Primary tabs
-
நாம் சில நேரங்களில், சிலரைப் பார்த்து, ‘இவர் இந்தப் பணிக்குத்
தகுதி இல்லை’, ‘தகுதி இல்லாதவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து
விடுகிறார்கள்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இதற்கு என்ன
காரணம்? அவர் நிர்வகிக்கும் பணிக்குரிய தகுதிகள் எனச் சில
இருக்கின்றன அல்லது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
அத்தகுதிகள் இல்லாதபோதும், தகுதிகள் இல்லாதோரை
நியமிக்கும்போதும் மேற்குறிப்பிட்டவாறு கூறுகின்றோம்.
எனவேதான் வள்ளுவர், ஒருவரை ஒரு பணிக்குத்
தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் முழுமையாக ஆராயவேண்டும்.
அதன் பின்னரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.
(ஆய்ந்து = ஆராய்ந்து, கண் = இடம்,
விடல் = விட்டுவிடவேண்டும்)மேற்குறிப்பிட்ட குறளின் பொருள் என்ன? இந்தச் செயலை, இவன்,
தனக்கு இருக்கும் ஆற்றலால் எளிதாக முடித்துவிடுவான்
என்பதனை ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகு
அந்தச் செயலை அவனிடமே விட்டுவிட வேண்டும்.எனவே ஒரு செயலைச் செய்வதற்கு உரிய ஒருவரை அச்செயலில்
அல்லது பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்னால் அச்செயலை
அல்லது அப்பணியைச் செய்வதற்குரிய தகுதி அவருக்கு உண்டா
என்று ஆய வேண்டும். அதன்பிறகே அந்தப்பணியை அவரிடம்
ஒப்படைக்க வேண்டும் அல்லது அப்பணியில் அவரை அமர்த்த
வேண்டும். இதன் அடிப்படையிலேதான், ஓர் அரசுக்குத் தலைமை
தாங்கும் அரசனுக்கு உற்ற துணையாக அங்கம் வகிக்கும்
அமைச்சனின் தகுதிகள் அமையவேண்டும் என்கிறார் வள்ளுவர்.பண்டைத் தமிழ் மன்னர்களில், சிலர் சிறந்த புலவர்களாகவும்
திகழ்ந்தனர். அவர்களுள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
என்ற பாண்டிய மன்னன் சிறப்புடையவன். அவன் கல்வியின்
பெருமையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘அறிவுடையோன் ஆறு
அரசும் செல்லும்’ (ஆறு = வழி) (புறம்:183) என்று கூறியுள்ளான்.
அதாவது, அறிவுடையவர் சொல்லும் வழியில் அல்லது
நெறிமுறையில், ஆளும் அரசு அல்லது அரசன்
செயல்பட்டிருக்கிறான் என்பது புலனாகிறது.கல்வியில் சிறந்த அறிவுடையவனை மன்னனும் மதித்திருக்கிறான்
என்பதும் அறிவுடையார் அறிவுரையைக் கேட்டிருக்கிறான்,
என்பதும் அவர்கள் அறிவுரையின்படி ஆட்சி செலுத்தியிருக்கிறான்
என்பதும் அறியப்படுகிறது. மேலும் இப்பாடலை இயற்றியவன்
ஓர் அரசன். எனவே தனது பட்டறிவின் (Experience)
அடிப்படையிலும், அக்கால நடைமுறையின்படியும் இத்தகைய
கருத்தைப் பாண்டியன் நெடுஞ்செழியன் வழங்கியுள்ளார் என்று
புலப்படுகிறது. அது மட்டுமல்ல, தனது ஆட்சியில்
அறிவுடையோரையே துணையாக அமைத்துக் கொண்டான்
என்பதுவும் புலப்படும். இதிலிருந்து என்ன அறிய முடிகிறது?
அரசனுக்கு உறுதுணையாக அறிவுடையவர்களையே
அமைச்சர்களாக அமர்த்திக் கொள்ளும் ஒருமரபும்
இருந்திருக்கிறது. இதையே நெடுஞ்செழியனின் கருத்து
வெளிப்படுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே, வள்ளுவர்,
அமைச்சனுக்கு உரிய தகுதிகளில் ஒன்றாக அறிவை அல்லது மதிநுட்பத்தைக் குறிப்பிடுகிறார்.
