தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற இலக்கியங்கள்

  • 3.5 பிற இலக்கியங்கள்     இதுவரை இசை இலக்கணம் பற்றியும் அதன் விளக்கம் பற்றியும் கண்டோம். சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் இசை பற்றிக் குறிப்பிடும் நூல்கள் பல உள்ளன. அவற்றில் சிலற்றைக் காணலாம்.

    3.5.1 பெருங்கதை

        கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்ட பெருங்கதையில் காப்பியத் தலைவனான உதயணனும், தலைவியான வாசவதத்தையும் இசைக்கலையில் வல்லவர்களாக விளங்குகின்றனர். இந்நூலில் இசை இலக்கணக் குறிப்புகள்பல காணப்படுகின்றன.

    1) யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை ப. 263)

    2) முரசு எவ்வாறு எந்தச் சூழ்நிலையில் ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முரசு அரசவை முன்னிலையில், பெரிய வாயிலுடைய அகன்ற முன்றிலில் இசைக்கப்படும் என்கிறது.

    3) யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ்க கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது.

    4) இசை கற்பிக்கப் பாடசாலைகள் இருந்துள்ளமையைக் கூறுகின்றது.

    5) நூலறிவாகிய கல்வியாலும், செவியறிவாகிய கேள்வியாலும் மிகவும் கூர்ந்து அறிய வேண்டியது இசை என்கிறார். யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.

    3.5.2 சீவக சிந்தாமணி

        திருத்தக்கதேவர் தந்த சீவக சிந்தாமணி இசை இலக்கணச்     செய்திகள்     பலவற்றைத்    தன்னகத்தே கொண்டுள்ளது.

    1) இசையெழுப்பிடும்     முறையைச்     சீவகசிந்தாமணி குறிப்பிடுகின்றது. காந்தருவதத்தை பாடும் பொழுது புருவம் ஏறாமல். கண் ஆடாமல், கண்டம் விம்மாமல், பல் தோன்றாமல், வாய்திறந்து பாடுகிறாளா என்று ஐயுறும்படி பாடினாள் என்பதன் மூலம் பாடும் பொழுது உறுப்புகள் அமையும் நிலை உரைக்கப்பட்டுள்ளது. (சீவ. காந். 658)

    2) இசையுணர் திறம் உடைய கின்னரம் என்ற பறவையைப் பற்றித் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். பெண்கள் யாழிசைத்த பொழுது கின்னரங்கள் வந்து இசை கேட்டு மகிழ்ந்தன. மைந்தர் பாடிய பொழுது இசைக்குறை கேட்டு அவை சென்று விட்டன. மீண்டும் அவள்    பாடியதும் மீண்டும் வந்தன என்கிறார். (660)

    3) பண்ணும் இலயமும் சிறக்க இசை எழுப்பிப் பாட வேண்டும்.     இதனையே     அனைவரும் விரும்புவர் என்கிறது (727).

    4) பாடும் பொழுது ஓரிடத்திலிருந்து (தானம்) மற்றொரு நிலையிடத்திற்குச் செல்லும்பொழுது ஆங்காங்கு ஆலாபனை செய்து இசைக்க வேண்டும் என்கிறது.

    5) பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும். (730)

    3.5.3 பெரியபுராணம்

    சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தைப் பாடும் போது 41 பாடல்களால் அவர் பாடும் இசை முறையைக் கூறுகிறார். அங்கு இசை இலக்கணச் செய்திகளைக் கூறியுள்ளார்.

    1) ஆரோகணம்     (ச ரி க ம ப த நி ச)     என்பதனை ஆரோசை என்றும், அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதனை அமரோசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    2) குழல் துளைகள் மேல் விரல்களை     மென்மையாக அசைத்தும், வழுக்கியும், தழுவியும், வண்டு மலர்மேல் அசைதல் போல் அசைத்தும் பல்வேறு உள்ளோசைகளை எழுப்ப வேண்டும்.

    3) ஆனாயர் முல்லைப் பண்ணை முறைமை வழுவாது இசைத்தார். இசை பண்ணாகும் நிலையை இதன் மூலம் விளக்குகிறார் ஆனாயர். எல்லாச் சுரத்தானங்களையும் நன்கறிந்து அவை முறையாக ஒலி காட்டுகின்றனவா என்பதனை அறிந்து இசைக்க வேண்டும்.

    4) பண்ணமைப்பு முறையில் மந்தரம், மத்திமம், தாரம் ஆகியவையும் வலிவு, சமம், மெலிவு ஆகிய பண்ணமை இடங்களும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு ஆகிய பாடல்வகைகளும், பாணி, தூக்கு, நடை ஆகிய தானத் தொடர்பான விளக்கங்களும் உள்ளன.

