தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P20334- கல்வித்துறைப் பயன்பாடுகள் (Educational Applications)

  • 4.3 கல்வித்துறைப் பயன்பாடுகள் (Educational Applications)

        கல்வித்துறையைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம். பள்ளிக் கல்வியைத் தொடக்கநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி எனப் பிரித்துப் பார்ப்போம் எனில் தொடக்கநிலைக் கல்வியில் கணிப்பொறியின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும் சில கல்வி நிறுவனங்கள் மழலை வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு கணிப்பொறிகளின் வாயிலாகப் பல்லூடகத் (Multi-media) தொழில்நுட்பம் மூலம் பயிற்றுவிக்கும் முறையைப் பின்பற்றுகின்றன. அசைவூட்டம் (Animation), இசை கலந்த காட்சிகளின் வழி கற்றுத் தரும்போது கருத்துகள் குழந்தைகளின் மனதில் எளிதாகப் பதிகின்றன. தற்போது தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளிக் கூடங்களில் கணிப்பொறிப் பயிற்சிக் கூடங்கள் நிறுவப்பட்டு வாரத்தில் சில மணி நேரம் கணிப்பொறிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கணிப்பொறிப் பிணையங்களைப் பெருமளவு பயன்படுத்திக் கொள்ள முடியும். பெரும்பாலான பொறியியல், மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் பெருமளவு இல்லையெனினும் ஓரளவுக்கேனும் பயன்படுத்திக் கொள்கின்றன. தரம்மிக்க முன்னணிக் கல்வி நிறுவனங்கள் சில பிணையத் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. எவ்வாறு என்பதை இப்பாடப் பிரிவில் காண்போம்.

    4.3.1 கற்றலும் கற்பித்தலும் (Learning and Teaching)

       கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறையும் ஒரு குறும்பரப்புப் பிணையத்தைக் கொண்டிருக்கும். அத்தனை குறும்பரப்புப் பிணையங்களும் ஒரு வளாகப் பிணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும். வளாகம் முழுக்க ‘வைஃபி’ மண்டலமாக இருக்கும். அதாவது ‘வைஃபி’ வசதி கொண்ட மடிக் கணிப்பொறி மூலம் கல்லூரிப் பிணையத்தை அணுக முடியும். ஒவ்வொரு மாணவரும் மடிக் கணிப்பொறி வைத்திருப்பார். விடுதி அறைகளிலும் கல்லூரிப் பிணையத்தோடு இணைக்கப்பட்ட கணிப்பொறி இருக்கும். கல்லூரிப் பாடங்களும், பாட விளக்கங்களும், அவற்றுக்கான ‘முன்வைப்புகளும்’ (Presentations) பிணையத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் வளாகத்துக்குள் எங்கிருந்தும் மடிக் கணிப்பொறி மூலம் கல்லூரிப் பிணையத்தை அணுகிப் பாடங்களைப் பெற முடியும். முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்வுக் கால அட்டவணைகள், ஆய்வரங்குகள், கலந்தாய்வுகள், கல்லூரி விழாக்கள் போன்ற விவரங்களையும் பிணையத்தில் காணலாம்.

       ஒவ்வொரு வகுப்பறையிலும் பிணையத்தில் இணைக்கப்பட்ட கணிப்பொறியும் நிகழ்படப் பெருக்கியும் (Video Projector) இருக்கும். ஆசிரியர் கணிப்பொறி உதவியுடன் பாடம் நடத்துகிறார். பிணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள, பாடத்தோடு தொடர்புடைய பல்வேறு தகவல்களையும் ஆசிரியர் தேடியெடுத்து மாணவர்களுக்கு விளக்கிக் கூற முடியும். மாணவர்கள் பாடத்தைக் கவனித்தால் போதும். ஏடுகளில் மிகுதியாகக் குறிப்பெடுக்க வேண்டிய தேவையில்லை. காரணம் ஆசிரியர் எடுத்து விளக்கும் அனைத்து விவரங்களும் கல்லூரிப் பிணையத்தில் இருக்கும். மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றை அணுகிப் படித்துக் கொள்ள முடியும்.

