தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- மின்-அரசாண்மை (e-Governance)

  • 4.4 மின்-அரசாண்மை (e-Governance)

    அரசு நிர்வாகம், அரசாங்க நடவடிக்கைகள், அரசுத் துறைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான தொடர்புகள் அனைத்தையும் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக நிறைவேற்றும் நடைமுறையே மின்-அரசாண்மை எனப்படுகிறது. இந்தியாவில் பல மாநில அரசுகள் ஏற்கெனவே இத்திசைவழியில் காலடி எடுத்து வைத்துள்ளன. அரசாங்க வேலைகளில் ‘சிவப்பு நாடாத்துவம்’ (Red Tapism) என்பது காலகாலமாய்க் காலூன்றிவிட்ட தத்துவம் ஆகும். பொதுமக்களின் புகார்கள், அரசின் நிவாரணத் திட்டங்கள் அனைத்தும் அரசாங்கக் கோப்புகளில் தூங்கும். அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் ஆமை வேகத்தில் நடைபெறும். மின்-அரசாண்மை இந்த நிலையை மாற்றும். அரசாங்க நடவடிக்கைகளில் கால விரையம் தவிர்க்கப்படும். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர். ஊழலும் முறைகேடுகளும் குறையும். அரசின் திட்டங்களினால் மக்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். எப்படி என்பதைப் பார்ப்போம்.

    4.4.1 அரசு நிர்வாகம் (State Administration)

    அரசு நிர்வாகம் என்பது மாநில ஆட்சி, மாவட்ட ஆட்சி, வட்டாட்சி என மூன்று நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் செயல்படும் பல்வேறு துறைச் செயலர்கள் மாநில அளவிலான நிர்வாகப் பணிகளைக் கவனித்துக் கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியரும், வட்ட நிர்வாகத்தை வட்டாட்சியரும் மேற்கொள்கின்றனர். மின்-அரசாண்மையில் முதல் கட்டமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக தலைமைச் செயலகத்துடன் இணைக்கப்படும். அதேபோல வட்டாட்சியர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்படும். இத்தகைய விரிபரப்புப் பிணைய அமைப்பின் பலனாய் முதற்கட்டமாக அரசு நிர்வாகத்தில் பல நிலைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இருக்கும் கால விரையம் தவிர்க்கப்படுவதுடன் காலகாலமாய் இருந்துவரும் சிவப்பு நாடாத்துவக் கேடுகள் பலவும் களையப்படுகின்றன.

    கணிப்பொறிப் பிணையங்கள் வழியே செயல்படும் ’நிகழ்படக் கருத்தரங்கு’ (Video Conferencing) மூலம் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுடன் நினைத்த நேரத்தில் கூட்டம் நடத்திக் கலந்தாலோசிக்க முடியும். மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் அன்றாடப் பணிகள் எதுவும் பாதிக்கப்படாமல் இருந்த இடத்தில் இருந்தவாறே தலைமைச் செயலருடன் கலந்தாலோசனை செய்து மாவட்ட நிர்வாகம் தொடர்பான உடனடி முடிவுகளை எடுக்க நிகழ்படக் கருத்தரங்கு உதவுகிறது. அதே முறையில் மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர்களுடன் ஆலோசனை நடத்த முடிகிறது.

    அரசு நிர்வாகத் துறைகளுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காவல்துறையாகும். மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்கள் மாவட்டக் காவல் ஆணையர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். மாவட்டத் தலைமைக் காவல் அலுவலகம் மாநிலத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கணிப்பொறிப் பிணையங்கள் இதனைச் சாத்தியம் ஆக்குகின்றன. சட்டம் ஒழுங்கு தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து உடனுக்குடன் முடிவெடுத்துச் செயல்படக் கணிப்பொறிப் பிணையங்களும் அதன் வழியிலான தகவல் பரிமாற்றமும் வழிவகுத்துள்ளன.

    இதே போல வருவாய்த் துறை, விற்பனை வரித் துறை, வணிக வரித் துறை போன்ற அரசின் முக்கிய நிர்வாகத் துறைகளும் விரிபரப்புப் பிணையங்களைக் கொண்டுள்ளன. மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் தலைமைக் கருவூலத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. அன்றாடக் கணக்கு வழக்குகள் உடனுக்குடன் தலைமை அலுவலகத்துக்குக் கிடைத்துவிடும். இவ்வாறு நிதி வளங்களைக் கையாளும் அரசுத் துறைகளில் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அரசு, சரியான முடிவுகள் எடுப்பதற்குச் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்கப் பெறுகின்றன.

    4.4.2 பொதுமக்கள் சேவைகள் (Public Services)

    மின்-அரசாண்மைக்கான விரிபரப்புப் பிணையம் இணையம்வழிச் செயல்படும் புற இணையமாக இருக்கும். சில குறிப்பிட்ட தகவல்களை அரசு அதிகாரிகள் தவிரப் பொதுமக்களும் இணைய இணைப்பு மூலம் அணுக முடியும். அரசின் ஆணைகள், திட்டங்கள், அறிவிப்புகள், அரசிதழ் அறிவிக்கைகள் (Gezette Notifications), ஒப்பந்தப் புள்ளிகள் (Tenders) அனைத்தும் உடனுக்குடன் இணையத்தில் அரசு வலையகத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் ஓர் இணைய உலா மையத்திலிருந்து (Internet Browsing Centre) அவற்றைப் பார்வையிட முடியும். சின்னஞ்சிறு கிராமங்கள் உட்பட மாநிலமெங்கும் சமூக இணைய மையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நிறுவப்படுமாயின் பொதுமக்கள் மிகவும் குறைந்த செலவில் அல்லது இலவசமாக இவ்வசதிகளைப் பெற முடியும்.

