தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

வேறுநூல் : திருவள்ளுவர் வேறுநூல் செய்ததாகத் தெரிய வில்லை. இவர் பெயரால் வழங்கும் ஒரு சில இவர் பெயரைத் திருட்டுத்தனமாகக் கொண்டனவே.

5. திருவள்ளுவர் காலக் குமுகாய (சமுதாய) நிலை

திருவள்ளுவர் காலத்தில் ஆரியம் வேரூன்றிவிட்டது. நிறம் பற்றிய நால்வகை வரணப்பாகுபாடும் புகுத்தப்பட்டுவிட்டது. தமிழரெல்லாரும் பிராமணருக்குத் தாழ்ந்தவராயினர். பார்ப்பாரென்று சொல்லப்பட்ட இல்வாழ்க்கைப் பிராமணரும் தம்மை அந்தணரென்று கூறிக்கொண்டனர். தொழில்பற்றி யேற்பட்ட குலங்களும் பிறப்புப் பற்றிப் பெயர்பெறலாயின. புலவருள்ளும் பிராமணர் உயர்ந்தவர் என்னுங் கருத்தெழுந்தது, அறங்களெல்லாம் பொதுவாகப் பிராமணர்க்கே செய்யப்பட்டன. தமிழருக்குள் உறவுக்கலப்பும் ஒற்றுமையும் வரவரக் குறைந்துவந்தன. மூவேந்தரும் மன்னர் சிலரும் ஆரியச்சார்பாயிருந்ததினால். பிராமணியத்தைக் கண்டிக்க எவருக்கும் வாயில்லாமற் போயிற்று. அதனாற் புலவரும் அடிமையராயினர். பிராமணர் தெய்வப் பிறப்பினர் என்னுங் கருத்து தமிழருக்குள் வளர்ந்து வந்தது. அதனால் வடசொற்கள் தமிழில் தாராளமாகக் கலக்கவும் தமிழ்ச்சொற்கள் மறையவும் புதுத் தமிழ்ச் சொற்கள் தோன்றாதிருக்கவும், வழிவகுக்கப்பட்டுவிட்டது.

6. திருவள்ளுவர் காலச் சமயநிலை

ஆயிரமாண்டாக ஆரியம் தமிழகத்தில் இருந்துவந்ததினால், சமயத்துறை பெரும்பாலும் ஆரியவண்ணமாக மாறிவிட்டது. அரண்மனைகளிலும் கோயில்களிலும் செல்வர் மாளிகைகளிலும், வழிபாடும் சடங்குகளும் பிராமணராற் சமற்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. அரசர் ஆரியவேள்விகளை வேட்கத் தலைப்பட்டுவிட்டனர். துறவினால் மட்டும் வீடுபேறு கூடுமென்றும், அத்துறவு பிராமணனுக்கே யுரியதென்றும், ஆதன்கள் (ஆன்மாக்கள்) பல அஃறிணைப்பிறப்புப் பிறந்து அதன்பின் உயர்திணைப் பிறப்படைவதுபோல் உயர்திணைப் பிறப்பிலும் பலபிறப்பின்பின்னரே பிராமணனாகப் பிறக்கமுடியு மென்றும் இறைவன் என்றும் பிராமண வடிவிலேயே காட்சியளிப்பானென்றும், ஆரியக்கருத்துக்கள் தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டன. தமிழத் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாக மாற்றுதற்கும் தமிழரை அடிமடையராக்குதற்கும் பலபுராணங்கள் இயற்றப்பட்டன. தமிழர் கொண்முடிபு (சித்தாந்த) நூல்களிலும் ஆரியக் கருத்துக்களும் சொற்களும் சேர்க்கப்பட்டன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:06:36(இந்திய நேரம்)