தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

  • 2.5 தொகுப்புரை

    • எம்எஸ் ஆஃபீஸ் கூட்டுத் தொகுப்பு, ‘வேர்டு’ என்னும் சொல்செயலி, ‘எக்செல்’ என்னும் விரிதாள், ‘அக்செஸ்’ என்னும் தரவுத்தளம், ‘பவர் பாயின்ட்’ என்னும் முன்வைப்பு, ‘அவுட்லுக்’ என்னும் மின்னஞ்சல் உட்பட பல்வேறு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகளை உள்ளடக்கியதாகும்.
    • ‘வேர்டு’ என்னும் சொல்செயலி, ஆவணங்களைக் கையாள்வதற்கான மென்பொருளாகும். ஒருபக்கக் கடிதம் முதல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் வரை எத்தகைய ஆவணங்களையும் உருவாக்கலாம்.
    • வேர்டு மென்பொருளின் இடைமுகம் பட்டிப்பட்டை, அடிப்படைக் கருவிப் பட்டை, வடிவமைப்புக் கருவிப் பட்டை, அளவுகோல்கள், ஆவணக் காட்சி முறைகள், நிலைமைப் பட்டை ஆகிய ஆவண உருவாக்கக் கருவிகளைக் கொண்டுள்ளது.
    • ஆவணத்தில் உரையைத் தட்டச்சிடும்போது சில வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆவணத்தைத் தட்டசிட்டு முடித்த பிறகே வடிவமைப்பு தொடர்பான மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும்.
    • ஆவணத்தை நிரந்தரமாகக் கணிப்பொறியின் நிலைவட்டில் சேமிக்கும்போது ஆவணத்துக்குப் பொருத்தமான ஒரு பெயரைச் சூட்ட வேண்டும். ஆவணத்தைச் சேமிக்கப் பட்டிப் பட்டையில் File -> Save As... தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கெனவே சேமித்த ஆவணத்தைத் திறந்து திருத்தியமைத்துச் சேமிக்கும்போது Save கட்டளையை இயக்கினால் போதும். அல்லது Ctrl + S விசைகளை ஒருசேர அழுத்தலாம்.
    • ஓர் ஆவணத்தைத் திறக்க File -> Open... தேர்ந்தெடுக்க வேண்டும். மூடுவதற்கு File -> Close பயன்படுத்த வேண்டும். File -> Exit கட்டளை வேர்டு சாளரத்தையே மூடிவிடும்.
    • ஆவணத்தை அச்சிட File -> Print... தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது Ctrl+P விசைகளை ஒருசேர அழுத்தலாம். குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் அச்சிட முடியும். தேவையான படிகள் அச்சிட முடியும்.
    • பக்க ஓரங்கள், பத்தி ஓரங்களை அமைக்கும் வசதி அளவுகோல்களில் உள்ளது. File -> Page Setup மற்றும் Format -> Paragraph ஆகிய பட்டித் தேர்வுகளிலும் இதற்கான வசதிகள் உள்ளன. பத்திகள், வரிகளுக்கிடையே உள்ள இடைவெளியை நிர்ணயிக்க முடியும். பக்க வடிவமைப்பு முழு ஆவணத்துக்கும் பொருந்தும்.
    • உரைப்பகுதியை வடிவமைக்கும் முன்பு அவ்வுரைப்பகுதியைத் தேர்ந் தெடுத்துக் கொள்ள வேண்டும். சுட்டியில் வருடி உரைப்பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம். வேறுபல வழிமுறைகளும் உள்ளன.
    • தேர்ந்தெடுத்த உரைப்பகுதியின் எழுத்துருவை மாற்ற, எழுத்தின் உருவளவு, இயல்பு, நிறம், பின்புல நிறம் ஆகியவற்றை மாற்ற வடிவமைப்புக் கருவிப் பட்டையில் பொத்தான்கள் உள்ளன. Format -> Font... பட்டித் தேர்வையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • பட்டியலுக்குப் பொட்டிட அல்லது வரிசை எண்ணிட Format -> Bullet and Numbering உதவுகிறது. வடிவமைப்புக் கருவிப் பட்டையிலும் இதற்கான பொத்தான்கள் உள்ளன.
