Primary tabs
மேற்கூறிய பலவகையான உதவிபுரிந்தவர்களை மறவாம லிருப்பதுடன் இவர்களுடைய க்ஷேமங்களைக் குறித்துத் திருவருளைச் சிந்தித்தலன்றி என்னாற் செய்தற்குரிய கைம்மாறு யாதுளது?
இப்பதிப்பிற் காணப்படும் தவறுகள் என்னுடைய மறதி முதலியவற்றால் நேர்ந்தனவென்றெண்ணிப் பொறுத்துக்கொள்ளும்படி அன்பர்களை வேண்டிக்கொள்ளுகின்றேன்.
ஒன்றுக்கும்பற்றாத என்னையும் இதுபோன்ற
காரியங்களிற் புகுத்தி இந்த அளவிலாவது நடத்தி
நிறைவேற்றியருளும் தோன்றாத் துணையின்
பெருங்கருணையைச் சிந்தித்துத் துதித்து
வந்திக்கின்றேன்.
‘‘தியாகராஜ விலாஸம்’’
திருவேட்டீசுவரம்பேட்டை,
சென்னை, 6-5-18.
இங்ஙனம்
வே. சாமிநாதையன்.
உ
நூலாசிரியர் வரலாறு
‘‘முன்னோ ரொழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக் கெந்நூலாரு மிணையோவென்னுந் துணிவே மன்னுக’’ (இ.கொ. சூ. 8, உரை) எனவும், ‘‘பலகலைக் குருசில் பவணந்தி யென்னும் புலவர் பெருமான்’’ (நன். வி. சூ. 136) எனவும் பாராட்டப்பெற்றவரான இந்நூலாசிரியரை அறியாதார் யாவர்?
இவர் சைன மதத்தினர்; இந்நூலிலுள்ள கடவுள் வணக்கங் களிரண்டும். (சூ. 55, 257) மொழிக்கு முதற்காரணம்* அணுத்திர ளென்ற கோட்பாடும், உயிர்களை ( ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுயிர் இறுதியாக அமைந்திருக்குமுறையும், பவணந்தி யென்னும் பெயரும் இதனைப் புலப்படுத்தும். பிரயோக விவேகவுரையில், ‘‘செயப்படு பொருளை ஆக்கல் அழித்தல் அடைதல் முதலாகச் சினேந்திரன் மதம் பற்றி நன்னூலார் பலவாகக் கூறுவர்’’, ‘‘நன்னூலார் வாமனன் சினேந்திரன்
* நன். சூ. 57, 73; ‘‘ஆற்றலுடையுயிர்’’ (பக். 26) என்னும் சூத்திரமும் இதனை வலியுறுத்துகின்றது.( நன். சூ. 444-48; ‘‘ஒன்றி ரண்டொரு மூன்று நாலைந்தாய், நின்ற வைம்பொறி நெறியின் வாழுயி, ரொன்று நீர்மர நிலநெ ருப்புக்காற், றென்றிக் காயமைந் தெய்தி வாழுமே’’, ‘‘நந்து சிப்பிசங் காதி நாவன, குந்தெ றும்புகோ பாதி மூன்றன, அந்து தும்பிவண் டாதி நாலவைந், திந்தி யம்பசு நரகர் தேநரர்’’ (மேருமந்தர. வச்சிராயுதனுத்தரம், 10, 11.)