தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimeagalai


21 கந்திற்பாவை வருவது உரைத்த காதை

 
 

[ மணிமேகலை உதயகுமரன் மடிந்ததுகண்டு

 

உறுதுயர் எய்த, நெடுநிலைக்கந்தின் நின்ற பாவை

 

வருவது உரைத்து அவள் மயக்கு ஒழித்த பாட்டு ]

 
 
 
கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்தின்
குடவயின் அமைத்த நெடுநிலை வாயில்
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
மதுமலர்க் குழலி மயங்கினள் எழுந்து
5
விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்
கந்துஉடை நெடுநிலைக் கடவுள் பாவை
அங்குஅவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுகஇவ் உருஎனத்
10
தோட்டலர்க் குழலி உள்வரி நீங்கித்,
திட்டி விடம்உண நின்உயிர் போம்நாள்
கட்டழல் ஈமத்து என்உயிர் சுட்டேன்
உவவனம் மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்வுஇலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
15
மணிபல் லவத்திடை என்னைஆங்கு உய்த்துப்
பிணிப்புஅறு மாதவன் பீடிகை காட்டி
என்பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
உன்பிறப்பு எல்லாம் ஒழிவுஇன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
20
அறந்தரு சால்பும் மறம்தரு துன்பமும்
யான்நினக்கு உரைத்துநின் இடர்வினை ஒழிக்கக்
காயசண் டிகைவடிவு ஆனேன் காதல!
வைவாள் விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின்
வெவ்வினை உருப்ப விளிந்தனை யோஎன
25
விழுமக் கிளவியின் வெய்துஉயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்,
செல்லல் செல்லல் சேய்அரி நெடுங்கண்
அல்லிஅம் தாரோன் தன்பால் செல்லல்
நினக்குஇவன் மகனாத் தோன்றிய தூஉம்
30
மனக்குஇனி யாற்குநீ மகள்ஆ யதூஉம்
பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல்
35
என்றுஇவை சொல்லி இருந்தெய்வம் உரைத்தலும்
பொன்திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடுஇப் பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்குஇவன்
40
திட்டி விடம்உணச் செல்உயிர் போயதும்,
நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான்
விஞ்சையன் வாளின் இவன்விளிந் ததூஉம்
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின்
பெறுவேன் தில்லநின் பேர்அருள் ஈங்குஎன,
45
ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள்எனத்
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்:
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரை
மாயம்இல் மாதவன் வருபொருள் உரைத்து
மருள்உடை மாக்கள் மனமாசு கழூஉம்
50
பிரம தருமனைப் பேணினிர் ஆகி
அடிசில் சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும்
மாலை நீங்க மனமகிழ்வு எய்திக்
காலை தோன்ற வேலையின் வரூஉ
55
நடைத்திறத்து இழுக்கி நல்அடி தளர்ந்து
மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனைச்
சீலம் நீங்காச் செய்தவத் தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளும் தலையும் துணிந்துவேறு ஆக
60
வாளில் தப்பிய வல்வினை அன்றே
கூந்தல் மெல்இயல் நின்னோடு
 
