Primary tabs
-
2.0 பாட முன்னுரை
கணிப்பொறிப் பிணையம் என்றால் என்ன, அதற்கான தேவை என்ன, அது எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது பற்றியும், கணிப்பொறிப் பிணையத்தை அமைக்கத் தேவைப்படும் வன்பொருள், மென்பொருள்கள் பற்றியும் முந்தைய பாடத்தில் படித்தறிந்தோம். கணிப்பொறிப் பிணையத்தின் தோற்றம், இன்றைய இணையம் வரையிலான அதன் வளர்ச்சிக் கட்டங்கள் பற்றி இப்பாடத்தில் படிக்க இருக்கிறோம்.
கணிப்பொறி வரலாற்றில் கணிப்பொறிப் பிணையம் ஒரு திருப்புமுனை என்றே கூற வேண்டும். தொடக்க காலத்தில் கணிப்பொறி என்பது பலநூறு பயனர்கள் பயன்படுத்தும் மிகப்பெரும் கணிப்பொறி அமைப்பாகவே இருந்தது. நாளடைவில் தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணிப்பொறிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன்பிறகு அத்தகைய கணிப்பொறிகள் பலவற்றை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய தேவை எழுந்தபோது கணிப்பொறிப் பிணையங்கள் உருவாக்கப்பட்டன.
கணிப்பொறிப் பிணையத்தின் தொடக்க கால வடிவம் ’கோப்பு வழங்கி - கணுக்கள்’ (File Server - Nodes) அமைப்பு முறையாகும். இத்தகு பிணையம் ஒரு மையக் கணிப்பொறியுடன் பிணைக்கப்பட்ட பல கிளைக் கணிப்பொறிகளைக் கொண்டது. மையக் கணிப்பொறியென எதுவுமின்றி பல சொந்தக் கணிப்பொறிகள் ஒருங்கிணைக்கப்பட்டுத் தமக்குள் தகவல் தொடர்பு கொள்ளும் ’நிகர்களின் பிணைய அமைப்புமுறை’ (Peer-to-Peer Network) மிகவும் செலவு குறைந்த பிணைய அமைப்பு முறையாகும்.
‘நுகர்வி - வழங்கி’ அமைப்பு முறையே கணிப்பொறிப் பிணைய வரலாற்றில் ஒரு முக்கிய வளர்ச்சிக் கட்டமாய் அமைந்தது எனலாம். இத்தகு பிணைய அமைப்புமுறை பயன்பாட்டுக்கு வந்த பிறகே, கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சியும் பயன்பாடும் உச்ச கட்டத்தை எட்டின. இன்றைய இணைய அமைப்பும் இத்தகு பிணையத்தை அடிப்படையாகக் கொண்டதே.
இவ்வாறு கணிப்பொறிப் பிணைய வளர்ச்சியில் ஏற்பட்ட பலவேறு கட்டங்கள் பற்றி இப்பாடத்தில் விரிவாகப் படித்தறிவோம்.