Primary tabs
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அருக்ககீர்த்தி தன் மகளாகிய சுதாரைக்கும் சுயம்வரம் நாட்டினான். அச்சுயம்வர மண்டபத்தின்கண் அரசர் பலரும் வந்து குழுமினர். அச்சுயம்வரத்தின்கண் சுதாரை திவிட்டன் மகனாகிய விசயனுக்கே மாலை சூட்டினள். இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்னர்ப் போதன நகரத்தின்கண் திவிட்ட மன்னன் சக்கரவர்த்தியாகவும் அவன் மகன் விசயன் இளவரசனாகவும் இருந்து உலகினை இனிது ஆட்சி செய்வாராயினர்.
பயாபதி வேந்தன் இவ்வாறு பெருஞ்சிறப்பெய்திய மக்களொடும் பெயரர்களொடும் அளவளாவிப் பேரின்ப மெய்தி வாழ்ந்து வருங்காலத்தே அவன் நெஞ்சத்தின்கண் சில நினைவுகள் முகிழ்த்தன. அவையாவன:-
இத்தகைய சிறந்த வாழ்க்கையை யாம் எய்துதற்குக் காரணம் முற்செய்த தவமே யாகும். அங்ஙனமிருப்பவும் யாம் அத்தவத்தினை மறந்து நிலையற்ற இவ்வாழ்வில் உழலுதல் பெரும் பேதைமையே யாகும். யாம் இன்னுந் தவம் செய்து அழியாத வீட்டின்பத்தையும் பெறக்கூடுமல்லவா? இவ்வுலகம் தரும் இன்பம் நிலையில்லாதது ஆகும் என்பது நன்கறிந்த தொன்றாம். ஆதலால் இவ்வுடல் நலத்தோடிருக்கும் பொழுதே இவ்வாழ்வினைத் துறந்து அழியாத இன்பத்தினைத் தரும் தவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பனவாம்.