(மதி = அறிவு, அதி = மிகுந்த, யா = எவை)தனக்கு இயற்கையாக அமைந்துள்ள நுண்ணிய அறிவுடன், மேலும்,
ஆட்சிக்கு உரிய நூல்கல்வியும் ஒருவன் பெற்றிருப்பானானால்
அவனால் செய்ய முடியாத செயல் எதுவுமே இல்லை. அத்தகைய
அறிவுடைய ஒருவரை அமைச்சனாகக் கொண்ட மன்னனுக்குக்
கூடாதது என்று எதுவுமே இல்லை. எனவே, அமைச்சனுக்கு உரிய
தகுதிகளில் ஒன்றாக மதிநுட்பத்தைச் சுட்டுகிறார் வள்ளுவர்.மன்னனுக்குத் துணையாக அமையும் அமைச்சன் தூயவனாக
இருக்கவேண்டும். அவன் உள்ளத்தில் எந்தவித மாசும் இருக்கக்
கூடாது. அவ்வாறு இருந்தால்தான், உள்ளத்தூய்மையுடன்
அரசனுக்கு அறிவுரை கூற இயலும். அத்தகையோனின் துணையே
மன்னனுக்கு உரிய சிறந்த துணை. எனவேதான் வள்ளுவர்,
அமைச்சனுக்கு உரிய தகுதிகளில் ஒன்றாக அறன் அறிதலைச்
சுட்டுகின்றார்.
(ஆன்று = மாட்சிமை, சொல்லான் = சொல்லை உடையவன்)அமைச்சனாகும் தகுதி உடையவன் அறன் என்றால் என்ன
என்பதை முழுமையாக அறிந்தவனாக இருக்கவேண்டும் என்பது
வள்ளுவர் கருத்து. ஆனால் அறன் என்றால் என்ன என்பதையும்
இன்னொரு இடத்தில் விளக்கியுள்ளார். அதாவது மனத்தில் எந்த
விதமான மாசு அல்லது குற்றம் இல்லாத தன்மையே அறம்.
அத்தகைய தன்மை கொண்டவனாக ஓர் அமைச்சன்
இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தூய்மை இல்லாத
அமைச்சனால், நாட்டிற்கும், மக்களுக்கும் அழிவு வருவது உறுதி.
எனவே ஒரு மன்னனுக்குத் துணையாக இருந்து அறிவுரை கூறும்
அமைச்சன், மனத்துக்கண் எந்த மாசும் இல்லாத அறனை
அறிந்தவனாக இருக்க வேண்டும். அதுவே அமைச்சனுக்கு உரிய
தகுதிகளில் முதன்மையானது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.‘பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே, பல் உடைவதும் சொல்லாலே’
என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. பிறரை மகிழ்வூட்டும்,
நல்லசொற்களை ஒருவன் பயன்படுத்தினால், அவனைப் பெரிதும்
மதிப்பதோடு, பல்லக்கு போன்றவற்றில் மகிழ்ச்சியோடு ஏற்றிச்
செல்வர். ஆனால் பிறர் மனம் புண்படும்படி தீமையான சொற்களை
ஒருவன் சொல்வானானால், அதனால் பாதிக்கப்படுபவர்கள்,
அவனை அப்படியே விட்டு விடமாட்டார்கள். அவனைப் பிடித்து
இழுத்து நன்றாக உதைப்பார்கள். அதனால் அவன் பல்லைக் கூட
இழக்க நேரலாம். எனவே, பிறரிடம் பேசும்பொழுது தீய சொற்களை மறந்தும் பேசக் கூடாது என்பதனை வற்புறுத்தவே, மேற்குறிப்பிட்டவாறுள்ள பழமொழி வழங்கி வருகிறது.எனவேதான், வள்ளுவர், பிறரிடம் எவ்வாறு பேசவேண்டும், பேசும்
பேச்சு நம் இயல்புகளை எவ்வாறு வெளியிடும் என்பவைகளைச்
சுட்டிக் காட்ட ‘சொல்வன்மை’ என்ற ஓர் அதிகாரத்தையே
