தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimegalai


9 பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை

 
 

[ மணிமேகலை மணிபல்லவத்திடைப்

 

பீடிகைகண்டு பிறப்பு உணர்ந்த பாட்டு ]

 

 

ஆங்குஅது கண்ட ஆயிழை அறியாள்

காந்தள்அம் செங்கை தலைமேல் குவிந்தன

தலைமேல் குவிந்த கையள் செங்கண்

முலைமேல் கலுழ்ந்துமுத் தத்திரள் உகுத்துஅதின்

5

இடமுறை மும்முறை வலமுறை வாராக்

கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன

இறுநுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்துஆங்கு

எழுவோள் பிறப்பு வழுஇன்று உணர்ந்து

தொழுதகை மாதவ! துணிபொருள் உணர்ந்தோய்!

10

காயங் கரையில் உரைத்ததை எல்லாம்

வாயே ஆகுதல் மயக்குஅற உணர்ந்தேன்

காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப்

பூருவ தேயம் பொறைகெட வாழும்

அத்தி பதிஎனும் அரசாள் வேந்தன்

15

மைத்துனன் ஆகிய பிரம தருமன்!

ஆங்குஅவன் தன்பால் அணைந்துஅறன் உரைப்போய்

தீங்கனி நாவல் ஓங்கும்இத் தீவிடை

இன்றுஏழ் நாளில் இருநில மாக்கள்

நின்றுநடுக்கு எய்த நீள்நில வேந்தே

20

பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந்நகர்

நாகநல் நாட்டு நானூறு யோசனை

வியன்பா தலத்து வீழ்ந்துகேடு எய்தும்

இதன்பால் ஒழிகென,

மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்

25

ஆவும் மாவும் கொண்டுகழிக என்றே

பறையில் சாற்றி நிறைஅருந் தானையோடு

இடவயம் என்னும் இரும்பதி நீங்கி

வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்

காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரைச்

30

சேய்உயர் பூம்பொழில் பாடிசெய்து இருப்ப,

எங்கோன் நீஆங்கு உரைத்தஅந் நாளிடைத்

தங்காது அந்நகர் வீழ்ந்துகேடு எய்தலும்

மருள்அறு புலவ!நின் மலர்அடி அதனை

அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்

35

சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய

அருள்அறம் பூண்ட ஒருபேர் இன்பத்து

உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள்,

அரவக் கடல்ஒலி அசோதரம் ஆளும்

இரவி வன்மன் ஒருபெருந் தேவி

அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று

இலக்குமி என்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன்

அத்தி பதிஎனும் அரசன் பெருந்தேவி

சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்

நீல பதிஎனும் நேர்இழை வயிற்றில்

45

காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய

இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு

பராஅரு மரபின்நின் பாதம் பணிதலும்,

எட்டுஇரு நாளில்இவ் இராகுலன் தன்னைத்

திட்டி விடம்உணும் செல்உயிர் போனால்

50

தீஅழல் அவனொடு சேயிழை மூழ்குவை;

ஏது நிகழ்ச்சி ஈங்குஇன்று ஆகலின்

கவேரக் கன்னிப் பெயரொடு விளங்கிய

தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப்பு எய்துதி;

அணியிழை நினக்குஓர் அருந்துயர் வருநாள்

55

மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி

அன்றுஅப் பதியில் ஆர்இருள் எடுத்துத்

தென்திசை மருங்கில்ஓர் தீவிடை வைத்தலும்

வேக வெந்திறல் நாகநாட்டு அரசர்

சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்துஆங்கு

60

அறச்செவி திறந்து மறச்செவி அடைத்துப்

பிறவிப்பிணி மருத்துவன் இருந்துஅறம் உரைக்கும்

திருந்துஒளி ஆசனம் சென்றுகை தொழுதி;

அன்றைப் பகலே உன்பிறப்பு உணர்ந்துஈங்கு

இன்றுயான் உரைத்த உரைதெளி வாய்என,

65

சாதுயர் கேட்டுத் தளர்ந்துஉகு மனத்தேன்

காதலன் பிறப்பும் காட்டா யோஎன

ஆங்குஉனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம்

பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை

ஈங்குஇவன் என்னும் என்றுஎடுத்து ஓதினை

70

ஆங்குஅத் தெய்வதம் வாரா தோஎன

ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான்என்,

 

பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை முற்றிற்று.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:29:12(இந்திய நேரம்)