Primary tabs
-
3.5 நவீன நாடகங்கள்
தமிழில் நவீன நாடகங்கள் பல தோன்றின. இவற்றிற்கு அயலகத்தில் வாழும்தமிழரும்,எழுத்தாளரும், திறனாய்வாளரும் சிறந்த வகையில் துணை செய்துள்ளனர்.
பாலேந்திரா சுமார் இருபது ஆண்டுகளாக இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நாடகங்களை நடத்தியுள்ளார். தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் என்ற அவர் குழு 1985 முதல் இலண்டனிலிருந்து செயலாற்றுவதோடு, சிறுவர் அரங்கிலும் கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கை மட்டக்களப்புபல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறைத் தலைவராக உள்ளார் கலாநிதி சி.மௌனகுரு. இவர் ஈழத்து நாடக வரலாறு எழுதியதோடு புதிய நாடகத் தயாரிப்புகளில், பயிலரங்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பலநாடகங்களைஎழுதி இயக்கியுள்ளார்.
ஈழத்து நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவியர்களுள் தாசீசியஸும் ஒருவர். அவர்மேற்கத்திய நாடக நுட்பங்களையும், தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை ஏற்படுத்தினார்.
செழியன், மனவெளிக் கலையாற்று குழு மூலம் கனடாவில் தன்னுடைய நாடகங்களை மேடையேற்றி வருகிறார். என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது, வேருக்குள் பெய்யும் மழை, பெருங்கதையாடல் என்பன அவருடைய குறிப்பிடத்தக்க நாடகங்கள். இவற்றை நூல் வடிவில் உயிர்மை பதிப்பகம் 2003இல் வெளியிட்டுள்ளது.
நார்வேயில் சர்வேந்திராவும், ஆஸ்திரேலியாவில் மா.நித்தியானந்தமும் தமிழ் நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
வேறு சில முன்னோடிகள்
பரீக்ஷா நாடகக் குழுவைப் பல காலமாக நடத்தி வருகிறார் ஞாநி. பல நாடகங்களை மேடையேற்றிய இவர் பெரியார் பற்றிய நாடகம் ஒன்றை, சமீபத்தில் நடத்தி வருகிறார்.
வீதி அமைப்பில் ஒருவரான கே.எஸ்.ராஜேந்திரன், தற்போது தேசிய நாடகப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது இயக்கத்தில் தில்லியிலும், தமிழகத்திலும் பல நாடகங்கள் மேடையேறியுள்ளன. திராவிட இயக்க நாடகங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.
‘சமகாலத்தில் நிகழ்த்தப்படுவதால் மட்டுமே ஒன்று நவீனமாகிவிடாது. நவீனத்துவம் என்பது அவ்வக்காலங்களிலான மரபு மீறல். வாழும் காலத் தேவைக்கேற்ப மனிதனை - மனிதச் செயல்பாடுகளை - புதிய அர்த்தமுள்ள பார்வையில் பார்த்தல்’ என நவீன நாடகத்திற்கு இலக்கணம் வகுப்பார்கள். புதிய எழுச்சிக்கேற்ப நாடகங்களைப் படைத்தவர்கள் தமிழில் ஏராளமாக உள்ளனர். தில்லியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இந்திரா பார்த்தசாரதி ஒளரங்கசீப், போர்வை போர்த்திய உடல்கள், இராமானுஜர், மழை எனப் பல நாடகங்களை எழுதியுள்ளார். பிரபஞ்சனின் முட்டை குறிப்பிடத்தக்க நாடகம். அஸ்வகோஷ் பல நாடகங்களை எழுதியதோடு, திறனாய்விலும் ஈடுபட்டு வருகிறார். செயந்தனின் சுவர்கள், இயக்க விதி -3 போன்ற நாடகங்கள் பலமுறை மேடையேறியுள்ளன. ஞானராசசேகரனின் வயிறு, டி.செல்வராஜின் யுகசங்கமம், பறம்பைச் செல்வனின் புல்லுருவிகள் போன்றன குறிப்பிடத் தகுந்த நாடகங்களாகும்.
வெங்கட் சாமிநாதன், கோமல் சுவாமிநாதன், அ.இராமசாமி, வீ.அரசு, அஸ்வகோஷ், வெளி ரங்கராசன் சி.அண்ணாமலை, சுஜாதா எனப் பலர் நாடகம் பற்றிய திறனாய்வுகளை எழுதியுள்ளனர்.
1911இல் நாடகாபிமானி என்ற நாடக இதழை எம்.வி.ஈசுவர ஐயர் வெளியிட்டார். ஞாநி கட்டியங்காரன் என்ற நாடகச் சிற்றிதழை நடத்தினார். ரங்கராஜனின் நாடகவெளி இதழ் 1990 முதல் 97 வரை 40 இதழ்களாக வெளிவந்து நின்று போனது. கோவையில் புவியரசு நாடகத்திற்கெனக் காற்று என்ற இதழை நடத்தினார்.
சுபமங்களா, கசடதபற, பாலம், நடை, விழிகள், பிரக்ஞை, வைகை, சாதனா, ரீங்காரம், கணையாழி போன்ற சிற்றிதழ்கள் நவீன நாடகங்களுக்கு ஊக்கம் தந்தன.
கல்வித் துறையில் நாடகங்கள்
நாடகங்களின் வளர்ச்சிக்கென, பாண்டிச்சேரி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் நாடகத்துறைகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் பல நாடக மாணவர்கள் தமிழ் நாடகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள் மூலமும் நாடகத்திற்குப் பல தொண்டுகளை இப்பல்கலைக் கழக நாடகத் துறைகள் செய்து வருகின்றன.