Primary tabs
முன்னுரை
இனிப் பிரச்சோதன மன்னன் தன் மக்கள் கலை பயின்று நிரம்பினர் என்று தன் தேவியர்க்குக் கூறியபொழுது,
''திருநுதல் ஆயத்துத் தேவியர் நடுவண்
பெற்ற நாளினும் பெரும்பூட்
புதல்வரைக்
கற்ற நாள்வயிற் கலிசிறந் துரைஇ
மகிழ்ச்சிக் கிளவி மழையென இசைப்ப''
(1-37: 78-81)
எனவரும் புலவர்மொழி,
''ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்''
(குறள் : 61)
என்னும் திருக்குறளின் விளக்கமே யன்றோ?
இனிக்
''கவற்சியிற் கையறல் நீக்கி
முயற்சியில்
குண்டுதுறை இடுமணல் கோடுற அழுந்திய
பண்டிதுறை யேற்றும் பகட்டினை போல
இருவேம் இவ்விடர் நீக்குதற் கியைந்தனம்''
(1 - 53 : 52 - 55)
எனவருமிது,
''மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து''
(குறள் : 624)
எனவரும் திருக்குறள் நினைவானெழுந்ததாம். இதோ,
''ஒலித்தக்கால் என்னாம் உவரி
எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்''
(குறள் : 763)
என்னுமித் திருக்குறளை,
''மத்துறு கடலிற் றத்துறு நெஞ்சினர்
பைவிரி நாகத் தைவாய்ப் பிறந்த
ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல
ஒழிந்தோர் ஒழிய''
(1. 56 : 272 - 275)
என்னுமி தன்கண் காண்மின்.