தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai-திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாச் செய்தி


24. திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாச் செய்தி

தமிழினத் தீரே தமிழினத் தீரே
குமரிநன் னாட்டிற் குணிப்பிற் காலமுன்
நுமருயர் நாக ரிகந்தனைக் கண்டும்
ஞமலியி னிழிந்த நிலைமைய ராகி
மாந்த னுண்ணியும் மதிகிளர் காலம்
தாழ்ந்து நின்றீர் தமிழினத் தீரே
பகுத்தறி வடிப்படை பொருள்களைப் பகுத்தே
முதற்றனித் தாய்மொழி வளர்த்தனர் யாரே
பல்துறை யிலக்கியம் பாவி னியன்றபின்
பொருளிலக் கணமும் புணர்த்தவர் யாரே
முத்தமி ழெனவே இயலிசை கூத்துடன்
ஒத்தமும் மடிமொழி யுணர்த்தவர் யாரே
சோவென் அரண்மேற் சொல்லரும் பல்பொறிக்
காவல் முதன்முதற் கண்டார் யாரே
மகனைமுறை செய்தும் பகையைவிருந் தோம்பியும்
நடுநிலை சால்பு நாட்டினர் யாரே
கையுங் காலுமாய்க் கரவர் வந்தே
வெள்ளை நிறத்தினும் வெடிப்பொலிச் சொல்லினும்
விண்ணவர் நிலையை விளம்பி யேமாற்ற
பகுத்தறி வைப்பயன் படுத்தாது வைத்தே
மதவியற் பித்தமும் மடவியற் கொடையும்
பழங்குடிப் பிறப்பொடு பேதைமை யூட்ட
நிலத்தேவ ரென்னும் நெடும்பொய் நம்பி
அடிமைப் பட்டும் மிடிமைப் பட்டும்
அஃறிணை யாயினிர் அனைத்து மிழந்தீர்
எஞ்சி யிருப்பது செஞ்சொல் தமிழே
அதனை யேனும் அழியாது காப்பீர்
முதலிரு கழக நூல்களு ளெதுவும்
இதுபோ துண்டோ ஏனிலை ஆய்மின்
ஆரிய மொழியில் அனைத்துமொழி பெயர்த்தபின்
அருந்தமிழ் முதனூல் அழியுண் டனவே
ஆங்கில வரசும் அம்மொழிக் கல்வியும்
நயன்மைக் கட்சியும் மறைமலை யடிகளும்
அறிவுறுத் தியபினுஞ் சிறிதுந் திருந்தீர்
அறுப்பானை நம்பும் ஆடுகள் போல
வெறுப்பானை யின்றும் விரும்பித் தொழுதீர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:01:10(இந்திய நேரம்)