தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 சித்திரகவிகளின் வகைகள் - இரண்டாம் பகுதி

  • 6.4 சித்திரகவிகளின் வகைகள் - இரண்டாம் பகுதி

    இரண்டாம்     பகுதியில்     வினாவுத்தரம், காதைகரப்பு,
    கரந்துறைப்பாட்டு, சக்கர பந்தம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,
    அக்கர சுதகம் ஆகியவை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

    6.4.1 வினாவுத்தரம்

    செய்யுளில், சில வினாக்களைக் கேட்டு, அவ்வினாக்கள்
    வாயிலாகப் பதிலைப் பெற்று, அப்பதில்களின் ஒட்டு மொத்தச்
    சேர்க்கையால் ஒரு சொல்லைப் பெறுவது என்ற முறைமை
    இக்கவியாகும்.

    எடுத்துக்காட்டிற்காகப் பின்வரும் உரைநடைப் பகுதியைக்
    காண்போம்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
    வ.எண்
    கேள்வி
    பதில்
    (1)
    செல்வம் என்பதற்கு உரிய
    ஈரெழுத்துச் சொல் யாது?
    திரு
    (2)
    சாப்பிடப் பயனாகும் ; உமி
    தரும் பொருள் யாது?
    நெல்
    (3)
    தோட்டங்களைக் காப்பதற்காக
    இடப்படுவது எது?
    வேலி
    (4)
    சிவபெருமான் இருக்கும் ஊர்
    எது?
    திரு+நெல்+வேலி

    திரு

    நெல்

    வேலி

    அதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும்.

    இதுவே இச்சித்திரகவிக்குரிய உரைநடை எடுத்துக்காட்டாகும்.

    செய்யுள் எடுத்துக்காட்டு :

    பூமகள்யார்? போவானை ஏவுவான் ஏதுஉரைக்கும்?
    நாமம் பொருசரத்திற்கு ஏதென்பார்? - தாம்அழகின்
    பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
    சேர்வென்? திருவேகம் பம்

    வ.எண்

    கேள்வி

    பதில்

    (1)
    பூமகள் (இலட்சுமி) யார்?
    திரு
    (2)
    போகிறவனைப் ‘போ’
    எனச் சொல்லி ஏவுகிற
    ஒருவன்     கூறும்சொல்
    எது?
    ஏகு
    (3)
    பொரு சரம்     எது?
    (போரில் பொருகிற போது
    உயிர் வாங்கச் செல்லும்
    கருவி எது?) அம்பு
    அம்பு
    (4)
    அழகிற்கு     மறுபெயர்
    என்ன?
    அம்
    (5)
    சிவபெருமான் விரும்பி
    இருக்கும் இடம் எது?
    திரு+ஏகு+அம்பு
    +அம்

    திரு

    அம்பு

    அதுவே திருவேகம்பம் என்னும் ஊராகும்.

    6.4.2 காதை கரப்பு

    ஒரு செய்யுளில் தொடக்கமாக அமையும் முதல் எழுத்தை
    விட்டு விட வேண்டும். அடுத்த எழுத்து அதாவது இரண்டாம்
    எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 3ஆம் எழுத்தை
    விட்டுவிட வேண்டும். 4ஆம் எழுத்தை எடுக்க, இவ்வாறாக ஓர்
    எழுத்து விட்டு ஓர் எழுத்து என்ற அமைப்பில் சேர்க்க, சேர்க்கப்
    பெற்ற எழுத்து கடைசிச் சொல்லிற்கு முன் உள்ள எழுத்துத்
    தொடங்கி, முதலடி வரை தலைகீழாகப் படித்தால் ஒரு
    புதுப்பாடலாக அமைவது இவ்வகைச் சித்திரகவியாகும். (காதை =
    சொல், கவிதை; காப்பு = மறைவு)

    எடுத்துக்காட்டு :

    தாயே யாநோவவா வீரு வெமது நீ
    பின் னைவெருவாருதொத்
    வெம்பு கல் வேறிருத்தி வைத்தி சினிச் சைர்
    தாவாருங்நீயே

    பாடல் பொருள்:

    தாயானவனே, எம் வருத்தத்திற்குக் காரணமான ஆசையை
    நீக்கு. எமக்காக இரங்கி வரும் நீ, பின்னர் அச்சத்தை
    உண்டாக்குவது ஏன்? எம் அச்சம் நீக்கி வேறு இடம் தருக.
    எங்கள் ஆசைகளை நீக்கு, அரும்பொருளாக விளங்கும்
    பரம்பொருளே!

    மேலே கோடிட்டுக் காட்டப் பெற்ற
    எழுத்துகள் தலைகீழாகக் கூடிப் பின்வரும்
    செய்யுளைத் தருகின்றன.

    கருவார் கச்சித் திருவே கம்பத்
    தொருவா வென்னீ மருவா நோயே

    பாடல் பொருள்:

    கச்சி, திருவேகம்பத்தில் உறைபவனை எண்ணினால்
    கருவாகும் பிறவி நோய் வாராது.

    இவ்வமைப்பே காதை கரப்பு என்னும் சித்திரகவியாகும்.

