Primary tabs
-
2.1 பல்பயனர் கணிப்பொறி அமைப்புமுறை
‘கணிப்பொறி’ என்றவுடன் நமது நினைவுக்கு வருவது தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணிப்பொறிதான் (Personal Computer). குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட கணிப்பொறி சொந்தக் கணிப்பொறி அன்று. கணிப்பொறி வரலாறு தொடங்கி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்தே சொந்தக் கணிப்பொறிகள் பயன்பாட்டுக்கு வந்தன. தொடக்ககாலக் கணிப்பொறிகளை ஒருவர் விலைகொடுத்து வாங்கவோ, வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவோ முடியாது. காரணம் அவற்றின் விலை அவ்வளவு அதிகம்; அவற்றின் உருவளவு அவ்வளவு பெரிது.
‘பெருமளவு பயன்பாட்டுக்கு வந்த தொடக்ககாலக் கணிப்பொறிகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பெருமுகக் கணிப்பொறிகள் (Mainframe Computers) மற்றும் குறுமுகக் கணிப்பொறிகள் (Mini Computers) ஆகும். இவற்றைக் ‘கணிப்பொறி’ எனச் சொல்வதைவிட ‘ஒரு கணிப்பொறி அமைப்பு’ எனக் கூறுவதே பொருந்தும். ஒரே நேரத்தில் பலநூறு பயனர்கள் பணியாற்ற முடியும். இத்தகு கணிப்பொறி அமைப்பைப் ‘பல்பயனர் கணிப்பொறி முறைமை’ (Multiuser Computer System) என்று அழைப்பர். மெய்யான பொருளில் இக்கணிப்பொறி அமைப்பைக் ‘கணிப்பொறிப் பிணையம்’ என அழைக்க முடியாது எனினும் ஒரே நேரத்தில் பலநூறு பயனர்கள் பணியாற்றுகின்ற காரணத்தால் இதனைக் கணிப்பொறிப் பிணையங்களுக்கான முன்னோடி எனக் கொள்வதில் தவறேதும் இல்லை. பெருமுக, குறுமுகக் கணிப்பொறிகள் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.
2.1.1 பெருமுக, குறுமுகக் கணிப்பொறிகள்
பெருமுகக் கணிப்பொறி அமைப்பில் மையக் கணிப்பொறியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேய்மை முனையங்கள் (Remote Terminals) இணைக்கப்பட்டிருக்கும். மையச் செயலகம் (CPU), நினைவகம் (Memory), தரவுச் சேமிப்புச் சாதனங்கள் (Data Storage Devices) ஆகியவை மையக் கணிப்பொறியிலேயே இருக்கும். முனையங்களில் திரையகம் (Monitor), விசைப்பலகை (Keyboard), மையக் கணிப்பொறியுடன் தகவல் தொடர்புக்கான சாதனம் இவை மட்டுமே இருக்கும். எனவே இவற்றை ஊமை முனையங்கள் (Dumb Terminals) என்றும் அழைப்பர். பலநூறு முனையங்களில் ஒரே நேரத்தில் தரவுகளை உள்ளிட்டு மையக் கணிப்பொறியில் சேமித்துக் கொள்ள முடியும். சேமிக்கப்பட்ட தரவுகளிலிருந்து தேவையான தகவல்களை முனையங்களில் பெறவும் முடியும். தரவுச் செயலாக்கப் பணிகள் அனைத்தையும் மையக் கணிப்பொறியே செய்யும். மையச் செயலி மற்றும் நினைவகத்தை முனையங்கள் நேரப் பகிர்வு (Time Sharing) முறையில் பயன்படுத்திக் கொள்ளும்.
கட்டமைப்பு, செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் குறுமுகக் கணிப்பொறி பெருமுகக் கணிப்பொறியை ஒத்ததே. ஆனால் பெருமுகக் கணிப்பொறியோடு ஒப்பிடுகையில் திறனும் பயனர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். குறுமுகக் கணிப்பொறியில் நூற்றுக்கு மேற்பட்ட அளவிலான முனையங்களே இணைக்கப்பட்டிருக்கும். பல்பயனர் கணிப்பொறி அமைப்புகளில் ’யூனிக்ஸ்’ இயக்க முறைமை பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.
2.1.2 பயனரின் உரிமைகளும் சலுகைகளும்
பெருமுக, குறுமுகக் கணிப்பொறி அமைப்பில் முனையங்களில் பணியாற்றும் பயனர்களின் உரிமைகளும் சலுகைகளும் வரம்புக்கு உட்பட்டதாகும். கணிப்பொறி முறைமையின் நிர்வாகி (System Administrator) இவற்றை வரையறை செய்வார். குறிப்பிட்ட தரவுகளை மட்டுமே பார்வையிடுவது, குறிப்பிட்ட கட்டளைகளை மட்டுமே செயல்படுத்துவது, குறிப்பிட்ட பயன்பாட்டு நிரல்களை மட்டுமே இயக்குவது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணியாற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். அவற்றை மீறிப் பயனர்கள் செயல்பட முடியாது. அதே வேளையில் பயனர்கள் தமக்குள்ளே மின்னஞ்சல் மூலமாகத் தகவல் தொடர்பு கொள்வது போன்ற சில சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கும். முனையங்களில் நிலைவட்டு (Hard Disk) போன்ற தகவல் சேமிப்பு சாதனங்கள் இல்லையாதலால் பயனர் சொந்தமான தகவல்களையோ நிரல்களையோ வைத்துக் கொள்ள முடியாது. செயலி, நினைவகம் ஆகியவை இல்லையென்பதால் முனையங்களில் தரவுச் செயலாக்கமோ நிரலியக்கமோ சாத்தியமில்லை.
பல்பயனர் கணிப்பொறி அமைப்பில் பயனர்களுக்கு எவ்விதச் சுதந்திரமும் இல்லை என்பது பெரும் குறையாகக் கருதப்படுகிறது. மேலும் அனைத்துச் செயலாக்கங்களும் மையக் கணிப்பொறியிலே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அது மீத்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும். அதனை நிர்வகிக்கும் முறைமை நிர்வாகியும் மிகுந்த திறைமையுடைவராய் இருக்க வேண்டும். இத்தகு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் நன்மைகளும் உள்ளன. தரவுத்தளம் மட்டுமின்றி பயன்பாட்டு மென்பொருள்களையும் மையக் கணிப்பொறியில் மட்டுமே நிறுவினால் போதும். தரவுப் பராமரிப்பு, தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றை எளிதாகச் செய்ய முடியும். அத்துமீறல்களுக்கு எதிரான அரண்களை அமைப்பது எளிது. இத்தகைய மையப்படுத்தப்பட்ட பல்பயனர் அமைப்பு முறையிலிருந்த குறை, நிறைகள் பிற்காலப் பிணைய அமைப்பு முறைக்கான சிந்தனையைக் கிளறிவிட்டன.