இயற்றியுள்ளார்.சொல்வன்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது நாம் சொல்லும் சொல்
பிறருக்கு நன்மை விளைவிக்கும் நல்ல சொல்லாக அமையுமானால்
அது ஒரு செல்வமாகக் கருதப்படும். அந்தச் செல்வம் பிற எல்லாச்
செல்வங்களை விடவும் மலோனது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
(நாநலம் = நாவின் நலம், யாநலத்து = வேறு எந்த நலத்துள்ளும்,
உள்ளதூஉம் அன்று = அடங்காது)இத்தகைய சிறப்பு வாய்ந்த சொல்வன்மையை அமைச்சருக்கு உரிய
தகுதியாக வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
அறன் அறிதலையும் அமைச்சருக்கு உரிய தகுதியாகச் சுட்டிய
வள்ளுவர், அதே குறளிலேயே, இன்னொரு தகுதியாக ‘ஆன்று
அமைந்த சொல்லான்’ என்றும் குறிப்பிடுகிறார்.• கலந்துரையாடலும் சொல்வன்மையும்
இன்று நாடுகளுக்கிடையே பல்வேறு வகையான அரசியல்
காரணங்களுக்காகக் கலந்துரையாடல் நிகழ்கின்றன.
குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் பற்றியும்
கலந்துரையாடல்கள் நிகழ்கின்றன. கலந்துரையாடலினால் வெற்றியும்
ஏற்படும், தோல்வியும் ஏற்படும். இவற்றில் வெற்றி ஏற்படுவதற்கு
உரிய காரணமாக அமைவது இருதரப்பினருக்கும் இடையே
ஒருமித்த கருத்து நிலவுவது ஆகும். இதற்கு அடிப்படையாக
அமைவது எது?
இருதரப்பினரையும் ஒன்றுபடுத்தும் ஒருவரது செயல். இந்தச் செயல்
எவ்வாறு நிகழ்கிறது? இருதரப்பினர் மனத்தையும் நன்கு புரிந்து,
சொல்ல வேண்டியதை மிகவும் பக்குவமாக, இருதரப்பினரும்
மகிழ்வுடன் ஒத்துக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சொல்லும் ஆற்றல் பெற்றோரால், பலபோர்கள்
நிறுத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சில ஒப்பந்தங்கள்
ஏற்பட்டன. இத்தகைய சொல்வன்மை உடையவரையே வள்ளுவர்,
‘ஆன்று அமைந்த சொல்லான்’ என்று குறிப்பிடுகிறார்.• அமைச்சரும் சொல்வன்மையும்
மன்னனுக்குத் துணையாக அமையும் அமைச்சன், பல நேரங்களில்
மன்னனுக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயம் ஏற்படும். மன்னன்
கோபமாக இருக்கும்பொழுது அல்லது துன்பத்துடன் இருக்கும்
பொழுது அல்லது பிறரைப் பழிவாங்க நினைக்கும்பொழுது, மண் ஆசையினால் பிறர்மீது தேவை இல்லாமல் போர் தொடுக்க
விரும்பும்பொழுது, அமைச்சனின் அறிவுரை மிகவும்
இன்றியமையாதது. அப்பொழுது அமைச்சன் சொல்லும்
அறிவுரைக்கு ஏற்பவே, மன்னனின் செயல் அமையும். இத்தகைய
சூழலில் அமைச்சன், ஆன்று அமைந்த சொல்லை
உடையவனாக இருப்பானானால், மன்னனின் மனத்தை
மாற்றுவதோடு, ஆக்கப் பணிகளில் மன்னனை நெறிப்படுத்த
இயலும். எனவேதான் வள்ளுவர், அமைச்சனுக்குத் தேவையான
தகுதிகளில் ஒன்றாக ஆன்றமைந்த சொல் உடைமையைக்
குறிப்பிடுகின்றார்.