    6.4.3 கரந்துறைப்பாட்டு

    ஒரு செய்யுளில் உள்ள எழுத்துகளில் இருந்து சில
    எழுத்துகளைத் தேர்ந்து கொண்டு, மற்றொரு செய்யுளை
    அமைத்துக் கொள்வது என்பது கரந்துறைப்பாட்டு என்னும்
    சித்திரகவியாகும். (கரந்து = மறைந்து; உறை = இருத்தல்;
    பாட்டு
    = செய்யுள்)

    எடுத்துக்காட்டு :

    அகலல்குற் றேரே யதமுதம்
    பகர்தற் ரிதிடையும் பார்க்கின் - முகமதிய
    முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீ
    மைத்தடங்கண் வெவ்வேறு வாள்

    பாடல் பொருள்:

    இப்பெண்ணின் அல்குல் தேர்ச் சக்கரம் போன்றது. வாய்
    இதழ் அமுதம் போன்றது. இடையின் அளவினைச் சொல்லால்
    கூற இயலாது. முகம் சந்திரனைப் போன்றது. பற்கள் முத்துக்கள்
    போன்றவை. மை தடவிய கண்கள் நீலோற்பப் பூப் போன்றவை.
    அவை வாள் போன்று கூர்மையும் உடையவை.

    மேல் பாட்டிலிருந்து,

    அகர முதல வெழுத்தெல்லா மாதி
    பகவன் முதற்றே யுலகு

    என்ற குறளைத் தேர்ந்து கொள்ள இயலும்.

    இவ்வாறு பாடலுக்குள் பாடல் ஒன்று மறைந்திருப்பது
    கரந்துறைப் பாட்டு என்னும் சித்திரகவியாகும்.

    6.4.4 சக்கர பந்தம்

    சக்கர வடிவில், ஏதேனும் ஒரு சுழற்சி முறையில் பாடலை
    அமைப்பது சக்கர பந்தம் என்னும் சித்திரகவியாகும்.

    இது நான்காரைச் சக்கரம் (நான்கு + ஆரம் + சக்கரம்),
    ஆறாரைச் சக்கரம், எட்டாரைச்சக்கரம் என மூவகைப்படும்.
    இதில் நான்காரைச் சக்கரத்திற்கு மட்டும் எடுத்துக்காட்டுத் தரப்
    பெறுகின்றது.

    எடுத்துக்காட்டு :

    மேரு சாபமு மேவுமே
    மேவு மேயுண வாலமே
    மேல வாமவ னாயமே
    மேய னானடி சாருமே

    6.4.5 சுழிகுளம்

    சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச்
    செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் 4 அடி
    கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு
    எழுத்துகளையே     பெற்றிருக்க     வேண்டும். இவ்வெட்டு
    எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய
    வேண்டும். இதன் எடுத்துக்காட்டு பின்வருமாறு :

    கவிமுதி யார் பாவே
    விலையரு மாநற்பா
    முயல்வ துறுநர்
    திருவழிந்து மாயா

    பாடல் பொருள் :

    வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள்
    விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.
    அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி
    முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்

    சித்திரமாகும் முறை :

    என்ற அமைப்பில் மேற்பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச்
    சித்திர வடிவிலும் அமைந்து நலம் சேர்க்கிறது.

    6.4.6 சருப்பதோ பத்திரம்

    இதுவும் பாடலுக்கு நான்கு வரிகள் ; வரிக்கு 8 எழுத்துகள்
    என்ற அமைப்பினது. கீழ் மேல், மேல் கீழ், முன் பின், பின் முன்
    எப்படிப் படித்தாலும் அதே செய்யுள் வருமாறு அமைக்க
    வேண்டும். இவ்வமைப்பே சருப்பதோ பத்திரம் எனப்படும்.
    (முன் பாடத்தில் படித்த சிவாஜி வாயிலே ஜிலேபி போன்ற
    அமைப்பினது இது)

    எடுத்துக்காட்டுப் பாடல் :

    எப்படி வாசித்தாலும் பாடல் அடி மாறாது அமையும் சிறப்பு
    இக்கவிதையில் உண்டு.

    6.4.7 அக்கரச் சுதகம்

    ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப் பெற்றிருப்பதாகக்
    கொள்வோம். அதனைப் பெறப் படிப்படியாக ஒரு சொல்லில்
    உள்ள எழுத்துகளைக் குறைத்துப் பொருள்களைப் பெறுவது
    இவ்வகைச் சித்திர கவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம்
    = நீக்கம்)

    எடுத்துக்காட்டு :

    (1) இலைகளுள் சிறந்தது = தலைவாழை

    (2) தலைவரை விளிப்பது = தலைவா

    (3) உறுப்பினுள் சிறந்தது = தலை

    என்ற உரைநடை எடுத்துக்காட்டுக் கொண்டு இதனை விளங்கிக்
    கொள்ளலாம். செய்யுள் காட்டை வளர்நிலையில் நீங்கள்
    உணரலாம்.

    இன்னும் பல வகைச் சித்திரகவிகள் உள்ளன. அறிமுகப்
    பகுதியான இப்பாடத்தில் சிறிதளவே நாம் அறிந்து கொண்டு
    உள்ளோம். மற்றவற்றை அடுத்த அடுத்த பாட நிலைகளில்
    நீங்கள் அறிய இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:35:08(இந்திய நேரம்)