    5) குழலைப்பற்றி மிகவிரிவாகக் கூறுகிறது இப்பகுதி. துளை இடும் முறை, நுட்பமான இசை எழுப்பும் முறை, திருவைந்தெழுத்தை இசைத்து, இசை நிகழ்வைத் தொடரும் முறை போன்றன கூறப்பட்டுள்ளன.
     

    3.5.4 பக்தி இலக்கியங்கள்

        தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் இசைத்தமிழ் இலக்கியங்களாகவே உள்ளன. சைவ இலக்கியங்களும், வைணவ இலக்கியங்களும் இசைவளம் பெற்றனவாக உள்ளன. தேவார காலத்தைத் தமிழரின் இசையெழுச்சிக் காலமாகக் கருதலாம்.

        மூவர் முதலிகள் என்று போற்றப்படும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகியோர் கணக்கற்ற பண்களை அமுத வெள்ளமாகப் பொழிந்துள்ளார்கள். பல்வேறு இசைக் கருவிகளையும், இசை இன்பங்களையும், இசை மூலம் இறைவனை வழிபடும் நெறியையும் தந்துள்ளனர். இவர்களுக்கு     முன்னோடியாகக்     காரைக்காலம்மையார் விளங்குகிறார். இவர் பாடிய நட்டபாடைப் பண்ணும், இந்தளப்பண்ணும் முறையே     முதல்,     இரண்டாம் திருமுறைகளின் முதற்பண்ணாக அமைந்துள்ளன.

    1) இசைத்தமிழ் இலக்கியங்களாகப் பக்தி இலக்கியஙகள் உள்ளன.

    2) மூவர் முதலாக அடியார் பாடிய     பாசுரங்களின் வாயிலாக     22 பண்களும் அப்பண்களுக்குரிய இசை இலக்கியங்களும் கிடைத்தன.

    3) திருவிசைப்பா மூலம் சாளர பாணி என்ற பண் கண்டறியப்பட்டுள்ளது.

    4) கீதம் என்பது ஓர் இசைப் பாடலாகும். இதனைக் கிளர்கீதம் என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

    5) திருநாவுக்கரசர் பாடிய திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் ஆகியவை இசைப்பா வகைகளின் சான்றுகளாக உள்ளன.

    6) திருஞானசம்பந்தர் பாடிய யாழ்முரி, திருத்தாளச் சதி, நாலடிமேல் வைப்பு, திருஇருக்குக்குறள், திருஏகபாதம் போன்றன இசைப்பா வடிவமைதிகளைத் தரும் பாக்களாக உள்ளன.

    7) நாலாயிரத்திவ்விய பிரபந்தப் பாசுரங்களும் பண்சுமந்த பாடல்களாக உள்ளன.

    8) பல்லாண்டுப் பாடல், தாலாட்டிசைப் பாடல், நீராடல் பாடல், பாவைப்பாடல் போன்ற பாடல் வகைகளுக்குரிய இலக்கியங்களாக உள்ளன.

    9) 29 பண்களைப் பற்றியும், அவற்றிற்குரிய இலக்கிய வடிவங்களைப் பற்றியும் திவ்வியபிரபந்தம் மூலம் அறிய முடிகின்றது.

    10) பாடல்களை இன்ன தாள அமைதியில் பாட வேண்டும் என்ற கட்டளை அமைதிகளைத் தேவாரப் பாடல்களிலும், இன்ன தாளங்களில் பாட வேண்டும் என்று திவ்விய பிரபந்தப் பாடல்களிலும் காணலாம்.
     

    3.5.5 கல்லாடம்

        கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். இந்நூலில் இசைக் குறிப்புகள் பல உள்ளன.

    1) பாடுவோனுக்குரிய உடற் குற்றங்கள் பற்றிக் கூறுகிறார் ஆசிரியர்.

    2) தும்புருவும் நாரதரும் இசையில் இரட்டையர்கள் என்றும், ஏழிசைகளிலிருந்து     பல்வேறு     வகைப்பண்களும், பண்ணியல்களும்,     திறப்பண்களும்,    திறத்திறப்பண்களும் ்தோன்றும் என்றும் கூறுகிறது

    3) கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.

