Primary tabs
செய்திருத்தலால் இந்நூல் எழுபது பாடலையுடையதென்றும்,
"
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக்1 காடுகாட்கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்"
என்னும் வெண்பாவால் அப்பாடல்களுள், எட்டு திருமாலுக்கும், முப்பத்தொன்று முருகக்கடவுளுக்கும், ஒன்று காடுகிழாளுக்கும், இருபத்தாறு வையையாற்றிற்கும், நான்கு மதுரைக்கும் உரியனவென்றும் தெரிகின்றன.
இப்பாடல்களுள், முதலிலிருந்து தொடர்ச்சியாகவுள்ள இருபத்திரண்டு பாடல்களும், பழைய உரைகளிற் காட்டப்பட்ட மேற்கோள்களிலிருந்து கிடைத்த இரண்டு முழுப்பாடல்களும், சில உறுப்புக்களும், புறத்திரட்டு முதலியவற்றிலிருந்து கிடைத்த சில உறுப்புக்களுமே இப்புத்தகத்தில் உள்ளன.
இவ்விருபத்திரண்டனுள், திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15); முருகக்கடவுளுக்குரியவை எட்டு (5, 8, 9, 14, 17, 18, 19, 21); இப்பதினான்கும் கடவுள் வாழ்த்து. வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 2, 16, 20, 22). கடவுள் வாழ்த்துள் திருப்பரங்குன்றமும் திருமாலிருஞ்சோலைமலையும் கூறப்பெற்ற பாடல்களில் மலைவிளையாட்டும், வையைக்குரிய பாடல்களிற் புனல்விளையாட்டும் வந்துள்ளன.
இவற்றின் பின்னே பதிப்பிக்கப்பெற்ற பகுதிகளுள் திருமாலுக்குரிய முழுப்பாடல் ஒன்று ; வையைக்குரிய முழுப்பாடல் ஒன்று; உறுப்பு ஒன்று; மதுரைக்குரிய உறுப்புக்கள் ஏழு. சில உறுப்புக்கள் இன்ன வகையைச் சார்ந்தனவென்று விளங்கவில்லை.
இந்நூலிலுள்ள,
"புலவரையறியா" என்று தொடங்கும் 15-ஆம்
பாடல் திருமாலிருஞ்சோலைமலை ஆலயத்திலுள்ள
பழைய சிலாசாஸனங்களுள் ஒன்றிற்
காணப்படுகின்றது. "இருமை வகை தெரிந்து" (குறள்
23, பரி.) என்பதன் விசேடவுரையில்
மேற்கோளாகக் காட்டப்பெற்ற “தெரிமாண்
டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன், பரிமா
நிரையிற் பரந்தன்று வையை" என்பது பரிபாடற்
பகுதியென்று நுண்பொருண்மாலையாற் பின்பு
தெரியவந்தது.
1. "கார்கோளுக்கு" என்றும் பிரதிபேதமுண்டு; கார்கோள் - கடல்.