    • குறிப்பிட்ட உரைப்பகுதியை வெட்ட, நகலெடுக்க, ஒட்ட முறையே Cut, Copy, Paste ஆகிய கட்டளைகள் Edit பட்டியிலும், சுட்டியின் வலது சொடுக்குப் பட்டியிலும் கட்டளைகளாகவும், அடிப்படைக் கருவிப் பட்டையில் பொத்தான்களாகவும் உள்ளன. Ctrl+X, Ctrl+C, Ctrl+V ஆகிய விசைச் சேர்க்கைகளையும் பயன்படுதலாம். முதலில் வெட்ட, நகலெடுக்க வேண்டிய உரைப்பகுதியைத் தேர்ந்தெடுத்தபின் மேற்கண்ட கட்டளைகளைச் செயல்படுத்த வேண்டும்.
    • வேர்டு மென்பொருளில் ஆங்கில மொழி அகராதியும் சொற்களஞ்சியமும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொற்பிழை, இலக்கணப்பிழைகளை வேர்டு நமக்குச் சுட்டிக்காட்டும். அவற்றைத் திருத்த ஆலோசனையும் வழங்கும்.
    • ஆவணத்தில் எழுத்துப் பிழையுள்ள சொல்லின்கீழ் சிவப்புக் கோடும், இலக்கணப்பிழையுள்ள சொல்தொடரின்கீழ் பச்சைக் கோடும் காணப்படும். அவற்றின்மீது வலது சொடுக்கிட்டுச் சரியான சொல் அல்லது சொல்தொடரை அறிந்து திருத்திக் கொள்ளலாம். Tools -> Spelling and grammar... பட்டித்தேர்வும் பிழைதிருத்த உதவுகிறது.
    • ஒரு சொல்லுக்கு அதே பொருள்கொண்ட வேறுபல சொற்களை அறிந்து பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி Tools -> Language -> Thesaurus... என்னும் பட்டித் தேர்வில் உள்ளது.
    • சிலவகையான பிழைகளை தாமாகவே திருத்தப்படவும் வழியுள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் சில சொற்களில் தட்டச்சின்போது ஏற்படும் வழக்கமான பிழைகள் தாமாகவே திருத்திக் கொள்ளப்படும். இன்ன பிழை நேர்ந்தால் இப்படித் திருத்திக்கொள் என புதிய சொற்களைப் பட்டியலில் சேர்க்கவும் வழியுள்ளது. Tools -> AutoCorrect Options... என்னும் பட்டித் தேர்வில் தானியங்கு பிழைதிருத்தத்துக்கான வழிமுறைகள் உள்ளன.
    • வேர்டு மென்பொருளில் உள்ளணைக்கப்பட்டுள்ள துணுக்குப் படங்களை Insert -> Picture -> Clip Art... தேர்வின்மூலம் ஆவணத்தில் இணைத்துக் கொள்ளலாம். அதே பட்டியில் உள்ள From File... மூலம் ஒரு கோப்பாகச் சேமித்து வைத்துள்ள எந்தப் படத்தையும் ஆவணத்தில் இணைக்கலாம். From Scanner or Camera... மூலம் வருடி அல்லது படப்பிடிப்பியிலிருந்து நேரடியாகப் படத்தை ஆவணத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். New Drawing மூலம் நாமாக ஒரு படம் வரைந்துகொள்ளலாம். ‘படம்வரை கருவிப் பட்டையில்’ படம் வரைவதற்கான கருவிகள் உள்ளன.
    • Table -> Insert -> Table... தேர்வின் மூலம் ஓர் அட்டவணையை ஆவணத்தில் தேவையான இடத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும். அட்டவணையில் விவரங்களை நிறைவு செய்வது தொடர்பான வசதிகள் Table பட்டித் தேர்வில் உள்ளன.
    • ஒரு கடிதத்தை வெவ்வேறு முகவரிகள் உட்பொதித்துத் தனித்தனிக் கடிதமாகத் தயாரித்து அனுப்பும் சுற்றறிக்கை (Mail Merge) வசதி வேர்டு மென்பொருளின் சிறப்புக் கூறாகும். முதலில் கடிதத்தின் உடற்பகுதியை ஓர் ஆவணமாகத் தயாரித்து அதைத் திறந்து வைத்த நிலையில் Tools -> Letters and Mailings -> Mail Merge... தேர்ந்தெடுப்பின் ஆறு படிநிலைகள் (Steps) கொண்ட ஒரு வழிகாட்டி (Wizard), சுற்றறிக்கை தயாரிக்க உதவும்.
    • ஓர் ஆவணத்தைப் பிறர் திறக்கவும் திருத்தவும் முடியாதவாறு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கலாம். Tools -> Options பட்டித் தேர்வில் கிடைக்கும் உரையாடல் பெட்டியில் Security கீற்றில் இதற்கான வசதிகள் உள்ளன.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:37:31(இந்திய நேரம்)