    4.3.2 திட்டப்பணிகள் (Projects)

    பொறியியல், மேலாண்மைத் துறைகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் அவ்வப்போது ஒப்படைப்புகளைச் (Assignments) சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் ஒப்படைப்பு வினாக்களுக்கான விடை காணப் பல நூல்களைப் புரட்ட வேண்டியிருக்கும். இதற்குக் கல்லூரிப் பிணையமும், இணையமும் மாணவர்களுக்கு உதவுகின்றன. ஒப்படைப்புகள் தவிர ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு திட்டப்பணியைத் (Projects) தேர்ந்தெடுக்க வேண்டும். திட்டப்பணிக்கு அந்தப் பாடத்தில் இதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்படாத கருத்துருவைத் (Concept) தேர்ந்தெடுக்க வேண்டும். அக்கருத்துருவை முற்றிலும் புதிய கோணத்தில் அணுக வேண்டும். திட்டப்பணி தொடர்பாக, மாணவர்கள் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியிருக்கும். பல்வேறு விவரங்களைத் திரட்ட வேண்டியிருக்கும். திட்டப்பணியை ஏறத்தாழ ஓர் ஆய்வறிக்கை போலவே தயார் செய்ய வேண்டும்.

    திட்டப்பணிக்கான கருத்துருவைத் தேர்ந்தெடுக்கவும், அதற்கான விவரங்களைத் திரட்டவும் மணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது கல்லூரிப் பிணையமும் இணையமும் ஆகும். அப்பாடத்தில் முன்னாளைய மாணவர்கள் சமர்ப்பித்த திட்டப்பணிகள் சேமிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் புதியதாக ஒரு திட்டப்பணியைத் தேர்ந்தெடுக்க அவை துணைபுரியும். திட்டப்பணிக்கான தகவல்களைத் திரட்ட இணையம் துணைபுரிகிறது. ‘வைஃபி’ அடிப்படையிலான வளாகப் பிணையம் மாணவர்களுக்குப் பெருந்துணையாய் விளங்குகிறது.

    4.3.3 ஆய்வுப் பணிகள் (Research Works)

    பட்ட மேற்படிப்புக்குப் பிறகு மாணவர்கள் ஆய்வுப் படிப்பை (Ph.D) மேற்கொள்கின்றனர். திட்டப்பணிகள் கல்லுரிக்குள் முடிந்து போவது. ஆய்வுப் பணியோ உலகளாவியது. அதாவது குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வுப் பணியை மேற்கொள்பவர், உலகில் இதற்கு முன்பு வேறெவரும் முன்வைக்காத புதிய கருதுகோள்களை ஆய்ந்தறிய வேண்டும். மாணவரின் ஆய்வறிக்கையை அவர் பயிலும் பல்கலைக் கழகம், நம் நாட்டிலுள்ள வேறொரு பல்கலைக் கழகம் மற்றும் வெளிநாட்டிலுள்ள இன்னொரு பல்கலைக் கழகமும் படித்துத் தகுதியானது எனச் சான்றளித்த பிறகே மாணவர் பட்டம் பெற முடியும். மாணவர் பயிலும் பல்கலைக் கழகப் பிணையத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கைகள் தவிர, உலகின் பல்வேறு பல்கலைக் கழகப் பிணையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கை களையும் துருவித் துருவிப் படிக்க வேண்டியிருக்கும். இதற்குக் கல்லூரிப் பிணையமும் இணையமும் மாணவர்களுக்குப் பெரிதும் துணைபுரிகிறது.

    இன்றைய சூழலில் எந்தத் துறையில் எந்தப் பாடப் பிரிவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் மாணவரும் கணிப்பொறி, கணிப்பொறிப் பிணையங்கள், இணையம் ஆகியவற்றின் உதவியின்றித் தம் ஆய்வறிக்கையைத் தயார் செய்துவிட முடியாது. இதுபோன்று இன்னும் பல்வேறு வழிகளில் கல்வித் துறையில் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 18:36:52(இந்திய நேரம்)