தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuthathikaram



கருத்தன்மை     துணியப்படும்.     படவே,    அவ்வளபுடையகூட்டுதல் அளவின்பொருட்டென்பது   துணிபாம்.   துணியவே   அவ்வெழுத்துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வருமென்பதூஉம் பெற்றாம். அவை குறியாமாறு ; வெண்பா  இயற்ற  விரும்பிய  புலவன்  ஓதல்  வேண்டுமென   இருசீரை எடுத்துக்கொண்டு  அச்சீரிலுள்ள   தளையை   நோக்கியவிடத்து,   ஓதல் என்பதன்  இறுதியசையும்,  வேண்டுமென்பதன்  முதலசையும்  நேரசையும் நேரசையுமாயியைந்து    நேரொன்றாசிரியத்தளையாக    முடிந்தமைகண்டு, அதனை   வெண்டளையாக்குமாறு   ஓதல்   என்னுஞ்   சொல்லிலுள்ள ஓகாரத்தின்பின்  ஒகரத்தைச்  சேர்த்து  அவ்வளபாக   அவ்வோகாரத்தை யெழுப்பி   இறுதியசையை  நிரையசையாக்கி  வெண்டளை  காடலானும், ‘செறாஅ  அய்வாழிய’  என்றவிடத்து   ஈரெழுத்துக்கூட்டி   அவ்வளபாக எழுப்பித்  தளைசெய்து   கோடலானும்   அறிந்துகொள்க.   ஈரெழுத்தும் அளவாகக்கொள்ளப்படும் என்பதற்கே அவ்வளபுடைய எனப் பன்மையாகக் கூறினார்.  

இன்னும், இசை  குன்றியமொழியினிடத்து  நெட்டெழுத்துக்குப் பின்னே அதனோடொத்த  குற்றெழுத்து  நின்று  அவ்விசையை நிறைக்குமென்னும் பொருளமைய,

“குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே”


என   ஆசிரியர்    கூறியதனானும்,   குற்றெழுத்து   இசைநிறைப்பதன்றி நெட்டெழுத்தோடுகூடி     அளபெடாதென்பது     நன்கு     போதரும். அளபெடுக்குமேல்   நெட்டெழுத்திம்பர்    என்னாது    நெட்டெழுத்துங் குற்றெழுத்துங்கூடி  இசையை  நிறைக்குமென விளங்கச் சூத்திரிப்பார்மன் ; அங்ஙனஞ்  சூத்திரியாமையானும் அவர்க்கது  கருத்தன்றென்பது. அற்றேல், குற்றெழுத்து  இசைநிறைக்குமென்றமையாற்  குறியென்பது போதராதெனின், அது குறியாமாறு பின்னர்க் காட்டுதும்.  

இனி,  குற்றெழுத்துக்கள் குறியாயின் ஆகாரத்துக்கு அகரமின்றி இரகமுங்  குறியாய இடலாமே ?   அகரமேனிடுவானெனின்; அறியாது கடாயினாய். என்னை ? ஆகாரம் ஒருமாத்திரை நீளுங்கால் அகரவடிவாயே நீடலின், அவ்வடிவையுங்  குறித்துக்காட்டுவதற்கே  அகரம்  வரிவடிவில் எழுதுவதாயிற்று.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 19:38:14(இந்திய நேரம்)