தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருத்தமும் சேர்த்தலும்

  • 3.4 திருத்தமும் சேர்த்தலும்

    வாசகர்களை மையமாகக் கொண்டு சொல்லப்படும் செய்திகளின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் கொடுத்துத் தலைப்புகளைத் திருத்தி அமைக்க வேண்டும். செய்திகள் உயிரோட்டமாக அமைய வேண்டுமெனில் அதற்கேற்ப திருத்தம் செய்ய வேண்டும்.

    3.4.1 செய்தித்தன்மை அடிப்படையில் திருத்தம்

    எந்தச் செய்தியைச் சொல்ல வேண்டுமோ அதைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்ல வேண்டும். கீழ்க்காணும் செய்தியைக் காண்க.

    தனியார்க் கல்லூரி நிருவாகம் கோரிக்கை

    கோயம்புத்தூர், சிறுபான்மையரல்லாத கல்லூரி நிருவாகங்கள் சங்கம் 1976ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார்க் கல்லூரிகள் சட்டத்திற்குப் பல்வேறு திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது. இதில் முதல்வர்களே, பேராசிரியர்களை நியமிக்கும் உரிமை வழங்க வகை செய்து சட்டத் திருத்தம் கொண்டுவர ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.

    இச்செய்தியில் முதல்வர்களே, பேராசிரியர்களை நேரடியாக நியமிக்கக் கோரியிருப்பதே முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகவே கல்லூரி ஆசிரியர்களை நியமிக்க முடியும். அதனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்படுகின்றது. எனவே தலைப்பிலும் செய்தி முன்னுரையிலும் இந்த முக்கியக் கோரிக்கைக்குச் சிறப்பிடம் தந்து எழுதலாம். கோரிக்கை என்று பொதுவாகக் குறிப்பிடுவதைவிட என்ன கோரிக்கை என்பதைச் சரியாகச் சுட்டிக்காட்டுவது வாசகருக்கு நேரடியாகச் செய்தியைச் சொல்வதாகும். இதனைப் பின்வருமாறு திருத்தி அமைக்கலாம்

    “முதல்வர்களே பேராசிரியர்களை நியமிக்க உரிமை வேண்டும்!”

    தனியார்க் கல்லூரிகள் கோரிக்கை!

    என்று தலைப்பிடுவதால் அந்தச் செய்தியின் மையக் கருத்து பளிச்சென்று வெளிப்படுவதுடன், செய்தியும் படிக்கக் கூடியதாக (Readable) அமைகிறது.

    3.4.2 உயிரோட்டம் தரும் வகையில் திருத்தம்

    வெளியிடப்படும் செய்தியில் உயிரோட்டம் இருக்க வேண்டுமாயின் பேச்சு மொழியை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும். அதுவே வழக்கில் உள்ள மொழி, வாழ்வோடு இயைந்த மொழியாகும். சான்றாக,

    “கைத்தறித்துறை அமைச்சர் நாளையும் நாளை
    மறுநாளும் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்
    பயணம் செய்கிறார்”

    என்பதில் எதிர்கால நிகழ்ச்சிக்கு நிகழ்கால விகுதி (-கிறார்) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேச்சு மொழி அமைப்பில் உள்ள அமைப்பாகும். இதுபோன்று பஸ், ரயில், ரோடு போன்ற வழக்கிலுள்ள பிற மொழிச் சொற்களும் ஏராளமாகச் செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல இக்கட்டு, நெளிவு சுழிவு, தாராளமாக, திடீரென போன்ற பேச்சு மொழிச் சொற்களும் பத்திரிகைகளுக்கு உகந்தவையாகும். நீளமான சொற்கள், நீளமான தொடர்களைத் தவிர்த்துச் சிறிய சொற்களையும் சிறிய தொடர்களையும் பயன்படுத்த வேண்டியது அடுத்த தேவையாகும்.

    நீண்ட சொற்கள்
    சுருக்கமான சொற்கள்
    ஏராளமானதாக
    -
    ஏராளமாக
    தொழிலாளர்கள் இடையே
    -
    தொழிலாளரிடையே

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:45:57(இந்திய நேரம்)