தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P20414-அரசியலமைப்பில் இதழ்கள்

  • 4.2 அரசியலமைப்பில் இதழ்கள்

    மக்களாட்சியின் காவல் தேவதையாக மட்டுமின்றி அரசியலமைப்பிலும் இதழ்கள் பங்கேற்பது சிறப்பிற்கு உரியதாகும். டி.எஸ்.மேத்தா (D.S.Mehta) என்பார், "பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதிலும், செப்பனிடுவதிலும் பிரதிபலிப்பதிலும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் இதழ்கள் இன்றியமையாது செயல்படுகின்றன. இதழ்கள் சமுதாயத்தின் ஆதார நிறுவனம் ஆகும். நாட்டில், அரசியல், சமுதாய, பொருளாதார வளர்ச்சியினைச் சிறப்பாக ஏற்படுத்த அவை மிகவும் துணை செய்கிறது. இதழ்கள், அரசின் செயல்பாட்டோடும் அது பின்பற்றும் கொள்கையோடும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளன. இவ்வாறு இதழ்கள் பொது வாழ்க்கையின் கூறு ஒவ்வொன்றையும் தொடுகின்றன" எனக் குறிப்பிடுகின்றார்.

    சான்றாக, இந்திய விடுதலையின் போது இதழ்கள் படைத்த வரலாற்றைக் குறிப்பிடலாம். இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் பலர் தாங்களே இதழ்களை நடத்தினர்.

    சித்தரஞ்சன்தாஸ், நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பார்வர்ட் என்ற இதழை நடத்தினர். அரவிந்தர் யுகாந்தர் என்ற இதழையும் பாரதியார் இந்தியா என்ற இதழையும் நடத்தினார்கள். மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அல்ஹிலால் என்ற இதழையும் காந்தியடிகள் ஹரிஜன், யங்இந்தியா ஆகிய இதழ்களையும் நடத்தினார்கள். திலகர் கேஸரி, மராட்டா ஆகிய இதழ்களை நடத்தினார்.

    இந்தியாவில் இதழ்கள் மூலம் விடுதலை இயக்கத்தை, விடுதலை இயக்கத் தலைவர்கள் நடத்தினர். அதற்காக அடக்குமுறையையும், சிறைத் தண்டனையையும் பரிசாகப் பெற்றனர். எனினும், இந்திய விடுதலை என்ற அரசியல் மாற்றத்தில் இதழ்களின் பங்கு அளவிட முடியாத சிறப்பிற்கு உரியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    4.2.1 சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தல்

    அரசியல் அமைப்பில் பங்கு கொண்டு மாற்றங்களை உருவாக்கும் இதழ்கள் சமுதாய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. இதனை உணர்ந்து நெப்போலியன், ஹிட்லர் முதலிய தலைவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இதழ்களைத் தடை செய்தனர். ஆனால், இங்கிலாந்து நாட்டுப் பிரதமராகிய சர்ச்சில், இதழ்கள் மூலம் மக்களிடத்து விழிப்புணர்வைத் தூண்டித் தமது வெற்றிக்கு இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டமை வரலாற்றுப் பதிவாகும்.

    4.2.2 சமுதாயக் கல்வி புகட்டுதல்

    மக்கள் சமுதாயத்திற்குச் செய்திகளைப் புரிய வைக்கும் கல்வியாளராகவும் இதழ்கள் செயல்படுகின்றன. நாட்டு நலனோடு தொடர்புடைய செய்திகளை வெளியிடும் பொழுது அவை பற்றிய சிறப்புக் கட்டுரைகள், தலையங்கம், தலைவர்கள் பேட்டி, மக்களது கருத்து முதலியவற்றின் வழி விளக்குகின்றன. இவ்வாறு இதழ்கள் சமுதாயத்திற்குக் கல்வி புகட்டும் ஆசானாக விளங்குகின்றன.

    4.2.3 எதிர்க்கட்சியாகச் செயல்படுதல்

    மக்களாட்சி முறை பரவலாகி வரும் நிலையில் எதிர்க்கட்சியாகவும் இதழ்கள் செயல்படுகின்றன. நாட்டின் அரசாங்கத்தில் நடைபெறும் தவறுகள், குறைகள் போன்றவற்றை வெளிச்சமிடும் செயலும் இதழ்களுக்கு உரியவையே.

    சான்றாக, அமெரிக்கக் குடியரசுத் தலைவராக விளங்கிய நிக்ஸன் காலத்திய வாட்டர்கேட் ஊழலை வாஷிங்டன் போஸ்ட் என்ற இதழ் வெளிச்சமிட்டது. அதன் விளைவாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்ஸன் பதவியிழந்தார் என்ற வரலாற்று நிகழ்வைச் சுட்டலாம்.

    4.2.4 வளர்ச்சியில் பங்கேற்றல்

    அரசியல் மற்றும் சமுதாயப் பொருளாதார வளர்ச்சியில் இதழ்களின் பங்கு இன்றியமையாததாகும். நாட்டில் நடைபெறும் வளர்ச்சிகளை, திட்டங்களை மக்களுக்கு இதழ்கள் அறிவிக்க வேண்டும். இந்தியாவில் சாதி, மத வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் பிற்போக்கு மனப்பான்மையும் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. குறுகிய நோக்கத்தோடு செயல்படும் சக்திகளைப் பொதுமக்களுக்கு இனங்காட்டி, நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்ட வேண்டும். பொதுமக்கள் தொண்டு (Public Service) என்பது இதழ்களுக்கு உரிய குறிக்கோள்களுள் சிறப்பானதாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    இதழ்களின் சிறப்புக் குறித்து எட்மண்ட் பர்க் கூறியது யாது?

    2.

    கீழ்க்காணும் இதழ்களின் ஆசிரியர்களைக் குறிப்பிடுக.

    (i)

    யுகாந்தர்

    (ii)

    இந்தியா

    (iii)

    அல்ஹிலால்

    (iv)

    ஹரிஜன்

    (v)

    மராட்டா

    3.

    தமது ஆட்சிக் காலத்தில் இதழ்களைத் தடை செய்த ஆட்சியாளர்கள் யார்? யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:48:53(இந்திய நேரம்)