Primary tabs
சீறாச்செல்வர்
முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
நாமக்கல்
அணிந்துரை
மாநபி வரலாறு :
மானிலந் தனிலோர் மணிவிளக்கெனலாய்த் தோன்றியவர் நபிகள் நாயகம்
முகம்மது (ஸல்) அவர்கள். அரேபியாவில் திருமக்காவில் உயர் மதிப்புக் கொண்ட,
ஆனால் ஏழ்மை நிலையிலிருந்த குடும்பத்தில் பிறந்தார். ஆறு திங்கள் கருவாக
இருந்தபோதே தந்தையை இழந்தார்; ஆறு வயதில் அன்னையை இழந்தார்; எடுத்து
வளர்த்த பாட்டனாரை எட்டு வயதில் இழந்தார்; பெரிய தந்தையால்
வளர்க்கப்பட்டார். உண்மையாலும், உழைப்பாலும், சிறிய வயதிலேயே
நம்பிக்கைக்குரியவர் (அல் அமீன்) எனும் பாராட்டைப் பெற்றார். அன்னை கதீஜா
நாச்சியாரின் பொருள்களை நேர்மையாகவும், திறமையாகவும் பெரும் ஆதாயத்துடன்
விற்பனை செய்து, அவருடைய அன்புக்கும், மதிப்புக்கும் உரியவராகி அவரையே
மணந்தார். ஓயாத இறை சிந்தனையால் உள்ளம் பக்குவப்பட்டு நாற்பதாம் வயதில்
நபிப்பட்டம் பெற்றார்; திருக்குர்ஆன் இறையுரைகள் அவர் வாயிலாக இறங்கலாயின;
அறிந்த உண்மைகளை அவர் எடுத்துச் சொன்னபோது இருள் நெறியினரால் பல
இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். வஞ்சகன், பொய்யன், புரட்டன், எனப்
பழித்துரைக்கப்பட்டார்; கழுத்தில் துணியை இட்டு முறுக்கித் துன்புறுத்தப்பட்டார்;
கல்லால் அடிக்கப்பட்டார்; ஊர் விலக்கம் செய்யப்பட்டுக் குடும்பத்தவரோடு
பலநாள்கள் பட்டினிக்கு ஆளாக்கப்பட்டார்.
சொந்த ஊரினர் இத்தகைய கொடுமைகள் செய்த வேளையில் மதீன மக்களின்
ஆதரவைப் பெற்றார். மக்காவிலிருந்து தப்பி மதீனா சென்றார். மக்காவிலிருந்து
பெயர்ந்து வந்தவர்க்கும், மதீனாவிலேயே வாழ்ந்து வந்தவர்க்குமிடையே
உடன்பிறப்புறவை வளர்த்தார். இசுலாத்தைத் தீவிரமாகப் பரப்பும் முயற்சியிலே
ஈடுபட்டார். மதீனாவைச் சுற்றிலும் படைக் குழுக்களை அனுப்பிப் பகைவர்கள்
நடமாட்டத்தை வேவு பார்த்தார். மதீனாவிலும் சுற்றுப்புறங்களிலுமிருந்த பிற
இனத்தவர்களுடன் அமைதி உடன்படிக்கை செய்து எதிர்ப்பைக் குறைத்தார்.
எதிர்த்தவர்களைப் போரிட்டு அடக்கினார். மக்கா மக்களுடன் பதுறு, உகுது, அகழ்
என முப்பெரும் போர்களை நடத்தி அவற்றில் வெற்றி கண்டார். இறுதியாக
எதிர்ப்பெதுவுமின்றியே மக்காவைக் கைப்பற்றினார்