    4) ஓசைக் குற்றங்கள்

        நாசிப்பாட்டு, பேய் கத்தினாற்போல் பாடுதல், வெடித்த குரலில் பாடுதல், நிறமில்லாத வெள்ளோசையில் பாடுதல், நிறமும் தாளமும் குறைந்த கட்டையான கீழ்த்தாளத்தில் பாடுதல், பாடும் இராகத்தை ஒதுக்கிப்பாடுதல், நெட்டுயிர்த்தல், ஒரு பண்ணைப் பாட அது வேறு ஒரு பண்ணிலிருந்து விலகி நிற்றல், காகம் கரைந்தாற்போல் ஓசையிழைத்துப் பாடுதல், பல ஓசையில் பாடுதல் போன்றவை ஓசைக் குற்றங்கள் என்று கூறுகிறது.

    5) பண்கள் பாடும் முறையை வண்டு, தேனீ, ஞிமிறு, சுரும்புகள் மூலம் விளக்குகிறார். வண்டுகள் கைக்கிளைக் குரலாக, செவ்வழிப்பண் பாடின. தேனிக்கள் உழைகுரலாக அரும்பாலை பாடின. ஞிமிறுகள் இளி குரலாக மருதப்பண் பாடின. சுரும்புகள் விளரிக் குரலாக விளரிப்பண் பாடின. வண்டு, தேனீ, ஞிமிறு, சுரும்பு இவை ஒன்றைவிட ஒன்று பெரியன.
     

     3.5.6 திருப்புகழ்

        அருணகிரிநாதர் தந்த     திருப்புகழ்ப் பாடல்கள் தாளவகை இலக்கியமாகவே திகழ்கின்றன. திருப்புகழ்ப் பாடல்களைப் போல     அருணகிரியார்     படைத்த 18 திருவகுப்புப் பாடல்களும் இசை இலக்கியங்களாக உள்ளன. வடமொழியிலும், தமிழிலும் தாள இலக்கணங்கள் கூறும் நூல்கள் உள்ளன. இத்தாளங்களுக்குரிய இலக்கியமாகத் திருப்புகழ்ப்     பாடல்களே விளங்குகின்றன. இந்நூல் இல்லையேல் இத்தாளங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன. இவை வெறும் கற்பனையா? என்று வினா எழும். இவரது படைப்புகள் இசைத்தமிழுக்குரிய வற்றாத சுரங்கமாகும்.

         திருவகுப்புப் பாடல்களுள் ஒன்று பூதவேதாள வகுப்புப் பாடலாகும். இதில்     பூதவேதாளங்கள் ஆடும் நடனம், பாடும்பண்,     இசைக்கும்  இசைக்கருவிகள் ஆகியவற்றைக்     கூறியுள்ளார்.     இவை   கையினால் சச்சபுட, சாசபுட, சட்பித,    கண்ட,    சச்சரி, மட்டிசை போன்ற தாளங்களைப்    போடுகின்றன.     வராளி, சிகண்டிகை, சீகாமரம், விபஞ்சிசை, பயிரவி, கைசிகை, மலகரி, பவுளி, தனதனாசி, குறிஞ்சிபோன்ற பண்களைப் பாடுகின்றன என்கிறார்.

    1) தொங்கல் இசை இலக்கிய வகைக்குரிய இசை இலக்கியமாகத் திகழ்கிறது. “பெருமானே”, “தம்பிரானே”, குமரவேளே” என்ற தொங்கல்கள் பாடல்களில் உள்ளன.

    2) சந்தப் பாடல்களின் இலக்கியமாக உள்ளன. சந்தமறியாமல் பாட இயலாது. பாடலின் அடிநாதமாகச் சந்தம் விளங்குகிறது.

    தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன - தனதான
    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர - எனவோது.

    3) மும்மை அலகு (திஸ்ரம்) நான்மை அலகு (சதுச்ரம்), ஐம்மை அலகு (கண்டம்), ஏழுமை அலகு (மிச்ரம்), ஒன்பது அலகு (சங்கீர்ணம்) என்ற தாள வகைகளுக்கு எடுத்துக் காட்டான பாடல்கள் பல உள.

    4) சந்தத் திருப்புகழ்ப் பாடல்கள் பல உள. முன்பு அமைந்தது போல ஒரு தாள நடையில் அமையாமல் பல நடைகளில் வருவன பல உள.

    5) மயில் நடனக் காட்சிக் கேற்ற வகையில் ‘அகரமுமாகி’ (பா. 441) அமைந்துள்ளது. இதில்

    செக கண சேகு தகுதிமி தோதி   
      திமி யென ஆடு - மயிலோனே

         என்று மயில் நடன ஒலி ஜதியோடும், இசைச் சுரங்களோடும் பாடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:51:09(இந்திய நேரம்)