தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

"அங்கிங்கெனாதபடி யெங்கும் பிரகாசமாய்", "பண்ணேனுனக்கான பூசை" என்னும் தாயுமானவர் பாட்டுக்களும், "உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும்", "சொல்லிலும் சொல்லின் முடிவிலும்", "எட்டுத்திசையும் பதினாறு கோணமும் என்னும் பட்டினத்தார் பாட்டுக்களும் கடவுளியல்பைத் தெளிவாகக் காட்டும்.

சிவனியமும் திருமாலியமும் முறையே சிவன் என்னும் பெயராலும் திருமால் என்னும் பெயராலும் கடவுளையே வணங்கும் வீடுபேற்று மதங்களாம். ஆதலால் கிறித்தவமும் போலக் கொள்கையால் வேறுபடினும் தெய்வத்தால் ஒன்றாம். எனினும், உருவ வணக்கங் கொள்வதால் வீடுபேற்று மதங்களேயன்றிக் கடவுள் மதமாகா.

கடவுட்கொள்கையும் கோயில் அல்லது உருவவழிபாடுமில்லாத ஆரியர், சிவனியம் திருமாலியம் என்னும் இரு தமிழ மதங்களையுத் ஆரியப்படுத்தற்கும், தம்மினு முயர்ந்த தமிழரை அடிமைப்படுத்தற்கும் கடவுள் முத்தொழிலோன் என்னுங் கொள்கையைப் பயன்படுத்திக்கொண்டு, பிரமன் என்னும் ஒரு தெய்வத்தைப் புதிதாகப் படைத்து, அப்பிரமன் படைப்போனென்றும் திருமால் காப்போனென்றும் சிவன் அழிப்போனென்றும் முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்துவிட்டனர்.

சிவனையும் திருமாலையும் சிவனியரும் திருமாலியரும் முத்தொழில் இறைவனென்றே கொள்வதாலும், முத்திருமேனியர்க்கு முதல்வனொருவன் வேண்டியிருப்பதினாலும், தமிழ அறிஞரும் கடவுள்மதத்தாரும் முத்திருமேனிக் கொள்கையை ஒப்புக்கொள்ளவில்லை.

கடவுள் மதமாவது, காலமும் இடமும்போல முதலும் முடிவும் உருவமும் நிறமுமின்றி, இயல்பாகவே எங்கும் நிறைந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும்,எல்லாம் உடையவனாகவும், முற்றின்பனாகவும், முழுத்தூயனாகவும், எல்லை
யில்லா அருளனாகவும், எல்லாஉலகங்களையும் படைத்துக் காத்தழிப்பவனாகவு மிருந்து ஒப்புயர்வற்று மனமொழி கடந்த கடவுளை, உள்ளத்தில் எங்கும் என்றும் தொழுது, எல்லாவுயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண்டொழுகுதலேயாம். திருவள்ளுவர் சமயமும் அதுவே.

இதனாலேயே அவர் எச்சமயத்தையுந் தழுவாது எல்லாச் சமயங்கட்கும் பொதுவாகக் கூறியதும், எல்லாச் சமயங்களும் கூறும். இறைவன் பெயர்களையும் கடவுட்குப் பொருத்தியதும் என்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:06:27(இந்திய நேரம்)