தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

| Choolamani |

இங்ஙனம் நிகழும் பொழுது அச்சுவகண்டன் தூதனொருவன் வந்து அவ்வரசர்களை நோக்கி வேந்தர்களே! நீங்கள் அச்சுவகண்டனுக்குச் சுயம்பிரபையை வழங்குவீர்களா? அல்லது அவளை மணந்த திவிட்டன் உயிரை எம்மன்னனுக்குத் திறையாகக் தருவீர்களா? விரைந்து இவ்விரண்டில் ஒன்றைத் துணிந்து கூறுங்கள் என்றான். அம்மொழி கேட்டவுடனே; திவிட்டன் நெஞ்சினுட் சினத்தீப்பற்றி எரிந்தது. கண்களில் தீப்பொறி பறந்தன. அப்பொழுது அவன் மானிடனல்லன், தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பது நன்கு விளங்கிற்று. அத்தூதர்கள் விரைந்தோடினர். அப்பொழுது வானின்கண் "இத்திவிட்டனே வெற்றி பெறுவான்" என ஒரு தெய்வமொழி தோன்றிப் பரவியது. பயாபதி முதலியோர் மனம் குளிர்ந்தனர்; நன்னிமித்தங்கள் பல தோன்றின.

அப்பொழுதே அச்சுவகண்டன் பக்கலிலே தீ நிமித்தங்கள் பல தோன்றின. அவற்றை உணர்ந்தும் அவ்வித்தியாதரர் மானமே பெரிதெனப் கருதிப் போருக்குப் புறப்பட்டனர். இருதிறப் படைகளும் ஒன்றனையொன் றெதிர்ந்து போர்தொடங்கின. அவ்வழி அஞ்சத்தகுந்த பெரும்போர் ஒன்று நிகழலாயிற்று.

அப்போர்க்களத்தின்கண் அச்சுவகண்டனுடைய தம்பியரையுள்ளிட்ட மறவர்பலர் மாண்டு வீழ்ந்தனர். அச்சுவகண்டன் மனங்கொதித்துத் திவிட்டனொடு போர்புரிந்தான். இறுதியில் திவிட்டன் சக்கரப்படையால் அச்சுவகண்டன் கொல்லப்பட்டான். அவன் மாண்ட பின்னர் அவன் தேவியர் போர்க்களம் புகுந்தனர். கோப்பெருந்தேவி அவன் உடலின் மேல் வீழ்ந்து உயிர்நீத்தனள். ஏனையோர் பெரிதும் அழுது மாழ்கித் தாபத நிலையை எய்தினர்.

இவ்வாறு போரின்கண் வாகைசூடிய திவிட்டனுக்குத் திருமுடி சூட்டுவிழா நிகழ்ந்தது. அப்பொழுது சக்கர முதலிய ஐம்பெரும் படைகளும் சங்கநிதி முதலிய நிதிகளும் அவனை வந்தெய்தின. பின்னர்த் திவிட்டன் கோடிக்குன்றம் என்னும் பெரிய மலையொன்றனைக் கையால் அகழ்ந்து ஏந்தி நின்றான். மாந்தர் இவன் வாசுதேவனே என்று வணங்கினர். சுயம்பிரபைக்கும் கோப்பெருந்தேவிப்பட்டம் வழங்கப்பட்டது.

பின்னர்ச் சின்னாளில் சுயம்பிரபைக்கு விசயன் என்று ஒரு மகன் தோன்றினான். அவன் வளர்மதிபோல் நன்கு வளர்ந்து வருவானாயினன். மீண்டும் சுயம்பிரபை கருக்கொண்டு ஒரு பெண் மகவினை ஈன்றாள். அம்மகவிற்குச் சோதிமாலை என்று பெயர் சூட்டினர். அவள்தானும் திருமகளும் கலைமகளும் போல அழகினும் அறிவினும் சிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மணப்பருவ மெய்தினள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 12:41:16(இந்திய நேரம்)