Primary tabs
வித்தியாதரருலகிலிருந்து நிலவுலகத்திற்கு வந்த தூதனொருவன் சுவலனசடி மன்னனைக் கண்டு வணங்கி வேந்தே! வித்தியாதரருலக அரசர் பலரும் அச்சுவ கண்டனோடு கூடி நுங்கள்மேல் போர்செய்யக் கருதியிருக்கின்றனர். மேலும் திவிட்டன் சிங்கத்தைக் கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற விச்சாதரர் அஞ்சினர். அரிமஞ்சு என்னும் அமைச்சன் அச்செய்தியை அச்சுவகண்டன் அறியாமல் மறைத்து வைத்தான். பின்னர் மாயச்சிங்கமாய்ச் சென்ற அரிகேதுவையே அச்சுவகண்டன்பால் அச்செய்தியை அறிவிக்கும்படி விடுத்தான். அரிகேது அவ்வரசன்பாற் சென்று திவிட்டன் மறச்செயலையும் அவன் திறைதர மறுத்து அச்சுவ கண்டனை இகழ்ந்ததனையுங் கூறினான். அது கேட்டலும் அச்சுவ கண்டன் கண்கள் தீக் கான்றன. கைகளால் அயல்நின்ற கற்றூண் ஒன்று துகளாகும்படி மோதி வீழ்த்தான். அவன் சினங்கண்டு அவையோர் திகைத்தனர். அப்பொழுது மற்றொரு தூதன் வந்து சடிமன்னன் சுயம்பிரபையை நிலவுலகத்திற்கு அழைத்துச் சென்று அவளைத் திவிட்டனுக்குத் திருமணம் செய்வித்ததனையுங் கூறினான். அச்சொற் கேட்டலும் அச்சுவ கண்டன் சினம் ஊழிப்பெருந்தீயென ஓங்கிற்று. உடனே தன் படைகள் போருக்குப் புறப்படவேண்டும் என்று பறை சாற்றுவித்தான். அவனுடைய தம்பியரும் மறவுரை பல பேசினர். அவனுடைய மறவருட் சிலர் சடிமன்னன் தலைநகரமாகிய இரதநூபுர நகரத்தைத் தீக்கொளுவ விரைந்தனர். அச்சுவகண்டன் பெரும்படையுடன் நிலவுலகிற்குச் செல்லப் புறப்பட்டனன்.
இச்செய்தி கேட்ட சடி பயாபதி முதலியோருடன் இது பற்றி ஆராய்ந்து அச்சுவகண்டனை எதிர்த்துப் போரிடுவதே நன்றென்று துணிந்தனன். திவிட்டனுக்கு வித்தியாதர வேந்தனோடு போர் செய்தற்குரிய மாயமந்திரம் பலவற்றையும் கற்பித்தான்.