    சமூக இணைய மையங்கள் வழியாகப் பொதுமக்கள் அரசுத் திட்டங்களின் தகவல்களை அறிவது மட்டுமின்றி, தங்கள் குறைகளையும், புகார்களையும், முறையீடுகளையும் மாவட்ட ஆட்சியர்க்கு அனுப்பி வைக்க முடியும். மனுவை எழுதி வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கால்கடுக்கக் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. தமது முறையீட்டின் மீது அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் விவரங்களை இணைய மையம் வழியே அறிந்து கொள்ள முடியும். அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய முறைப்படியான விண்ணப்பப் படிவங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. இணையம் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

    தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சிப் பணிகளும் கணிப்பொறி மயமாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி இதில் முன்னணி இடம் வகிக்கிறது. பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் கால்தேய நடக்க வேண்டிய தேவை இல்லை. பிறப்பு, இறப்பு விவரங்கள் கணிப்பொறியில் பதியப்படுகின்றன. எனவே அதற்கான சான்றிதழ்களும் கணிப்பொறி மூலமே வழங்கப்படுகின்றன. அரசு அலுவலகங்களில் அடுக்கி வைக்கப்பட்ட கோப்புகளில் ஒரு தகவலைத் தேடி எடுப்பது எவ்வளவு கடினமான செயல் என்பதை அறிவீர்கள். ஆனால் கணிப்பொறியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுத்தளத்தில் ஒரு தகவலைத் தேடி எடுத்தல் என்பது கண நேரத்தில் செய்து முடிக்கப்படும் வேலையாகும். பல பகுதிகளைச் சேர்ந்த கணிப்பொறிகள் ஒரு பிணையத்தில் இணைக்கப்படும்போது எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கான தகவலையும் பெறுவது சாத்தியமாகி விடுகிறது.

    சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் வடிகால் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தண்ணீர்வரி போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாகச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணத்தையும் இணையம் வழியாகச் செலுத்த முடியும்.

    4.4.3 நில ஆவணங்கள் (Land Records)

    மின்-அரசாண்மையில் அரசு நிர்வாகத்திலும் பொதுமக்கள் சேவையிலும் கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடுகளை அறிந்தோம். சுருக்கமாகச் சொல்வதெனில், சேமித்துப் பாதுகாக்க வேண்டிய தகவல்களையும், ஆவணங்களையும் கணிப்பொறிப் பிணையங்களில் சேமித்து வைப்பதால் தேவையான தகவலைத் தேவையான நேரத்தில் எந்த இடத்திலிருந்தும் உடனடியாகத் தேடிப்பெற முடியும். மின்- அரசாண்மையில் இதற்கான ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

    ஒரு வீட்டு மனை வாங்க விரும்புகிறீர்கள். முதலில் நிலத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும். அதை நீங்கள் பெறுவதற்கு முன்பாக, வேறொருவர் அந்த நிலத்தை வாங்கிவிட வாய்ப்புண்டு. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த நிலைமை மாறிவிட்டது. விண்ணப்பித்த அடுத்த பத்தாவது நிமிடம் கணிப்பொறியில் அச்சிடப்பட்ட வில்லங்கச் சான்றிதழ் உங்கள் கைக்கு வந்து சேரும். அந்நிலம் அமைந்துள்ள பகுதிக்குரிய நிலப்பதிவு அலுவலகத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில்லை. எந்த அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். இது எப்படிச் சாத்தியமாகிறது?

    நில ஆவணங்கள் அனைத்தும் கணிப்பொறி ஆவணங்களாக மாற்றப்பட்டு கணிப்பொறிப் பிணையங்களின் வழங்கிக் கணிப்பொறியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஒரு நில விற்பனை நடைபெறும்போது, நிலப்பதிவு அலுவலகத்தில் விவரங்கள் அனைத்தும் பெரிய பேரேடுகளில் எழுதி வைக்கப்படுவதற்குப் பதிலாகக் கணிப்பொறியில் சேமிக்கப்படுகின்றன. அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களும் கணிப்பொறிப் பிணையத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. எனவே எந்தச் சார்பதிவு அலுவலகக் கணிப்பொறியிலும் எந்த நிலத்தைப் பற்றிய விவரத்தையும் பெறமுடியும். நில விற்பனை ஆவணங்களைப் பதிவு செய்வதில் நடைபெறும் முறைகேடுகளைப் பெருமளவு குறைக்க முடியும்.

    ஒரு நாட்டின் சுதந்திர ஜனநாயகக் குடியரசு மின்-அரசாண்மை மூலமே மெய்யான மக்கள் குடியரசாக மலர்கிறது.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    கல்வி நிறுவனங்களில் கற்றலிலும் கற்பித்தலிலும் கணிப்பொறிப் பிணையங்கள் எவ்வாறு பயன்படுகின்றன
    2.
    மாணவர்களின் திட்டப்பணிகளிலும் ஆய்வுப் பணிகளிலும் பிணையங்கள் எவ்வாறு உதவுகின்றன?
    3.
    மின்-அரசாண்மை என்பது என்ன? அதன் பயன்கள் யாவை?
    4.
    மாநில மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் பிணையப் பயன்பாட்டை விளக்குக
    5.
    மின்-அரசாண்மையில் பொதுமக்கள் பெறும் பலன்கள் யாவை?
    6.
    நில ஆவணங்கள் கணிப்பொறி மயமாக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-06-2017 15:21:11(இந்திய நேரம்)