Primary tabs
இ-மகன்:- இகல்வேந்தன் சேனை இறுத்தவாய்
போல
அகலல்குல்தோள்
கண்என மூவழிப் பெருகி
நுதலடி நுசுப்பென
மூவழிச் சிறுகிக்
கவலையாற் காமனும்
படைவிடு வனப்பினோடு
அகலாங்கண் அளைமாறி
அலமந்து பெயருங்கால்
நகைவல்லேன் யானென்றென்
உயிரோடு படைதொட்ட
இகலாட்டி நின்னை
எவன்பிழைத்தேன்? எல்லா யான்;
இ-மகள்:- அஃதவலம் அன்று மன்!
ஆயர் எமரானால்
ஆய்த்தியேம் யாம்மிகக்
காயாம்பூங் கண்ணிக்
கருந்துவர் ஆடையை
மேயும் நிரைமுன்னர்க்
கோலூன்றி நின்றாயோர்
ஆயனை யல்லை பிறவோ
அமரருள்
ஞாயிற்றுப் புத்தேள்
மகன்?
இ-மகன்:- அதனான் வாய்வாளேன்!
முல்லை முகையும்
முருந்தும் நிரைத்தன்ன
பல்லும் பணைத்தோளும்
பேரமர் உண்கண்ணும்
நல்லேன்யான்
என்று நலத்தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு
சொல்லாற்று கிற்பார்யார்?
இ-மகள்:- சொல்லாதி?
இ-மகன்:- நின்னைத் தகைத்தனேன்.
இ-மகள்:- அல்லல்காண் மன்!
மண்டாத கூறி மழகுழக்
காகின்றே
கண்ட பொழுதே
கடவரைப் போலநீ
பண்டம் வினாய
படிற்றால் தொடீஇயநின்
கொண்டது எவன்?
இ-மகன்:- கொண்டது
அளைமாறிப் பெயர்தருவாய்
அறிதியோ அஞ்ஞான்று
தளவமலர் ததைந்ததோர்
கானச்சிற் றாற்றயல்
இளமாங்காய் போழ்ந்தன்ன
கண்ணினால் என்னெஞ்சம்
களமாக் கொண்
டாண்டாயோர் கள்வியை யல்லையோ?
இ-மகள்:- நின்னெஞ்சம்.
களமாக்கொண்
டியாம் ஆளல் எமக்கெவன் எளிதாகும்?
புனத்துளான் எந்தைக்குப்
புகாவுய்த்துக் கொடுப்பதோ?
இனத்துளான் என்னைக்குக்
கலத்தொடு செல்வதோ?
தினைக்காலுள்
யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ?