தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.3

  • 6.3 உயிரியல் (Biology)

    உயிர் வாழ்வன பற்றிய அறிவியல், உயிரியல் என
    அழைக்கப்படுகிறது.     இதில்     தாவரங்களைப் பற்றியும்
    விலங்கினங்களைப்     பற்றியும் ஆயப்படுகிறது. இவ்வாய்வின்
    வாயிலாக, தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் உடல் அமைப்பு,
    இயல்புகள், பண்புகள், முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.


    6.3.1 தாவரவியல் (Botany)

    தாவரங்களைப் பற்றி மட்டும் மேற்கொள்ளும் ஆய்வுகள்
    இத்தலைப்பினுள் அடங்கும்.

    • அல்லி இனம்
    தாவரங்களிடையே காணப்படும் சில பொது அடிப்படைக்
    கூறுகளைக் கொண்டு, அவற்றை இனம் பிரிப்பர். அவ்வாறு
    பிரித்ததில் ஒரு பிரிவு அல்லி இனம் என அழைக்கப்படுகிறது.

    அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டையும் உடைய, நீரில்
    மிதக்கும் தாவரங்கள் அல்லி இனத்தைச் சார்ந்தவை. இதன்
    தண்டு (Stem) அது சார்ந்திருக்கும் நீர் நிலையத்தின் நீர்
    மட்டத்திற்கு (Water level) ஏற்ப, தானும் மிதந்து நிற்கும். நீர்
    மட்டம் குறைய குறைய தண்டும் கீழே தாழ்ந்து செல்லும். நீர்
    மட்டம் உயர உயர தண்டும் தானாகவே உயர்ந்து தண்ணீரில்
    மிதக்கும்.

    மேற்குறிப்பிட்ட     தாவரயியல்     உண்மையை     வள்ளுவர்
    அறிந்திருக்கிறார். எனவே, மனிதர்களின் உள்ளத்தின் இயல்புகளைப்
    பற்றிக் குறிப்பிட நினைத்த வள்ளுவர், அதை அல்லி
    இனத்தாவரங்களின் இயல்புகளோடு, ஒப்பிட்டுக் கூறுகிறார்.


    வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்து அனையது உயர்வு


    (குறள்: 595)


    (வெள்ளம் = தண்ணீர், அனைய = ஏற்ப, மலர் = மலரதுதாள்
    (ஆகுபெயர்), நீட்டம் = நீளம் - மலரின் தண்டின் நீளம்
    (ஆகுபெயர்) மாந்தர்தம் = மனிதர்களது)

    தண்ணீரில் மிதக்கும் தாமரை போன்ற அல்லி இனத் தாவரங்களின்
    தண்டின் நீளம,் அவை நிற்கும் நீர் நிலைக்கு வந்து சேரும் நீர்
    மட்டத்தின் உயரத்திற்கு ஏற்ப தாமும் உயர்ந்து நிற்கும். அதுபோல
    மக்களின் உள்ள ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப அவர்களது
    வளர்ச்சியும் அமையும் என்கிறார் வள்ளுவர். உள்ளம் உயர உயர
    அந்த அளவுக்கு ஒருவனது வாழ்வும் உயரும் என்பது இந்தக் குறள்
    தரும் செய்தி.

    தான் நினைத்த கருத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல விரும்பும்
    ஒரு படைப்பாளன், அது எளிமையாகப் புரியும் வகையில், சில
    உவமைகளைக் கையாள்வான். அந்த உவமைகள் பெரும்பாலும்
    இயற்கெனவே பலருக்குத் தெரிந்தவையாக இருக்கலாம். அல்லது
    பார்த்து அறிந்து புரியக் கூடியதாக இருக்கலாம். வள்ளுவர்
    குறிப்பிட்ட அல்லியினத் தாவரங்களை மக்கள் பார்த்திருக்கலாம்.
    ஆனால் அதன் இயல்பை, பார்ப்பவர்     அனைவரும்
    அறிந்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது. அந்தத் தாவரத்தைக்
    கூர்ந்து கவனிப்போருக்கே அதன் தன்மை புலப்படும்.

    வள்ளுவர், தான் உவமையாகக் குறிப்பிடும் தாவரத்தின்
    இயல்பைக் கூர்ந்து கவனித்து அறிந்திருக்கலாம். அல்லது அந்த
    அறிவியல் உண்மையைப் பிறர் வாயிலாக அறிந்திருக்கலாம்.
    ஆனால் ஏதோ ஒரு வகையில் அல்லி இனத் தாவரங்களின்
    இயல்பைப் பற்றிய அறிவு (Knowledge) இருந்தமையாலே, அதை
    மக்களுக்குப் புரியவைக்கும் வகையில் ஓர் உவமையாகப்
    பயன்படுத்தியுள்ளார்.


    6.3.2 விலங்கியல் (Zoology)

    உயிரியலின் ஒரு பிரிவான விலங்கியல் விலங்குகளைக் குறித்து
    விவரிக்கும் அறிவியல் என்பர். விலங்குகளைப்பற்றி ஆய்வு செய்த
    அறிவியல்     அறிஞர்கள், விலங்குகளின்     உடலமைப்பை
    அடிப்படையாகக் கொண்டு அவற்றை இனம் பிரித்துள்ளனர்.
    அவ்வாறு இனம்காட்டியவற்றுள் ஒரு பிரிவை, எலும்பு
    உடையவை. (Vertebrate) எலும்பு இல்லாதவை (In vertebrate)
    என்று இரு பிரிவுகளாகப் பிரிப்பர். எலும்பு இல்லாதவை புழு
    பூச்சிகள்(Insects). அவற்றால் வெயிலின் வெம்மையைத் தாங்கிக்
    கொள்ள இயலாது. நெடுநேரம் வெயிலில் இருந்தால் இறந்துவிடும்.
    இன்றும் கிராமங்களில் தொல்லை தரும் புழு பூச்சிகளை வெயிலில்
    இட்டுக் கொல்லுகின்றனர். எலும்பு இல்லாதவைகளாகிய புழு
    பூச்சிகள் வெயிலில் இடும்போது அவை வெம்மையைத் தாங்கிக்
    கொள்ள முடியாமல் துடிக்கும் - துன்பம் அடையும். இந்த
    உண்மையை அறத்திற்குப்புறம்பாகச் செல்பவர்களை எவ்வாறு அறம்
    தண்டிக்கும் என்பதற்கு உவமையாகப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.

    அன்புடைமையின் பெருமையைக் கூற வந்த வள்ளுவர், எலும்பு
    இல்லாத உடம்பை உடைய புழு பூச்சிகள் போன்றவற்றை எவ்வாறு,
    தன் வெம்மையால் வெயில் துன்புறுத்துமோ, அவ்வாறு அன்பு
    இல்லாதவர்களை அறம் துன்புறுத்தும் என்று குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)