தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பிழை திருத்தம்

  • 2.3 பிழை திருத்தம்

    வேர்டு மென்பொருளில் ஆங்கிலமொழி அகராதியும் சொற்களஞ்சியமும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. ஆவணத்தைத் தட்டச்சிடும்போது எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இருப்பின் உடனே சுட்டிக்காட்டும். பிழையான சொல்லின் சரியான சொல்லாக்கத்தை அறிந்து திருத்திக் கொள்ளலாம். ஓரளவு இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளவும் வழியுள்ளது. அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சில சொற்களை நீங்கள் பிழையாகத் தட்டச்சிட்டாலும் தானாகவே சரியான சொல்லாக மாறிவிடும். ஒருபொருள் தரும் பல சொற்களின் பட்டியலைப் பெற்று பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொல்லைப் போட்டுக்கொள்ளவும் முடியும். இவ்வசதிகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

    2.3.1 சொற்பிழை திருத்தம்

    ஒரு சொல்லைத் தட்டச்சிட்டு ஓர் இடவெளி விட்டவுடனே அச்சொல்லின் அடியில் சிவப்பு நெளிகோடு இடப்பட்டால் அச்சொல்லில் எழுத்துப்பிழை உள்ளதெனப் பொருள். சிவப்புக் கோடிடப்பட்ட சொல்லின்மீது சுட்டிக் குறியை வைத்து வலது சொடுக்கிட்டால், சரியான சொல் காட்டப்படும். பிழையைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை எனில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் காட்டப்படும். சரியான சொல்மீது சொடுக்கிட்டால் பிழையான சொல் நீக்கப் பட்டுச் சரியான சொல் போடப்படும். பிழையைப் புறக்கணிக்கவும் வசதி உள்ளது. உள்ளிணைந்த அகராதியில் அச்சொல் இல்லையெனில் சரியான சொல்பற்றிய ஆலோசனை எதுவும் தராது. பெயர்கள், முற்றுப்பெயர்ச் சொற்கள், சொற்சுருக்கங்கள், வட்டாரச் சொற்கள் போன்ற சொற்களைப் பிழையென்றே காட்டும். அகராதியில் இல்லாத சொல், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் எனில், அகராதியில் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வாறு சேர்த்துக் கொண்டால் அதன்பின் அச்சொல்லைப் பிழையெனக் காட்டாது.

    படம் 2.3.1 சொற்பிழை திருத்தம்

    நாட்டுக்கு நாடு ஆங்கில மொழி மாறுபடுகிறது. சொல்லாக்கம் வேறுபடுகிறது. வேர்டு மென்பொருளில் முன்னியல்பாக அமெரிக்க நாட்டு ஆங்கிலமே பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் இங்கிலாந்து நாட்டு ஆங்கிலத்தைப் பின்பற்றுகிறோம். ஆவணத்தை உருவாக்கத் தொடங்கும் போதே மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழியுள்ளது. பட்டிப் பட்டையில்,

    Tools -> Language -> Set Language...

    தேர்ந்தெடுத்து, பட்டியலிலிருந்து விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கேற்றவாறு பிழைதிருத்தச் செயல்முறை அமையும்.

    ஒரு சொல்லுக்கு இணையான பொருளுடைய பிற சொற்களை அறிய வேண்டும் எனில், அச்சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபின், பட்டிப் பட்டையில்,

    Tools -> Language -> Thesaurus...

    தேர்ந்தெடுக்க வேண்டும். இணையான சொற்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். கூடவே அச்சொல்லுக்கான எதிர்ச்சொல்லையும் காட்டும். ஆவணம் முழுமையும் குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கு வேறு சொல்லைப் பதிலிட Edit -> Replace... பயன்படுத்த வேண்டும். அல்லது Ctrl+H விசைகளை ஒருசேர அழுத்தலாம்.

    2.3.2 இலக்கணப்பிழை திருத்தம்

    ஒரு சொல்தொடரில் இலக்கணப்பிழை இருப்பின் அத்தொடரின் கீழாகப் பச்சைநிற நெளிகோடு இட்டுக் கொள்ளும். அதன்மீது வலது சொடுக்கிட்டுச் சரியான சொல்தொடரை அறிந்து திருத்திக் கொள்ளலாம். சொற்பிழையைப் போல இலக்கணப் பிழைக்குத் துல்லியமாக மாற்றுச் சொல்ல இயலாது. எனவே, பெரும்பாலும் பிழை எனச்சொல்லி ஆலோசனை எதுவும் கூறாமல் விட்டுவிடும்.