இராகுலன் தன்னை இட்டுஅக லாதது
தலைவன் காக்கும் தம்பொருட்டு ஆகிய
அவல வெவ்வினை என்போர் அறியார்
65
அறஞ்செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம்செய் துளதுஎனின் வல்வினை ஒழியாது
ஆங்குஅவ் வினைவந்து அணுகும் காலைத்
தீங்குஉறும் உயிரே செய்வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும
70
ஆங்குஅவ் வினைகாண் ஆயிழை கணவனை
ஈங்கு வந்துஇவ் இடர்செய்து ஒழிந்தது.
இன்னும் கேளாய் இளங்கொடி நல்லாய்
மன்னவன் மகற்கு வருந்துதுயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்
75
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கிடும்.
இடுசிறை நீக்கி இராசமா தேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர்அடி வணங்கித்
தீது கூறஅவள் தன்னொடும் சேர்ந்து
80
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டுக்
காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரசுஆள் செல்வத்து ஆபுத் திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருள்உரை பொருந்தி
85
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம்இல் செய்தி மணிபல் லவம்எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவ திலகையின் தன்திறம் கேட்டுச்
சாவக மன்னன் தன்நாடு அடைந்தபின்
90
ஆங்குஅத் தீவம்விட்டு அருந்தவன் வடிவாய்ப்
பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை;
ஆங்குஅந் நகரத்து அறிபொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
இறைவன் எம்கோன் எவ்வுயிர் அனைத்தும்
95
முறைமையில் படைத்த முதல்வன்என் போர்களும்,
தன்உரு இல்லோன் பிறஉருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும்என் போர்களும்,
துன்ப நோன்புஇத் தொடர்ப்பாடு அறுத்துஆங்கு
இன்பஉலகு உச்சி இருத்தும்என் போர்களும்,
100
பூத விகாரப் புணர்ப்புஎன் போர்களும்
பல்வேறு சமயப் படிற்றுஉரை எல்லாம்
அல்லிஅம் கோதை கேட்குறும் அந்நாள்,
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னைஎன்று அறைந்தோன் தன்னைப்
105
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டுஇங்கு
ஒள்ளியது உரைஎன உன்பிறப்பு உணர்த்துவை
ஆங்குநின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக்
110
காம்புஎன தோளி கனாமயக்கு உற்றனை
என்றுஅவன் உரைக்கும் இளங்கொடி நல்லாய்
அன்றுஎன்று அவன்முன் அயர்ந்துஒழி வாய்அலை;
தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே என்று மயக்குஒழி மடவாய்!
115
வழுவறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ
அறியாய் ஆயின் ஆங்குஅது கேளாய்:
முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
120
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்
முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்
காப்புஉடை மாநகர்க் காவலும் கண்ணி
யாப்புஉடைத் தாக அறிந்தோர் வலித்து
125
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்குஅத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
ஊன்கணி னார்கட்கு உற்றதை உரைக்கும்.
என்திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய்
130
மன்பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்
துவதிகன் என்பேன் தொன்றுமுதிர் கந்தின்
மயன்எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான்என் நிலையது கேளாய்:
மாந்தர் அறிவது வானவர் அறியார்
135
ஓவியச் சேனன்என் உறுதுணைத் தோழன்
ஆவதை இந்நகர்க்கு ஆர்உரைத் தனரோ
அவனுடன் யான்சென்று ஆடிடம் எல்லாம்
உடன்உறைந் தார்போல் ஒழியாது எழுதிப்
பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து
140
நாநனி வருந்தஎன் நலம்பா ராட்டலின்
மணிமே கலையான் வருபொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என்சொல் தேறுஎன,
தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறுகடை போக எனக்குஅருள் என்றலும்,
145
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய்: மடக்கொடி நல்லாய்!
மன்உயிர் நீங்க மழைவளம் கரந்து
பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய
ஆங்குஅது கேட்டே ஆர்உயிர் மருந்தாய்
150
ஈங்குஇம் முதியாள் இடவயின் வைத்த
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்நின் பயந்தோர் தம்மொடு போகி
அறவணன் தானும் ஆங்குஉளன் ஆதலின்
செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை
155
அறவணன் அருளால் ஆய்தொடி அவ்வூர்ப்
பிறவணம் ஒழிந்துநின் பெற்றியை ஆகி
வறன்ஓடு உலகின் மழைவளம் தரூஉம்
அறன்ஓடு ஏந்தி ஆர்உயிர் ஓம்புவை
ஆய்தொடிக்கு அவ்வூர் அறனொடு தோன்றும்
160
ஏது நிகழ்ச்சி யாவும் பலஉள
பிறஅறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்குநீ உரைத்த அந்நாள்
தவமும் தருமமும் சார்பில் தோற்றமும்
பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
165
மறஇருள் இரிய மண்உயிர் ஏமுற
அறவெயில் விரித்துஆங்கு அளப்புஇல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும் காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்
170
தாயரும் நீயும் தவறுஇன்று ஆக
வாய்வ தாகநின் மனப்பாட்டு அறம்என
ஆங்குஅவன் உரைத்தலும் அவன்மொழி பிழையாய்
பாங்குஇயல் நல்அறம் பலவும் செய்தபின்
கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள
175
உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம்
ஆண்பிறப் பாகி அருள்அறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்குஅறம் அருளும் பெரியோன் தனக்குத்
தலைச்சா வகனாய்ச் சார்புஅறுத்து உய்தி
180
இன்னும் கேட்டியோ நல்நுதல் மடந்தை
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்குதிரை எடுத்த மணிமே கலாதெய்வம்
சாது சக்கரற்கு ஆர்அமுது ஈத்தோய்
ஈது நின்பிறப்பு என்பது தெளிந்தே
185
உவவனம் மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேள்எனத்
துவதிகன் உரைத்தலும், துயர்க்கடல் நீங்கி
அவதி அறிந்த அணியிழை நல்லாள்
வலைஒழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும்
190
உலகுதுயில் எழுப்பினன் மலர்கதி ரோன்என்.
 
 

கந்திற்பாவை வருவது உரைத்த காதை முற்றிற்று.
 

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:30:57(இந்திய நேரம்)