அணீயாரூர் மணிப்புற்று - 3294. திருவாரூரில் திருலமூட்டானத்துள் புற்று வடிவாகிய 
 திருமேனியினுள் இறைவர்எழுந்தருளி விளங்கும் இடம்.
  
 
 
 அநிந்திதையார் - 3360. கயிலையில் உமையம்மையாரின் சேடியர் இருவருள் ஒருவர்; 
 ஆளுடைய நம்பிகளாகிய ஆலாலசுந்தரரின் பொருட்டு இவ்வுலகில் வந்து அவதரித்துச், சங்கிலியார் 
 என்ற திருநாமத்துடன் வளர்ந்து, திருவொற்றியூரில் அவரை மணந்து கொண்டவர்.
  
 
 
 அவிமுத்தம் - 3567. ஸ்ரீகாசி.
  
 
 
 ஆலக்கோயில் - 3328. திருக்கச்சூரில் இறைவரது கோயிலின் பெயர்.
  
 
 
 உத்தராபதியரர் - 3705. சிறுத்தொண்டரது அன்பு நுகர்ந்து, அவருக்கு அருளும் 
 பொருட்டு வயிரவத் திருவேடம் தாங்கி வந்த இறைவர்.
  
 
 
 உடைய அரசு - 3304. திருநாவுக்கரசு நாயனார்; சைவசமய பரமாசாரியர்கள் நால்வருள் 
 ஒருவர்.
  
 
 
 ஏயர்கோக்குடி - 3159. ஏயர்கோன் கலிக்காம நாயனார்அவதரித்த குடி.
  
 
 
 ஓணகாந்தன்றளி - 3345. காஞ்சிபுரத்தில் தேவாரப் பாடல் பெற்ற தனிக்கோயில். 
 ஓணன் காந்தன் என்ற இருவர்பூசித்த இரண்டு தனிக்கோயில்களுடையது. தொண்டை நாட்டு 3-வது 
 பதி.
  
 
 
 கச்சி அனேகதங்காபதம் - 3346. காஞ்சிபுரத்தில் தேவாரப் பாடல் பெற்ற தனிக்கோயில்.விநாயகப் 
 பெருமான் பூசித்த பதி. (அனேகதம் - யானை) தொண்டை நாட்டு 4-வது பதி.
  
 
 
 கணபதீச்சுரம் - 3700. திருச்செங்காட்டங் குடியில் இறைவரது திருக்கோயிலின் பெயர். 
 கணபதி பூசித்தது.
  
 
 
 கண்ணப்பர் - 3350. (63) நாயன்மார்களுள் ஒருவர்.
  
 
 
 கம்பையாறு - 3242. காஞ்சிபுரத்தில் உள்ள ஆறு. இதன் கரையில் அம்மையார்தவஞ் செய்து சிவபூசை செய்தனர்.
  
 
 
 குண்டையூர்கிழவர் - (கிழார்) 3164. ஆளுடைய நம்பிகளின் தொண்டனாராகிய 
 வேளாளர். 
  
 
 
 கொகுடிக் கோயில் - 3271. திருக்கருப்பறியலூரின் கோயிலின் பெயர்; 
 கோயிலின் அமைப்புப் பற்றிப் போந்த பெயர்என்பர். கொகுடி ஒருவகை முல்லை விசேடம்.
  
 
 
 கோட்புலியார் - 3185. ஆளுடைய நம்பிகளின் தொண்டராகிய வேளாளர். திருநாட்டியத்தான் 
 குடியில் வாழ்ந்தவர். வனப்பகையார் சிங்கடியார் என்ற இரண்டு அம்மையரைப் பெற்றெடுத்த 
 தந்தையார். அரசர்சேனாதிபதியார். 
  
 
 
 சங்கிலியார் - 3380. ஆளுடைய நம்பிகளின் தேவிமா ரிருவருள் இரண்டாவதவர்.