார் என்ற நாடகம் தமிழகத்தில் பல இடங்களிலும் நிகழ்த்தப் பெற்றது. தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறைத் தலைவராக இருக்கும் மு.இராமசாமி தற்போது திரைப்படத்துறையிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பவராகவும், விவரணப் படங்கள் (Documentary) எடுப்பவராகவும் மாறியுள்ளார்.

    வ.ஆறுமுகம்

    திருச்சூர் நாடகப் பள்ளியில் நாடகம் பயின்ற வ.ஆறுமுகம், புதுவை ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் தற்போது பணிபுரிகிறார். பிரளயம், சுவரொட்டிகள், கோயில் ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். இவரது எழுத்தாலும், இயக்கத்தாலும் உருவான கருஞ்சுழி என்ற நாடகம் மண்டல நாடக விழா (விஜயவாடா), தேசிய நாடக விழா (புதுதில்லி) ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் பிறமொழி நாடகங்களை விட முதன்மை பெற்று, தமிழ் நாடக அரங்கிற்கு எனத் தனியொரு மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

    வேலு.சரவணன்

    ஆழி என்ற நாடகக் குழு மூலம் நாடகம் நடத்தி வரும் வேலு.சரவணன், சிறுவர்களுக்கான நாடக அரங்கு பற்றிய சிந்தனையுள்ளவர். இன்று தமிழகத்தில் சிறுவர் அரங்கு பற்றியோ, பள்ளி நாடகங்கள் பற்றியோ பேசினால் உறுதியாக வேலு. சரவணன் பெயர் இடம்பெறும். கிராமம், கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கியவர். பாண்டிச்சேரியில் பல்கலை - நாடகப் பள்ளியில் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளார். இவருடைய கடல் பூதம், குதூகல வேட்டை என்னும் இரு சிறுவர் நாடகங்களும் இரண்டாயிரம் தடவைக்கு மேல் மேடையேறியுள்ளன.

    கே.ஏ.குணசேகரன்

    நாட்டுப்புறப் பாட்டு, தலித் நாடகம், கலைப் பயிற்சியாளர் என்று பல தளங்களில் செயலாற்றி வருபவர் முனைவர் கே.ஏ.குணசேகரன். கிராமப் புறங்களில் நாடகப் பட்டறைகள் மூலம் நாடகங்களைத் தயாரித்து விழிப்புணர்வூட்டுவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நிகர்நிலைப் பள்ளியின் இயக்குநராக (பொறுப்பு) இருக்கிறார். நாட்டுப்புறக் கலையில் ஆய்வு செய்த இவர், தலித் மக்களுக்காக பல நாடகங்களை அமைத்துள்ளார். பலியாடுகள் என்ற தலித் நாடகம் குறிப்பிடத்தக்கது. தன்னானே நாடகக் குழு மூலம் நாடகங்களைத் தயாரித்து அளித்து வரும் இவர் ‘தலித்துக்கள் தங்களுக்கான கலை வடிவங்களைத் தேடும் போது தலித் அரங்கம் தவிர்க்க முடியாத ஒன்று’ என்கிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 13:23:58(இந்திய நேரம்)