    ஆவண உருவாக்கத்தின்போது இரு சொற்களுக்கிடையே, காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு அடுத்து ஒரு இடவெளி மட்டுமே விடவேண்டும் எனப் பார்த்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட இடவெளி விட்டால் இலக்கணப்பிழை எனச் சொல்லும்.

    எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகளை தொடக்கம் முதல் இறுதிவரை ஒன்றன் பின் ஒன்றாய்க் கண்டறிந்து திருத்த இன்னொரு எளிய முறை உள்ளது. காட்டியை ஆவணத்தின் தொடக்கத்தில் வைத்துக் கொண்டு, பட்டிப்பட்டையில்,

    Tools -> Spelling and Grammar....

    தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது F7 விசையை அழுத்த வேண்டும். கீழ்க்காணும் உரையாடல் பெட்டி தோன்றும்:

    படம் 2.3.2 சொற்பிழை, இலக்கணப்பிழை திருத்தம்

    மேற்கண்ட உரையாடல் பெட்டியில் பல்வேறு வசதிகள் உள்ளன. சொற்பிழைகள் சிவப்பு எழுத்திலும், இலக்கணப்பிழைகள் பச்சை எழுத்திலும் தோற்றமளிக்கும். விதிமீறல் என்ன என்பதைத் தலைப்பிட்டுக் காட்டும். பிழை திருத்தத்துக்கான ஆலோசனைகள் கீழ்ப்பெட்டியில் காட்டப்படும். பிழையைப் புறக்கணிக்கலாம். அதே பிழையை ஆவணம் முழுமையும் புறக்கணிக்கலாம். ஆலோசனைகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன்படி மாற்றலாம். அகராதியில் இல்லாத சொல்லை அகராதியில் சேர்க்கலாம். பிழைக்கான விதியின் விளக்கத்தை அறியலாம். அகராதி மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    2.3.3 தானியங்கு பிழைதிருத்தம்

    ஆவணத்தில் தட்டச்சிடும்போது வழக்கமாக நாம் செய்யும் சில பிழைகளைத் தானாகவே திருத்திக் கொள்ள வேர்டு மென்பொருளில் வசதி செய்யப் பட்டுள்ளது. பட்டிப் பட்டையில்,

    Tools -> AutoCorrect Options...

    தேர்ந்தெடுங்கள். கீழ்க்காணும் உரையாடல் பெட்டி தோன்றும்:

    படம் 2.3.3 தானியங்கு பிழைதிருத்தங்கள்

    சரிக்குறி (Tick Mark) இடப்பட்ட தேர்வுப் பெட்டிகளை நோக்குங்கள். தானாகவே திருத்திக் கொள்ளப்படுபவை அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன:

    • முதலிரண்டு எழுத்துகள் பெரிய எழுத்து எனில் திருத்திக் கொள்ளல்.
    • ஒரு சொல்தொடரின் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக மாற்றுதல்.
    • அட்டவணைக் கலங்களில் உள்ள உரையின் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக்குதல்.
    • கிழமைப் பெயர்களில் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக்குதல்.
    • கவனக் குறைவாக பெரிய எழுத்து விசை (Caps Lock key) அழுத்தப்பட்டிருந்தால் எழுத்துகளை நேர்மாறாக மாற்றிக் கொள்ளல்.
    • இறுதியாக உள்ள பட்டியலில் உள்ளவாறு சொற்கள் பிழையாக உள்ளிடப்பட்டால் சரியாகத் திருத்திக் கொள்ளும். இச்சொல்லில் இப்படிப் பிழையிருப்பின் இப்படித் திருத்திக்கொள் என இப்பட்டியலில் நாமும் புதிய சொற்களைச் சேர்த்துக் கொள்ள முடியும்.

    அனைத்துத் தேர்வுப்பெட்டிகளிலும் சரிக்குறி இட்டால் அனைத்துத் திருத்தங்களும் செயல்படுத்தப்படும். தேவையில்லை எனக் கருதும் தானியங்கு திருத்தங்களில் சரிக்குறியை நீக்கி விடலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:37:22(இந்திய நேரம்)