Primary tabs
இக்கருத்தினைப் பயாபதி மன்னன் தன் அமைச்சரோடாராய்ந்தனன். அவர்களும் அக்கருத்தினைப் பெரிதும் பாராட்டினர். பின்னர்ப் பயாபதி மன்னன் அருகக்கடவுளுக்குத் திருவிழா நிகழ்வித்தனன். அத்திருவிழாவின் கண் முற்றத் துறந்து தியானத்தில் அழுந்தியிருந்த முனிவர் ஒருவரைக் கண்டனன். அம்முனிவர் தியானம் கலைந்து எழுந்துணையும் கைகட்டி நின்றனன். அவர் கண் விழித்த பின்னர் அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிச் சிறந்த அறவுரைகளை அவர்பாற் கேட்டு மகிழ்ந்தனன்.
இவ்வாறு அறவுரை கேட்ட பயாபதி மன்னன் பின்பு தன் மக்களை அழைத்து "மக்காள்! அருளிலார்க்கு அவ்வுலகமில்லை. கல்வி இலாதாற்கு நுண்ணறிவில்லை. பொருட்செல்வம் நிலையாக நிற்கும் இயல்புடையதன்று. ஆதலால் நீங்கள் பொய்யாகிய அப்பொருள்களை நிலையுடையனவாகக் கருதவேண்டா. ஆகூழாற் பெற்ற இப்பொருளின் துணைக்கொண்டு நல்லறங்கள் பலவற்றையும் செய்மின்கள். நுமக்கும் அகவை முதிர்ந்தவுடன் இந்நிலச்சுமையை நும்மக்கள்பால் இறக்கிவிட்டு நீங்களும் உயிர்க்கு உறுதி பயக்கும் நற்றவத்தினை மேற்கொள்ளக் கடவீர்!"
'அன்புடையீர்! இவ்வுலகவின்பத்தை யான் விரும்புகிலேன். இற்றைநாள் தொடங்கி நும்மைப் பிரிந்து தவத்தினை மேற்கொள்வேன். எனக்கு விடை தருமின் என் பிரிவிற்கு வருந்தாதிருமின்' என்று கூறினன்.
தந்தையின் கருத்தறிந்த மைந்தரும் பெரிதுங் கவன்று ஒருவாறு அமைதி எய்தினர். அரசனும் ஏதிலான்போல அவரைத் துவர நீத்துத் தவத்தை மேற்கொண்டு சென்றான். பயாபதியின் தேவிமாரும் தவக்கோலம் பூண்டு அரசனைத் தொடர்ந்தனர். பயாபதி மன்னன் அமைச்சரும் யாமும் எம்மரசனைப் போலவே இனிச் செல்லுந் தேயத்திற்கு உறுதுணை தேடுவோம் என்று துணிந்து அரசனைத் தொடர்ந்தனர்.
இவ்வாறு தவநெறியிற் சென்ற மன்னன் முதலியோர் ஐம்பொறிகளையும் அடக்கி உட்பகை களைந்து நாளடைவில் தவமுதிர்ச்சி பெற்று வரம்பிலின்பம் என்னும் பெருவாழ்வை எய்தினர்.
திவிட்டனோ தன் தமையனான விசயனோடே இனிதிருந்து உலகினைத் தன் ஒரு குடை நீழலிற்கொண்டு மன்னுயிர் மகிழுமாறு அருளாட்சி நடத்தி அருகக்கடவுளுடைய திருவடிகளை நெஞ்சத்திருத்தி நெடுங்காலம் இனிது வாழ்ந்திருந்தான் என்பதாம்.