Primary tabs
-
3.3 திருத்தமும் தவிர்த்தலும்
பல்வேறு வகையான செய்திகளை இதழ்களில் வெளியிடுகின்ற பொழுது சில முறைகளைப் பின்பற்ற வேண்டும். அம்முறைகளைப் பின்பற்றாமல் செய்திகளை வெளியிடுவது வாசகர்கள் செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுத்தும். சில செய்திகளைச் சில முறைகளில் வெளியிடுவதைவிட, திருத்தி வேறு முறைகளில் வெளியிட்டால் செய்தியை வாசகர் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வர். இப்பகுதி, செய்திகளை எவ்வாறு வெளியிடக் கூடாது என்பதையும் அவற்றிற்கான திருத்தங்களையும் சுட்டிக் காட்டுகின்றது.
3.3.1 செயப்பாட்டு வினையைத் தவிர்த்தல்
செய்திகளின் நடையில் உயிரோட்டத்தைக் குறைக்கக் கூடிய மொழிக் கூறுகளைப் பயன்படுத்தக் கூடாது. மொழியின் படிக்கும் வேகத்தைக் கூட்டக் கூடிய மொழிக் கூறுகளையே பயன்படுத்த வேண்டும்.
செயப்பாட்டு வினை, செய்திக்குக் காரணமானவர்களைச் செய்தியிடமிருந்து அந்நியப்படுத்தும் இயல்புடையது. இதன் விளைவாக வாசகர் செய்தியிலிருந்து அந்நியப்படுவார். எனவே செயப்பாட்டு வினையைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
“நகரின் பல பகுதிகளில் கடைகள் தாக்கப்பட்டன. பேருந்து ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது”
இந்தச் செய்தியில் ‘தாக்கப்பட்டன’, ‘தீக்கிரையாக்கப்பட்டது’ என்பன செயப்பாட்டு வினைகள் ஆகும். இப்படி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். இச்செய்தியைப் பின்வருமாறு திருத்தி அமைக்கலாம்.
“போராட்டக்காரர்கள் நகரின் பல கடைகளைத் தாக்கினார்கள். பேருந்து ஒன்றையும் தீயிட்டுக் கொளுத்தினர். பேருந்து முழுதும் எரிந்து சேதமானது.”
என்று எழுதுவதே சிறந்தது.
3.3.2 எதிர்மறையைத் தவிர்த்தல்
செய்திகளை நேரடியாக உடன்பாட்டு நிலையிலேயே தர வேண்டும். எதிர்மறையில் எழுதுவதை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது. ஒரே வாக்கியத்தில் இரண்டு எதிர்மறை வந்தால் பொருள் புரிதலில் இன்னும் குழப்பமாகும். உதாரணத்திற்கு ஒரு செய்தி.
“கல்வித் திட்ட தீர்மானத்தை எதிர்த்து 115 வாக்குகளும், ஆதரித்து 75 வாக்குகளும் கிடைத்தன”
இந்தச் செய்தியில் திட்ட எதிர்ப்பு, எதிர்த்து என்று இரண்டு எதிர்மறைச் சொற்கள் வந்துள்ளன. இதனால் பொருள் குழப்பமே உருவாகும். இதனைப் பின்வருமாறு திருத்தி அமைக்கலாம்.
“கல்வித் திட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிர்த்து 75 வாக்குகளும் கிடைத்தன”
என்று வெளியிடுவது பொருள் தெளிவுக்கு வகைசெய்யும்.
3.3.3 பழஞ்சொற்களைத் தவிர்த்தல்
செய்திகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பொருளற்றுப் போய்விட்ட பழஞ்சொற்களையும் தொடர்களையும் அடிக்கடி ஆள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தாய்க்குலத்திற்கு அறைகூவல்
பரிதாபச் சாவு
நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சி
தீவிரப் புலன்விசாரணை
கண்ணீர்க் கதைபோன்ற தொடர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றின் உண்மையான பொருளை அவை இழந்துவிடுகின்றன. வாசகருக்கு ஒருவித எரிச்சலோ அல்லது நையாண்டி உணர்வோ எழ இது காரணமாகி, செய்தியை உள்வாங்கத் தடையாகிவிடும். இத்தொடர்களைத் திருத்திப் புதிய முறையில் சொற்களை அறிமுகப்படுத்திப் பின்வருமாறு அமைக்கலாம்.
பெண்களுக்கு எச்சரிக்கை!
எதிர்பாராத சாவு!
மனத்தை உருக்கும் நிகழ்ச்சி
வேகமான விசாரணை
சோகக் கதை3.3.4 கூறியது கூறலைத் தவிர்த்தல்
இதழ்களின் தலைப்பிலும் முகப்பிலும் உடலிலும் ஒரே தகவலைக் கூற வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாசகர்களுக்கும் சலிப்பு ஏற்படாத வண்ணம், வெவ்வேறு சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்த வேண்டும்.
விகடன் ஆசிரியர் விடுதலையானார்
என்ற தலைப்பிட்டுவிட்டு, செய்தி முகப்பிலும் செய்தி உடலிலும் இப்படியே ‘விகடன் ஆசிரியர் விடுதலையானார்’ என்றே வெளியிட்டால் வாசகருக்குச் சலிப்பு ஏற்படும். இதனால்,
விகடன் ஆசிரியர் விடுதலை
என்ற தலைப்பிலும்,
‘விடுதலை ஆனார்’
என்று செய்தி முகப்பிலும்,
‘விடுதலை செய்யப்பட்டார்’
என்று செய்தி உடலிலும் எழுதலாம்.