தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற்காலப் பாண்டியர் சிற்பங்கள்

  • 3.5 பிற்காலப் பாண்டியர் சிற்பங்கள்

    முற்காலப் பாண்டியரது ஆட்சியைத் தொடர்ந்து பாண்டிய
    நாட்டைச் சோழர்கள் கைப்பற்றி ஆண்டனர். அவர்களது ஆட்சி
    முடிந்து முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனால் மீண்டும்
    பாண்டியரது ஆட்சி நிறுவப்பட்டது. இந்தப் பிற்காலப் பாண்டியர்
    சற்று வசதி படைத்தவர்கள் என்பதால் கோயில்களைக்
    கட்டுவதிலும், புதுக்குவதிலும், கோபுரங்கள், மண்டபங்கள்
    கட்டுவதிலும் ஆர்வம் காட்டினர்.

    அழகர் கோயில் பிற்காலப் பாண்டியர்     காலத்தைச்
    சேர்ந்ததாகும். ஆனால் அது சிதைவுறவே வாணாதி ராயர்களில்
    சிறந்த அரசரான சுந்தரத் தோளுடைய மாபலி வாணாதி ராயர்
    என்பவரால் புதுப்பிக்கப் பட்டது. எனினும் பாண்டியர் காலக்
    கற்களை அப்படியே வைத்து அமைப்பு மாறாமல் கட்டியுள்ளனர்.
    இக்கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும்
    இறைவனான பரம சுவாமி என்று அழைக்கப்படும் திருமால்
    சிற்பம் மிக அழகு வாய்ந்ததாகும். இது பஞ்ச ஆயுதங்களுடன்
    செதுக்கப் பட்டுள்ளது. இவரது கையில் உள்ள சக்கரம் பிரயோக
    நிலையில் இருக்கிறது.


    அழகர் கோயில்

    நாங்குநேரி வான மாமலைப் பெருமாள் கோயில் பிற்காலப்
    பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுப் பின்னர் நாயக்கர் காலத்தில்
    புதுப்பிக்கப் பட்டுள்ளது. அம்மாற்றத்தின் பொழுது பிற்காலப்
    பாண்டியர் சிற்பங்கள் சில கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரச்
    சுவரருகே இடம் பெற்றுள்ளன.

    பிற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில் சிற்பங்கள்
    அதிகம் கிடைக்கவில்லை. மேலும் இவர்களின் சிற்பங்களைப்
    பல்லவர், சோழர் சிற்பங்களுக்கு இணையான கலையழகு
    வாய்ந்தவை என்றும் கூற இயலாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:40:41(இந்திய நேரம்)