Primary tabs
சைவசமயச் சார்புடைய குடியிற் பிறந்து அச்சமயத்தையே ஆர்வத்துடன் பேணிப் பயிலும் யான் பிற சமயமாகிய ஆருகத சமயத்தின் நுணுக்கங்களை எத்துணை பயின்றாலும் முற்றும் அறிந்துகோடல் அரிதென்பது தேற்றம். ஆதலால் இந்நூலின்கண் சமயக் சார்பான கருத்துக்களில் யான் பிழைத்திருத்தல் கூடும். ஆகவே அத்தகைய பிழைகளைப் பொறுத்தருளுதலோடு அச்சமயச் சான்றோர் அத்தகைய பிழைகளை எனக்காதல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்காதல் தெரிவிப்பார்களாயின் நன்றியறிதலோடு அத்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு இந்நூலின் மறுபதிப்பில் ஒருதலையாகச் சேர்த்து வெளியிட முயல்வேம் என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இனி, நண்பர் இராமசாமிப் புலவர் அவர்களால்
விடப்பட்டிருந்த செய்யுட்கள் பெரும்பாலும்
அரிதுணர் பொருளனவாகவே இருந்தன. பெரிதும்
முயன்று அவற்றிற்கெல்லாம் ஒருவாறு உரை எழுதி
முடித்தேன். அவற்றுள்ளும் ஒரு செய்யுள் பொருள்
விளக்க மின்றி யிருந்தது; எவ்வளவு முயன்றும்
அதன் பொருளைத் தெளிந்துகொள்ள முடியவில்லை.
அச்செய்யுளாவது,
மாதுளம் பருவ வித்து
மஞ்சில்நின் றகன்ற சாகை
மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய்
சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா
விடுசுடர் விளங்கு பூணோய்."